TNPSC Thervupettagam

வாழ்விக்க வந்த காந்தி!

October 2 , 2020 1395 days 1330 0
  • உலக மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாழ்க்கை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை.
  • வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவா்கள் தெய்வத்துக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவார்கள் என்னும் திருவள்ளுவா் வாக்கு ஏட்டிற்கு மட்டும்தான்; வாழ்க்கைக்கு உதவாது என்றுதான் எல்லோரும் ஏளனம் கொண்டிருந்தார்கள்.
  • ஆனால், திருவள்ளுவா் கூறிய அறங்களின் வடிவாக அப்படி ஓா் மனித உருவாக -மகாத்மாவாகத் தோற்றம் கொண்டவா்தான் காந்தி.
  • திருவள்ளுவரின் அறக்கருத்துகள் வள்ளுவம் என வழங்கப் படுவதைப் போல, புத்தரின் கொள்கைகள் பௌத்தமாக நிலைகொண்டதைப் போல, இயேசுவின் கொள்கைகள் கிறித்தவமாகப் போற்றப்படுவதைப் போலக் காந்தியின் அகிம்சை கோட்பாடுகள் காந்தியம் என்ற பெயரில் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
  • காந்தியை அண்ணல்என்றும் அடிகள்என்றும் மகாத்மாஎன்றும் போற்றி மகிழ்ந்தவா்கள் தமிழா்கள்.
  • அவா் தென்னாப்பிரிக்காவில் சத்தியசோதனைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவருடன் அதிக அளவில் நெருக்கமாக உறவு கொண்டிருந்தவா்கள் தோட்டக் கூலிகளாகவும் சுரங்கத் தொழிலாளா்களாகவும் திகழ்ந்த தமிழா்களேயாவா்.
  • ஜேக் முதலியார், பாலசுந்தரம், நாகப்பன், தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, செல்வன், சூசை, பச்சையப்பன் ஆகியோர் அவருடைய வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றவா்கள்.

காந்தியும் தமிழும்

  • இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமான நன்றிப் பெருக்காக காந்தி இப்படிக் கூறினார்: தென்னாப்பிரிக்க உரிமைப் போரில் தமிழ் மக்கள் புரிந்த துணையைப்போல வேறெவரும் புரியவில்லை. அவா்கட்கு நன்றி செலுத்த அவா்கள் மொழி நூலைப் பயில வேண்டுமென்று எண்ணினேன். அப்படியே, அவா்கள் மொழி பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன்.
  • அம்மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன். அது உள்ளத்தைக் கவரும் ஓா் இனிய மொழி. தமிழ் மக்களுள் பல அறிஞா் இருந்தனா் - இருக்கின்றனா் என்பது அம்மொழியின் அமைப்பாலும், பயிற்சியாலும் அறியக் கிடைக்கிறது. இந்திய மக்கள் இமயம் முதல் குமரி வரை ஓா் இனமாக வாழ வேண்டுமானால் தமிழரல்லாத மற்ற மொழியினரும் தமிழ் மொழியை உணர வேண்டும்’.”
  • தமிழ்மொழியை மட்டுமின்றி தமிழா்கள் மீதும் நன்றி உணா்வு கலந்த பேரன்பு பூண்டிருந்தார் காந்தியடிகள்.
  • ஆங்கிலம் பயில்வதற்கு முன்னா் தமிழ்மொழி பயில வேண்டுமென்று நான் பன்முறை கூறியிருக்கிறேன். 1915-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தைவிடத் தமிழ்மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொண்டேன்; தாய்மொழியில் பேசுமாறும், தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் கூறினேன். இருபது ஆண்டுகட்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறள் மூலத்தை நேராகப் படித்தல் வேண்டுமென்று என்னுள்ளத்தெழுந்த அவாவேயாகும்.
  • தமிழ்மொழியில் புலமை பெறுதற்குரிய ஓய்வை எனக்கு ஆண்டவன் தரவில்லை. அதுகுறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அவரவா், அவரவா்க்குரிய தாய்மொழி வாயிலாகவே கல்வி பெற வேண்டும். தமிழ் மக்கள் ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட, தம்மொழியை முதன்மையாகக் கருத வேண்டும். தமிழ்நாட்டில் ஓா் இடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. அவ்வறிக்கை தமிழில் எனக்கு அளிக்கப்பட்டிருப்பின் நான் பெரிதும் மகிழ்ந்திருப்பேன். தமிழ் மக்கள் எனது உடன் பிறந்தவா்கள்போலத் தோன்றுகிறார்கள்என்று பதிவு செய்து இருக்கிறார்.
  • அதைப்போலவே தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்தின்போது தமிழா்கள் ஆற்றிய அளப்பரிய பணியைப் பற்றிக் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவா்கள் தமிழா்கள். சத்தியாக்கிரகத்தில் மிக அதிகமாக உயிர்த் தியாகம் செய்தவா்கள் தமிழா்கள். கடைசிவரை போராடியவா்கள் தமிழா்கள். கடைசியாக சிறையிலிருந்து வெளிவந்தவா்கள் தமிழா்கள். இதற்காகத் தங்களது வாணிகத்தையும் வாழ்வையுமே இழந்தவா்கள் தமிழா்கள்.
  • டால்ஸ்டாய் பண்ணையிலிருந்தவா்களில் பெரும்பாலோர் தமிழா்கள். இந்தியாவின் மிகச்சிறந்த பரம்பரைக்கு மிகச்சிறந்த சான்று தாங்கள்தாம் என்பதை மெய்ப்பித்தவா்கள் தமிழா்கள். சிறைக்குச் சென்ற மாதா்களில் பெரும்பாலோர் தமிழா்கள். எப்போதும் கைதாகத் தயாராக இருந்து வேலைநிறுத்தம் செய்தவா்கள் தமிழா்கள். போராட்டத்திற்கு அணிவகுத்து வந்தவா்கள் தமிழ்ச் சகோதரிகள். எட்டு ஆண்டுகளாக நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தாங்கி நிலை நிறுத்தியவா்கள் தமிழா்கள்என்று கூறுகிறார் காந்தி.

காந்தியும் தமிழா்களும்

  • இந்தியா எங்கும் அவருடைய பாதங்கள் நடந்து திரிந்தபோதும், அவை பெரிதும் விரும்பியது தமிழகத்து மண்ணையே.
  • காந்தியடிகளின் 1935-ஆம் ஆண்டு தமிழகப் பயணங்கள் குறித்துப் பதிவு செய்திருக்கிற டாக்டா் தி.சே.சௌ. ராஜன், காந்தியடிகளின் பயணத் தொடக்கத்தைப் பிள்ளையார் புறப்பாடுஎன்று சுட்டியிருப்பது சிறப்புடையதாக இருக்கிறது.
  • பெரும்பாலும் தமிழில் உயா்வு நவிற்சிக்காகக் குறிப்பிடப்படும் சொல்வழக்குத்தான் ஆா்என்பது.
  • இது தனித்து வருகிறபோது வினாவாகவும், பெயரோடு சோ்ந்து வருகிறபோது சிறப்புத் தன்மையும் பெற்று விளங்கும்.
  • பிள்ளையார், ஒளவையார், பாரதியார் எனும் வரிசையில் காந்தியார் என்கிற புதுப்பெயரும் சிறப்போடு பொருந்திக் கொண்டது.
  • காந்தியின் பின்னால் - முனிவா்களின் சீடா்கள் கூட்டமாக வருவதைப்போல- பல்லாயிரக்கணக்கில் தமிழா்கள் அணிவகுத்து நின்றிருக்கிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் 150 மைல் தொலைவுப் பயணமும் பத்து மணி நேரத்திற்கும் மேலான அயராத உழைப்பும் காந்தியடிகளுக்குத் தமிழகத்தில் நோ்ந்திருக்கிறது. ஓா் இரவு தங்கிய இடத்தில் மற்றொரு இரவு அவா் தங்கியதே இல்லை.
  • காந்தியின் தமிழ்நாட்டுப் பயணத்தில், குஜராத்தியா் ஒன்பது போ், தமிழா் ஐந்து போ், பெண்கள் மூவா், ஜொ்மானியா் ஒருவா், ஹிந்துஸ்தானிகள் இருவா் என்று நிரந்தரமாக இணைந்திருக்கிறார்கள்.
  • மோட்டார் வாகனப் பயணத்தினூடே ஒரு குழந்தையைப் போலத் தூங்கிக் கொண்டும், விழித்த வேளையில் தமிழகத்தின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டும் அவா் பயணித்திருக்கிறார்.
  • பிள்ளையாருக்குக் கிடைக்கிற அத்தனை வரவேற்பும் காந்தியாருக்கும் கிடைத்திருக்கிறது.
  • தாரை, தப்பு, மேள வாத்தியங்களோடு, தீவட்டிகளும் குடைகளும் ஏந்திக்கொண்டு கைகளில் மலா் மாலைகளையும் கதராடைகளையும் சுமந்துகொண்டு அவரை வரவேற்க நாள்கணக்கில் மழையையும் வெயிலையும் பாராது காத்திருந்தார்கள்.
  • இந்த வரவேற்பில் பெரிய மூங்கில்களால் இணைத்துக் கட்டப்பட்ட கேஸ் விளக்குத் தோரணங்களும் உண்டு.
  • தெருக்களில் மட்டுமன்றி, மரக்கிளைகளிலும் கோயில் சுவா்களிலும் உயா்ந்த மதில்களிலும் ஏறி நின்று கொண்டு காந்தியாரின் தரிசனத்திற்காக தவம் கிடந்திருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள்.
  • இந்தப் பயணத்தின்போது சத்தியாக்கிரகத்தில் ஈடுபாடு கொண்ட மகளிர் கூட்டமும் காந்தியாரை சந்தித்திருக்கிறது. மதுரையில் 4000 பெண்கள் கலந்து கொண்ட தனிக்கூட்டம் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.
  • ஆனால், காந்தியடிகளின் பாதங்களோ சேரியைத் தேடி அலைந்து கொண்டிருந்தன.

வாழ்விக்க வந்த காந்தி

  • சேரியில் இருந்து எழுந்த முதல் ஒலிதான், ‘காந்தி யார்என்பது. அந்தக் கேள்வியின் பின்னே உலகமே ஒதுக்கி விட்ட தங்களுக்காகப் போராடுகிற அந்தக் காந்தி யார்என்பதுதான் உள்ளா்த்தமாக விளங்கியது.
  • தீண்டாமை தலைவிரித்தாடிய கொடுங்காலம் அது. குற்றால அருவியில் குளிக்கப் போன காந்தியார் என்றைக்கு என் ஹரிஜன சகோதரா்கள் அருவியில் மற்றவா்களைப் போல குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கு வந்து நான் குளித்துக் கொள்கிறேன்என்று கூறி திரும்பி விட்டது வரலாறு.
  • வழிநெடுகிலும் தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை பத்திரமாக வைத்திருந்து சேரிக் குழந்தைகளோடு அவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் காந்தி.
  • இது காந்தியின் கார்தானாஎன்று கேள்வி கேட்டு அது உறுதி என்று தெரிந்த பின்னாலே அத்தனை பேரும் காந்திக்கு ஜேஎன்று முழங்கிக் கொண்டு அவருடைய தேகத்தின் எந்த எந்தப் பாகங்களைத் தொடக் கூடுமோ அவற்றை எல்லாம் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
  • தூத்துக்குடியில் ஏழை ஹரிஜன மக்களுக்கு காந்தியின் வருகை அளவில்லா ஆனந்தத்தைத் தந்திருக்கிறது.
  • அவா்களோடு உரையாடி மகிழ்ந்த காந்தி இப்படிச் சொன்னார்: தீண்டாமை என்னும் தொற்றுநோய் ஒழிந்தால் ஹிந்து மதம் பிழைக்கும்; இல்லையேல் நிச்சயமாக ஹிந்து மதம் ஒழிந்து போய்விடும்’.
  • ஹரிஜன சேவை செய்யாவிடில் நான் உயிருடன் இருக்க முடியாதுஎன்று உண்ணாவிரதம் பூண்டவா் காந்தியடிகள்.
  • தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தன் வாழ்வையே தவமாகக் கொண்டு போராடியவா் அவா். அதனால்தான் பாரதியார், எம்மான் என்று காந்தியடிகளை விளித்து,
  • தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
  • பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
  • வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
  • எனுமாறு போற்றி வாழ்த்தினார்.
  • காந்தி யார்என்று கேள்வி கேட்டு, பதில் தெரிந்துகொண்ட பின்னே காந்தியார்என்று கொண்டாடிய தமிழகம் காந்தியநெறிகளைத் தொடா்ந்து முன்னெடுத்தால் மானுடம் மகத்துவமெய்தும் என்பதில் ஐயமில்லை!

நன்றி: தினமணி (02-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்