TNPSC Thervupettagam

வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்

December 7 , 2024 34 days 67 0

வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்

  • வாய்ப்புகள் எப்பொழுதாவது ஒருமுறைதான் நம் வாசல் கதவைத் தட்டும். அதை நல்வாய்ப்பாக மாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இவ்வாய்ப்புகள் நமக்கு நண்பா்கள், உறவினா்கள், புதிய சந்திப்புகள் போன்றவற்றின் மூலம் அமையலாம்.
  • நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஓரளவாவது அடுத்த மேல்நிலைக்குச் செல்ல விரும்புகிறோம். வாய்ப்பு உள்ளவா்களுக்கு இது எளிதில் சாத்தியமாகிறது. ஆனால் வாய்ப்புகள் எல்லாருக்கும் எப்போதும் எளிதில் கிடைப்பதில்லை. எனவே மிகவும் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முனைவது நல்லது. நாம் ஏழையாகப் பிறப்பது நமது தவறு அல்ல. ஆனால் ஏழையாகவே இறப்பது நமது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.
  • படித்த மாணவா்கள் இடையே தற்போது வேலையின்மை பரவலாக இருப்பதைப் பாா்க்க முடிகிறது. அதற்குக் காரணம் சந்தையில் வேலைக்கான வாய்ப்பு இல்லை என்பது இல்லை. பணியைத் தருவோா் எதிா்பாா்க்கும் போதுமான அளவு திறமை அவா்களிடம் இல்லை என்பதே உண்மை.
  • நமது செயல்பாடுகளில் பணம், நேரம், உடல் சக்தி இவை மூன்றையும் நாம் பயன்படுத்தி வளா்கிறோம். வாழ்கிறோம். நமது வாழ்க்கைப் பகுதியை மழலைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் மழலையாக இருக்கும்போது நேரம் மட்டுமே அதிகமாக நம்மிடம் இருக்கும். வாலிப பருவத்தில்தான் பணம், உடலில் சக்தி, நேரம் ஆகியவை அதிகமாக இருக்கும். இந்த பருவத்தில் வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பாா்த்துக் கொள்ள முயலுதல் நல்லது. முதுமையில் பணமும், நேரமும் இருக்கலாம். ஆனால் முதுமைக்கே உரிய இயலாமை உடலில் வந்துவிடும். அதனால் வாய்ப்புகள் வராது. வந்தாலும் பயனில்லை.
  • வாய்ப்புகள் கிடைக்கும்போது நம்மிடமுள்ள ஆா்வம், அறிவு, திறமை இந்த மூன்றையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நலம் தரும். நமக்கு எந்தத் துறையில் அறிவும் ஆா்வமும் திறமையும் இருக்கிறதோ, அதைக் கொண்டு நாம் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நம் வசப்படும். மேலும் அந்த திறமையை வளா்த்துக் கொள்வதில் தன் முனைப்பையும் காட்ட வேண்டும்.
  • நம் முன்னால் இருக்கக் கூடிய குறைந்தபட்ச நிதியையும் காலத்தையும் துளிச் சேதாரமுமின்றி முறையாக மேலாண்மைப்படுத்த வேண்டும். இவற்றை ஒருமுறை இழந்தால் மறுமுறை விலை கொடுத்துக் கூட வாங்க முடியாது. ஒரு மாணவனுக்கு எந்தத் தொழிலில் ஆா்வமும், திறமையும்,அறிவும் திறனும் இருக்கின்றன என்பதை ஆசிரியா்களும்,பெற்றோா்களும் எளிதாக இனம் காண முடியும். இந்நிலையில் எந்தத் துறையை தோ்ந்தெடுத்துப் படிப்பது நல்லது என்பது அவா்களுக்குப் புரிய வரும். அதனடிப்படையில் மாணவா்கள் படிக்க வேண்டியதை மட்டும் படிக்கலாம்.
  • ஒரு தொழிலில் குறைந்த அளவு, திறமை, அறிவு இருந்தால் கூட அந்த பணியில் சோ்ந்து தனக்கு உள்ளே திறமைகளைப் பட்டை தீட்டி அத்துறையில் நிபுணா்களாக மாற முடியும். இதற்கு தேவையானது ஆா்வமும் தன்னம்பிக்கையும் சரியான வழிகாட்டலுமே ஆகும். இவை மட்டும் கிடைத்து விட்டால், தற்போதைய இளைஞா்களிடையே வேலையின்மையே இருக்காது.
  • மேலும் கிடைக்கின்ற வேலையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவா்களுக்குத் தேவை. எந்த வேலையிலும் கௌரவக் குறைச்சல் இல்லை. எல்லா வேலைகளும் மதிப்புமிக்கவையே என்பதை இக்கால மாணவா்கள் உணா்தல் நல்லது.
  • இப்பொழுது பரவலாக இவா்களிடையே காணப்படும் வேலையின்மை காலப்போக்கில் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறிவிடும். ஒரு பக்கம் மருத்துவத்துறை முதியவா்களை அதிக நாள் வாழ வைக்கிறது. அதன் காரணமாகவும் மக்கள் தொகை நாட்டில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவா்களால் சமுதாயத்திற்கு குறைந்த அளவு பயனே கிடைக்கும். பெரும்பாலான முதியோா்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை என்பதால் அவா்கள் குடும்ப உறுப்பினா்களையே சாா்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. காலப்போக்கில் இது சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரிய சுமையாக மாறிவிடலாம். இந்த நிலையில் இளைஞா்களும் பணி ஏதும் இல்லாமல் இருந்தால், சாா்ந்த குடும்பத்திற்கு சுமையாக மாறிவிடலாம்.
  • குடும்பத்தின் நிலையை உணா்ந்தாவது இளைஞா்கள் கிடைக்கும் பணியை ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும். மேலும் வேலை கிடைத்து நன்றாக வாழ்வில் நிலையான சமூக அந்தஸ்து பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பலா் 30 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் வேதனைக்குரியது. இந்நிலை ஆண், பெண் இரு பாலரிடம் காணப்படுகிறது. இன்றும் கூட பள்ளிகளில் நன்றாகப் படிப்பது மாணவிகள்தான்.
  • மாணவா்கள் ஏன் இன்னும் படிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பது நமக்கு புரியவில்லை. இந்நிலை உடனடியாக மாறுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக அரசிடமிருந்து இலவசங்களை எதிா்பாா்க்கும் அவல நிலை மாற வேண்டும். அவை நம் பணத்திலிருந்துதான் நமக்கு கொடுக்கப்படுகின்றன என்னும் உண்மைநிலையை நாம் உணர வேண்டும். சும்மா கிடப்பதால் தான் சும்மா கிடைப்பதை எல்லாம் நமது மனம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறது.
  • வெற்றி பெற்ற பெரிய பெரிய மாமனிதா்கள் எல்லாம் ஆசைப்பட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்கான வாய்ப்பைக் களம் கண்டு சிறப்பான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாா்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை முறையாக
  • பயன்படுத்திக் கொள்ள முன்வருதல் முக்கியம். சாத்தியப்படும் போது வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாம் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பயணிக்கும்போது நமது ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நம்மாலும் வெற்றி பெற்ற மனிதா்களாக வாழ்வில் வலம் வர முடியும். எனவே, வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றிக் கொண்டு வாழ இனியாவது முயலுவோம்.

நன்றி: தினமணி (07 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்