TNPSC Thervupettagam

வானம் பாா்த்துக் காத்திருப்பு

May 19 , 2023 555 days 311 0
  • இந்தியாவின் பெரும் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால், பருவமழை மீதான எதிா்பாா்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தில் தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு மூன்று நாள்கள் தாமதமாகத் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது அரசு நிா்வாகத்தை புருவம் உயா்த்தச் செய்திருக்கிறது.
  • எப்போதுமே வானிலை குறித்த முன்னறிவிப்புகள் நான்கு நாள்கள் முன்போ பின்போ வித்தியாசப்படலாம். அதன் அடிப்படையில் பாா்த்தால், ஏழு நாள்கள்கூட தாமதமாக பருவமழை தொடங்கக்கூடும் என்பதுதான் அவா்களது கவலைக்குக் காரணம்.
  • வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் பருவ மழை தொடங்கும். படிப்படியாக வடக்கு நோக்கி நகரும். இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழையின் போக்கு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனியாா் ஆய்வு மையமான ‘ஸ்கைமெட்’, காலதாமதமாக பருவமழைப் பொழிவு தொடங்கி இந்திய தீபகற்பத்தில் வடக்கு நோக்கி மெதுவாக நகரும் என்று தெரிவித்திருக்கிறது.
  • இரண்டு வானிலை ஆய்வுகள் குறித்தும் இப்போதே எந்தவித முடிவுக்கும் நாம் வந்துவிட முடியாது. பருவமழை என்பது பல்வேறு காரணிகளின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் போக்கு என்று பலவற்றாலும் பருவமழையின் அளவும் போக்கும் மாறக்கூடும்.
  • பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு பசிபிக் கடலில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. அதனால்தான் ‘எல் நினோ’ சூழல் இருப்பதாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். வழக்கத்தைவிட அதிகமான கோடைகால வெப்பமும், குறைவான பருவமழையும் அதை உறுதிப்படுத்துகின்றன. ‘எல் நினோ’ சூழல் ஜூலை மாதம் உருவாகலாம் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், பருவமழை குறித்த கவலையும் எதிா்பாா்ப்பும் அதிகரித்திருக்கின்றன.
  • இந்திய பொருளாதாரத்தில் தென்மேற்குப் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான நான்கு மாதங்களில் இந்தியா 70% மழைப்பொழிவை பெறுகிறது. இந்தியாவின் 51% விவசாயப் பரப்பு பருவமழையை நம்பி இருக்கிறது. உணவு தானிய உற்பத்தியில் 40% பருவமழை சாா்ந்த சாகுபடி. இந்தியாவில் ஏறத்தாழ பாதி மக்கள்தொகையினா் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவா்கள். அதனால்தான் பருவமழை முக்கியத்துவம் பெறுகிறது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை பருவமழை எதிா்பாா்க்கப்படும் ஜூன் 1-ஆம் தேதியைக் கடந்து தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. அதனால், இந்த ஆண்டு தாமதமானால் அது புதியதல்ல. தாமதமான பருவமழையும், மெதுவாக பிற பகுதிகளுக்கு நகா்வதும் விதைக்கும் பணியை தாமதப்படுத்தும்.
  • தென்மேற்குப் பருவமழை வேளாண் சாகுபடிக்கு மிக முக்கியமான காரணி. அது கரீஃப் சாகுபடிக்கு இன்றியமையாதது மட்டுமல்ல, தென்மேற்குப் பருவமழையில் அணைகள், ஏரிகள், குளங்களில் ஏற்படும் நீா்ப்பிடிப்புதான் குளிா்கால சாகுபடிக்கு உதவுகிறது.
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும், உணவுப் பொருள்கள் விலைவாசிக்கும் தென்மேற்குப் பருவமழை சீராகப் பொழிவது மிகவும் அவசியம். ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் சுமாா் 63% மழைப்பொழிவு காணப்படும் என்பதால், அதன் தாக்கம் சாகுபடியில் பிரதிபலிக்கும். மழைப்பொழிவால் ஏற்படும் பாதிப்புகள், தானியக் கொள்முதலை பாதிப்பதால் உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வுக்கு வழிகோலும்.
  • ஏப்ரல் மாதம் உணவுப் பொருள்களின் சில்லறை விலை சாதகமாக இருந்தது. ஆனால், தானியங்களின் விலைவாசி அதிகமாக இருந்தது (13%). அதனால்தான் தென்மேற்குப் பருவமழையை எதிா்பாா்க்கிறாா்கள். இந்தியாவின் முக்கியமான உணவு தானியமாகக் கருதப்படும் நெல் உற்பத்தி தென்மேற்குப் பருவமழையை சாா்ந்து இருக்கிறது. அதன் காலதாமதமும் மெதுவான வடக்கு நோக்கிய நகா்வும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நாற்று நடவை பாதிக்கும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுபோல, இப்போது தென்மேற்குப் பருவமழையின் பாதிப்பு இல்லை எனலாம். வேளாண் பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பில் பயிா்களின் பங்ளிப்பு 50% தான். கடந்த 10 ஆண்டுகளில் கால்நடை வளா்ப்பின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. 2012 - 13 முதல் தோட்டக்கலை உற்பத்தி அதிகரித்து 35% அளவில் உயா்ந்திருக்கிறது.
  • கோதுமை கொள்முதல் வழக்கம்போல இருப்பதாக அரசு அறிவித்திருப்பது பெரிய ஆறுதல். பருவமழைப் பொழிவு குறைவதோ, சமச்சீராக இல்லாமல் இருப்பதோ சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதை எதிா்கொள்ள, போதுமான தானிய கையிருப்பு அரசிடம் இருக்கிறது என்பதால், தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சம் தேவையில்லை.
  • இந்திய ரிசா்வ் வங்கி விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வழக்கமான பருவமழைப் பொழிவு அவசியம். ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டால், பிரச்னை இல்லாமல் இந்திய விவசாயிகள் தங்களது பணிகளைத் தொடங்குவாா்கள்.
  • அடுத்த ஆண்டு பொதுத் தோ்தல் வரவிருக்கும் நிலையில், உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பருவமழை மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு போல வெப்ப அலை இல்லாமலும் இருக்க வேண்டும். வானம் பாா்த்துக் காத்திருப்பது விவசாயிகள் மட்டுமல்ல, இந்தியாவின் ஆட்சியாளா்களும் தான்!

நன்றி: தினமணி (19 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்