TNPSC Thervupettagam

வாசிப்பை அதிகரிக்க 5 வழிகள்

November 1 , 2023 389 days 253 0
  • வெளிநாடுகள் / வெளிமாநிலங்களைச் சார்ந்த பேராசிரியர்களையோ, ஆசிரியர்களையோ சந்திக்கும்போது அவசியம் நான் விசாரிக்கும் விஷயங்களில் ஒன்று, ‘வாசிப்புப் பழக்கம் அங்கே எப்படி இருக்கிறது?
  • சமூக வலைதளங்களின் தாக்கம் தாறுமாறாக அதிகரித்த கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கும் புத்தக வாசிப்பு குறைகிறது; குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது என்ற கவலை இருந்தது. சமூகத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வாசிக்கச் செலவிடுகிறார்கள் என்பதைச் சொல்லும் ‘சராசரி வாசிப்பு நேரம்’ குறைவதை முன்னேறிய நாடுகள் மிகுந்த கவலையோடு அணுகின.
  • பிரிட்டனில், ‘தேசிய எழுத்தறிவு அறக்கட்டளை’ (என்.எல்.டி) சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய நாடு தழுவிய ஆய்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறாரிடம் வாசிக்கும் நேரம் குறைந்திருப்பதைச் சொன்னது. இது பிரிட்டனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும் என்று கல்வியாளர்கள் பேசினர்.
  • பொதுவாக மேலை நாடுகளில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகம் பெரும்பான்மை வீடுகளில் இருக்கும். பள்ளிகள், கல்லூரிகளிலும் நூலகங்கள் முக்கியமான இடம் வகிக்கும். ஒரு குழந்தை பள்ளியில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே புத்தக வாசிப்பை வீடுகளில் அறிமுகப்படுத்திவிடுவார்கள்; வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது போன்று புத்தகங்கள் வாசிப்பதும் ஓர் அன்றாடம் நிகழ்வாக இருக்கும். அதனால், பள்ளிகளில் நூலகத்தில் குழந்தைகளை உட்கார வைத்து வாசிக்கச் சொல்லிக்கொடுப்பது போன்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவது இல்லை.
  • பிரிட்டன் கல்வியாளர்கள் இனி பள்ளிக்கூடங்கள் அப்படி இருக்க முடியாது என்று சொன்னார்கள். 2010 முதலாக பிரிட்டனில் 230 பொது நூலகங்கள் மூடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், பள்ளிக்கூடங்களில் நூலகத்தை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்கா விட்டால் சூழல் மாற்றத்தை உண்டாக்க முடியாது என்றும் கூறினார்கள். இப்போது பிரிட்டன் பள்ளிக்கூடங்கள் தங்கள் நூலகத்தை விரிவுபடுத்தி, ஆசிரியர்களோடு பிள்ளைகள் சேர்ந்து அமர்ந்து வாசித்து, விவாதிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுக்கின்றன.
  • இது நல்ல தாக்கத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. 2021-22 கல்வியாண்டில் பிரிட்டன் மாணவர்கள் 27,265,657 புத்தகங்களை வாசித்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 24% அதிகம் என்றும் தெரிவிக்கிறது பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’.
  • பிரிட்டன் என்று இல்லை; அமெரிக்கா தொடங்கி ஆஃப்ரிக்கா வரை நூலகங்களைக் கல்வி நிறுவனங்கள் அணுகும் பார்வை இன்று மேலும் செழுமையடைகிறது. நம் கையில் இருக்கும் செல்பேசி ஒரு 24 மணி நேரத் திரையரங்கம் என்றாகிவிட்ட நிலையில், இடையறாது அது உருவாக்கும் கவனச் சிதறலிலிருந்து வாசிப்புக்கான நேரத்தைத் திட்டவட்டமாக உருவாக்கிக்கொள்ள பெரியவர்களுக்கே ஒரு பெரிய பயிற்சி இன்று தேவைப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அன்றாடம் 100-500 பக்கங்களுக்குக் குறையாமல் வாசித்துக்கொண்டிருந்த பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் இன்று வாரத்துக்கு 200 பக்கங்கள் வாசிப்பதே சவாலாக இருக்கிறது என்று புலம்புவதை சகஜமாகக் கேட்க முடிகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கு இதுகுறித்த ஆசிரியர்களின் வழிகாட்டலும், அரவணைப்பும் முக்கியம் என்பதைப் பல சமூகங்களும் உணர்கின்றன.
  • இந்தியச் சமூகம் இந்த விஷயத்தில் மிகுந்த பிற்போக்கான நிலையிலேயே இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான யுபிஎஸ்ஸி தேர்வுக்கு மாணவர்களைத் தயார் ஆக்கும் பயிற்சி மையங்கள் சிலவற்றோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. “பத்தாண்டுகளுக்கு முன்பு பயிற்சியில் சேர வரும் ஒரு மாணவர் அன்றாடம் நான்கு நாளிதழ், பத்துக்கும் மேற்பட்ட வார – மாத இதழ்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பார். இப்போது வரும் பெரும்பாலானவர்களுக்குப் பயிற்சியில் சேர்ந்த பிறகு நாங்கள்தான் பத்திரிகைகள் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டியிருக்கிறது” என்பது நான் அங்கே அடிக்கடி கேட்கும் வேதனைக் குரல்.
  • நம்முடைய பெரும்பான்மை வீடுகளில் நூலகம் என்ற ஒன்றே கிடையாது. பத்திரிகைகளை வாங்குவோர் எண்ணிக்கை ஏற்கெனவே குறைவு என்பது போக நாளாக நாளாகச் சரிகிறது. பல பள்ளிகளில் நூலகம் கிடையாது; அப்படியே நூலகம் என்று ஓர் அறை ஒதுக்கப்பட்டாலும், முழுநேர நூலகரைக் கொண்ட, நூலகத்துக்கு என்று வகுப்பை ஒதுக்கும் பள்ளிகள் வெகு சொற்பம். இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். ஏனென்றால், ஒவ்வொரு துறையிலும் திறனற்றவர்களின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே இருப்பதை நாம் காண்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், இங்கே உயர்கல்வியை முடிப்பவர்கள் எண்ணிக்கைக்கும், உயர்கல்வி முடித்த ஒருவர் பெற்றிருக்க வேண்டிய திறன்களுக்கும் இடையிலான இடைவெளி மிக மோசமாக விரிந்திருப்பதைக் காண்கிறோம். ஆராய்ச்சித் துறையில் மிகுந்த சங்கடத்துக்கு உரிய இடத்தில் நாம் இருக்கிறோம். இதற்கெல்லாம் அடிப்படையான காரணங்களில் ஒன்று, வாசிப்பின் வீழ்ச்சி; ஏனென்றால், எந்தத் துறையில் ஈடுபட்டிருப்பவரும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதற்கான முக்கிய வழிமுறை வாசிப்பு.
  • மக்களுக்கு வாசிப்பின் மீது மரியாதை இல்லை என்று சொல்ல மாட்டேன். உண்மையில் இந்த விஷயத்தில் அவர்கள் ஒரு வழிகாட்டலை, தூண்டலை எதிர்பார்க்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.  
  • நான் பங்கேற்கும் கூட்டங்களில் வாசகர்களும், மாணவர்களும் அதிகம் கேட்கும் கேள்விகளில் ஒன்று, வாசிப்பை அதிகரிக்க வழி என்ன? தனிநபர்களுக்கு நான் ஐந்து எளிய வழிமுறைகளைச் சொல்வேன்.
  • வாசிப்பதற்கு என்று ஒரு தனித்த இடத்தையும் நேரத்தையும் உருவாக்கிக்கொள்ளுதல்; எவ்வளவு சிறிய இடமாகவும் இருக்கலாம்; எந்த நேரமாகவும் இருக்கலாம்.
  • அன்றாடம் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடல்; இரவு 10 மணிக்குப் படுக்கும் முன் என் படிப்பறையில் செல்பேசி உள்பட எல்லா விஷயங்களிலிருந்தும் விடுபட்டு வாசிப்பேன் என்பது போன்று முடிவெடுத்தல்.
  • சிறியதாகத் திட்டமிடல்; ஆரம்பத்தில் 20 நிமிஷங்கள்கூட போதும்; நான்கு பக்கங்களாகக்கூட அது இருக்கலாம்; ஆனால், நன்கு புரியும் வகையில் வாசித்தல்.
  • வாசிப்புச் சூழலை உருவாக்கிக்கொள்ளல்; நம்முடைய சுற்றத்தினரிடம் முந்தைய நாள் வாசித்ததைப் பகிர்தல் – வாசிப்பை மேம்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்றல் – அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்று வருதல்.
  • எடுத்த முடிவுகளில் சறுக்கிடாமல் உறுதிபட நின்று, ஒவ்வொரு மாதமும் வாசிப்பு நேரத்தையும், பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தல்.
  • இன்றைக்குத் தனிநபர்களைக் கடந்து ஒட்டுமொத்த அமைப்பாக நாம் மாற்றத்துக்குச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அது நம்முடைய கல்வி நிறுவனங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நூலகங்கள் – வாசிப்பு தொடர்பான தங்களுடைய பார்வையை ஒரு பாய்ச்சல் இங்கே நிகழ வேண்டும். பள்ளிகளில் ஆசிரியருக்கு இணையான இடத்திலும் கல்லூரிகளில் பேராசிரியருக்கு இணையான இடத்திலும் நூலகர்களை அமர்த்த வேண்டும்; நூலக வகுப்புக்கு என்று கட்டாயம் ஒரு தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து வீட்டில் கட்டாயம் பத்திரிகைகள் வாங்கும்படியும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அன்றாடம் குடும்பத்தோடு வாசிக்க ஒதுக்கும்படியும் வலியுறுத்த வேண்டும். சினிமா போன்று புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் பற்றிப் பேசும் சூழல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  • சர்வதேச அளவிலான சிறந்த பல்கலைக்கழங்களின் தரவரிசைப் பட்டியலில் எப்போதும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதல் வரிசையில் இருப்பதை நாம் அறிவோம். நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவன நூலகக் கட்டமைப்பை ஹார்வர்டு கொண்டிருக்கிறது; ஹார்வர்டின் பெருமைகளில் ஒன்று, அதன் 28 நூலகங்கள்; நூலக அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற அதன் 700 நூலகர்கள்; 2 கோடி புத்தகங்கள் உள்பட அங்குள்ள பல கோடி ஆவணங்கள்.
  • உன்னதங்களை உருவாக்குவதற்கான அடித்தளம் அவற்றைப் பற்றிய கற்பனையிலும்  சிந்தனையிலுமே உருப்பெறுகிறது!

நன்றி: அருஞ்சொல் (01 - 11– 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்