TNPSC Thervupettagam

வாழ்வைச் சூறையாடும் இன்னொரு சூதாட்டம்

January 22 , 2025 15 days 93 0

வாழ்வைச் சூறையாடும் இன்னொரு சூதாட்டம்

  • பன்னெடுங்காலமாக மனிதர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சூதாட்டத்தின் வடிவங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கிரிக்கெட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நடக்கும் சூதாட்டமும், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றி யாருக்கு என்று உலகம் முழுவதும் நடக்கும் சூதாட்டமும் வெகு பிரசித்தம்.
  • நம் உயிர் போவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தால்கூட அந்த அவகாசத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடிச் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை அண்மைக்காலமாகப் பார்த்திருக்கலாம். மேற்கூறிய வடிவங்கள் மட்டுமே சூதாட்டம் என்று தவறாக நம்பிவிடக் கூடாது. பங்குச் சந்தையில் நடைபெறும் சூதாட்டத்தின் ஆபத்துகளையும் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது!

பங்குச் சந்தை உலகம்:

  • பங்குச் சந்தையை நிர்வகிக்கும் ஆணையமான செபி அமைப்பு, அண்மையில் ஒரு புள்ளி​விவரத்தை வெளியிட்டது. அதன்படி, 2021 முதல் 2024 வரை பங்குச் சந்தையின் ‘ஃபியூச்​சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ்’ (Futures and Options) பிரிவின் கீழ் வர்த்தகம் செய்து, பல லட்சக்​கணக்கான மக்கள் ஏறத்தாழ ரூ.1,81,000 கோடியை இழந்திருக்​கிறார்கள். இன்று நாட்டின் நவீன சூதாட்ட வடிவமாகப் பங்கு​வர்த்​தகத்தின் ‘எஃப் & ஓ’ பிரிவு உருவெடுத்​துள்ளது.
  • 1990-களுக்குப் பின்னரான தனியார்மய, தாராளமய​மாக்கல் பின்னணியில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பங்குச்​சந்தை வர்த்தகம் பல நூறு மடங்கு அதிகரித்​திருக்​கிறது. 1986இல் சென்செக்ஸ் என்னும் பங்கு வர்த்தகம் 100 புள்ளிகள் என்கிற கணக்கில் தொடங்​கப்​பட்டது. இன்று அது 80,000 என்கிற அளவில் பெருகி​யிருக்​கிறது. அதாவது, 1986ஆம் ஆண்டில் 100 ரூபாயை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்​தீர்கள் என்றால், இன்று அதன் மதிப்பு ரூ.80,000.
  • ஆனால், பங்குச் சந்தை லாபம் சாமானிய மனிதர்​களுக்கு எப்போதும் கிடைத்து​விடு​வ​தில்லை. சாமானிய மனிதர்கள் நீண்ட நாள்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பே இல்லை. பங்குச் சந்தையின் மிகப்​பெரும் கவர்ச்சியே அதன் ஏற்ற இறக்கங்​கள்​தான். உலகின் அனைத்து முக்கியமான அரசியல், பொருளாதார நிகழ்வு​களின் தொடர்ச்​சியாக நம்முடைய பங்குச் சந்தையும் கடும் ஏற்றமோ இறக்கமோ கண்டிருக்​கிறது. இந்த ஏற்ற இறக்கங்​களில்தான் சூறாவளியில் சிக்கிய துரும்​பு​களைப் போல சாதாரண மக்கள் அடித்துச் செல்லப்​படு​கிறார்கள்; தங்களின் ஒட்டுமொத்தச் சேமிப்பை இழந்து​விடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து​கொண்டே இருக்​கின்றன.

அப்படி​யானால் பங்குச் சந்தைகள் ஆபத்தானவையா?

  • ஒருகாலத்தில் வங்கி​களில் சேமிப்பு​களுக்குத் தரப்படும் வட்டி 15%க்கும் மேல். அதற்கும் மேலே வட்டி வேண்டும் என்று ஆசைப்பட்ட மக்கள், ‘50% வட்டி தருகிறோம், இரண்டு ஆண்டு​களில் அசலை இரட்டிப்​பாக்கித் தருவோம்’ என்றெல்லாம் விரிக்​கப்பட்ட வலைகளை நம்பி, முதலீடு செய்து தங்கள் சேமிப்பை இழந்ததைக் கடந்த தலைமுறை நன்கு அறியும். ஆனால் இப்போதோ வங்கி​களில் வட்டி விகிதம் 6% அல்லது 7% மட்டுமே. பணவீக்கம் அதையும் தாண்டிச் செல்லும்போது தங்கள் சேமிப்பு வருடாவருடம் கரைந்​து​போவதை மக்கள் தெரிந்தே வைத்திருக்​கிறார்கள்.
  • அரசின் கடும் சட்டங்​களினால் இப்போது யாரும் பணத்தை இரண்டு மடங்காக மாற்றித் தருகிறேன் என்று சொல்லிக் கடைவிரிப்​ப​தில்லை. நமது நாட்டின் சேமிப்பு விகிதம் கடந்த ஆண்டு​களில் 20%க்கும் மேல் இருந்தது. வங்கி​களில் போடும் பணத்துக்கு வட்டி அதிகம் கிடைப்​ப​தில்லை.
  • கடந்த பல ஆண்டுகளாக மென்பொருள் துறை தொடர் வளர்ச்​சியைச் சந்தித்து​வருவது நாம் அறிந்ததே. இளைஞர்கள் மட்டுமே மென்பொருள் துறையில் பெரும்​பாலும் சாதித்து வருவதும், பல்லா​யிரக்​கணக்கான இளைஞர்கள் மேலைநாடு​களில் நல்ல பொருளீட்​டிவரு​வதும் நாம் அறிந்ததே. அப்படி​யா​னால், இவர்களின் சேமிப்பு வங்கி​களுக்குச் செல்ல​வில்லை எனில், வேறு எங்குதான் செல்கிறது?

தவறான முடிவு:

  • இன்றைய இளம் தலைமுறை​யினர் தங்களுடைய பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்​றனர். பரஸ்பர நிதி நிறுவனங்​களில் நீண்ட காலத்​துக்கு முதலீடு செய்வதன் மூலம் குறைந்தது 12% வட்டியை அவர்கள் எதிர்​பார்க்​கிறார்கள். வங்கி​களில் தரும் சேமிப்பு வட்டி விகிதத்​தை​விட​வாவது அதிகம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்​பார்ப்​பதில் தவறில்லை. பல நேரம் அப்படிக் கிடைக்​கவும் செய்கிறது. ஆனால், தங்களின் பணம் விரைவில் பெருக வேண்டும் என்று கனா காணும் இளைஞர்​களால்தான் பிரச்சினை ஆரம்ப​மாகிறது.
  • மென்பொருள் துறையில் நுழைந்​தவுடன் திருமணம், வீடு, கார் போன்ற​வற்றுக்​காகப் பெரும் செலவினங்​களைச் செய்வதன் மூலம் மாதத் தவணைகளைச் செலுத்து​வ​திலேயே தங்கள் சம்பளத்தைப் பெரும்​பாலான இளைஞர்கள் இழக்கின்​றனர். விளைவு - பணத்துக்கான தேவை அவர்களுக்கு இன்னும் அதிகரிக்​கிறது. அதனால்தான் விரைந்து பணமீட்ட முயல்​கிறார்கள்; தவறான வழிகாட்​டிகளால் பங்குச்​சந்​தையின் சூதாட்ட வடிவமான ‘ஃபியூச்​சர்ஸ் & ஆப்ஷன்ஸ்’ தளத்தில் குதித்துக் கரைந்​து​போகிறார்கள்; சூதாடி, சூதாடித் தோற்கிறார்கள். இதில் ஈடுபட்​டிருக்கும் ஒவ்வொரு​வரும் சராசரி​யாகத் தலா ரூ.1.20 லட்சத்தை இழந்திருப்பதாக செபி கூறுகிறது.
  • பங்குச் சந்தையில் பரஸ்பர நிதி நிறுவனத்தின் வழியாகவோ, கடந்த பத்தாண்​டு​களில் நல்ல லாபம் தந்திருக்கும் பங்கு​களில் நீண்ட காலத்​துக்கு முதலீடு செய்வதன் மூலமாகவோ தங்களின் சேமிப்பைக் கூடுதலாக உயர்த்திக்​கொள்ள நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், பேராசை​யினால் உந்தப்​படும் பல லட்சம் இளைஞர்கள் ‘எஃப் & ஓ’ பிரிவில் வணிகம் செய்து தங்களின் சேமிப்பை இழப்ப​தோடு, தங்களின் வாழ்வா​தா​ரத்​தையும் இழந்து​விடு​கிறார்கள்.
  • பங்குச் சந்தையின் ‘எஃப் & ஓ’ பிரிவு பெருநிறு​வனங்​களுக்​கும், கோடிக்​கணக்கில் பங்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்​களி​லிருந்து பாதுகாப்பை வழங்கிடும் ஒரு காப்பீடு போன்றது. இது சாதாரண சேமிப்பை வைத்திருக்கும் பல லட்சம் சாமானியர்களுக்கானது அல்ல. நவீன சூதாட்ட வடிவமாக இருக்கிற பங்குச் சந்தையின் இந்தப் பிரிவை / இதுபோன்ற சூதாட்ட வடிவங்களுக்குப் பயன்படுத்த வகை செய்யும் பிரிவுகளை அரசு தடைசெய்ய வேண்டும்.

சூதாட்​டத்தின் தீமைகள்:

  • இன்று உலகப் பொருளா​தாரம் பன்னாட்டு நிறுவனங்​களின் கட்டுப்​பாட்​டின்கீழ் உள்ளது. தங்கள் நாடுகளில் அவை தொழில் தொடங்க, வியாபாரம் செய்யப் பல நாட்டு அரசுகள் போட்டி போடுகின்றன.
  • லாபம் ஒன்றையே நோக்க​மாகக் கொண்டிருக்கும் பெரு நிறுவனங்​களும், அந்நிய முதலீட்​டாளர்​களும் பெரும் நிதிகொண்டு உலகம் முழுவதும் பங்குச் சந்தை​களில் விளையாடு​கிறார்கள். பெரும் நிறுவன‌ங்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘எஃப் & ஓ’ துறையில் நாமும் நுழைந்து விளையாட முற்படு​வோ​மானால் நம் கையும் சூடுபடும்.
  • ரஷ்ய எழுத்​தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலை வாசித்திருக்​கிறீர்களா? தன் வாழ்வில் பல்லா​யிரக்​கணக்கான ரூபிள்களை அக்காலத்​திலேயே சூதாடித் தோற்றவர்தான் தஸ்தயேவ்ஸ்கி.
  • ஒரு சூதாடியின் மனநிலையை அந்நாவலில் மிக அருமை​யாகச் சித்திரித்​திருப்பார் அவர். சூதாட்​டத்தில் ஈடுபட்​டிருப்பவர் ஆடாமல், அசையாமல் அந்த ஆட்டத்​திலேயே இருப்​பா​ராம். பகலென்றும் இரவென்றும் பாராமல் தொடர்ந்து விளையாடு​வா​ராம். அவரின் உடல் ஒடுக்​கப்​படும்.
  • உள்ளமும் முறிந்​து​விடும். தொடக்​கத்தில் வெற்றி கிடைத்​தா​லும், பின்னர் அதை இழப்பார். இழந்ததை மீண்டும் அடைய வேண்டும் என்ற வெறித்தனமே எல்லாச் சூதாடிகளுக்​குள்ளும் குடி​கொள்​ளும். நம் சேமிப்பும் வாழ்வும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பங்குச் சந்தையின் நெளிவுகளை முழுமையாகத் தெரிந்துகொள்வதும்; குறுகிய காலத்தில் பணம் குவிக்கும் ஒரு சூதாட்டம் போல் அதை அணுகாமல் தவிர்ப்பதும் அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்