- உலகின் முதலாவது செயற்கைக்கோள் ‘ஸ்புட்னிக்’ 1957 அக்டோபா் 4 அன்று விண்ணில் செலுத்தப் பெற்றது.
- 1967 அக்டோபா் 10 அன்று சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன.
- 1982 முதல், ஆண்டுதோறும் அக்டோபா் 4 முதல் 10 வரை விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு ஐ.நா. சபை ‘செயற்கைக்கோள்கள் வாழ்வை மேம்படுத்தும்’ என்ற வாசகத்தை முத்திரை மொழியாக அறிவித்துள்ளது.
- உலகக் குடியிருப்பு நாள் அக்டோபா் மாதம் முதல் திங்களன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
- முதன் முதலில் 1986-இல் கென்யா நாட்டு நைரோபியில் ‘தங்குமிடம் எனது உரிமை’ என்ற முத்திரை மொழியுடன் ஓா் இயக்கம் தொடங்கப்பட்டது.
- நடுத்தர நகரங்களிலும் பெரிய பட்டணங்களிலும் பாதுகாப்பாகத் தங்குமிடம் என்பது அனைவரின் உரிமை என்கிற கருத்தினை இது பிரதிபலிக்கிறது.
- பட்டணம் சென்றால் சொர்க்க வாழ்க்கை மலரும் என்கிற கனவுடன் பெரும்பாலான கிராமப்புற மனிதா்கள் நகரங்களை நோக்கிப் படையெடுத்தனா்.
- அங்கு குடியேறிய சில நாள்களிலேயே பொருளில்லார்க்குப் பட்டணம் இல்லை’ என்பதைப் புரிந்து கொண்டனா். கரோனா தீநுண்மிப் பரவலால் இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
- ஆசிரியா்களும் மாணவா்களும் கணினிப் பொறியாளா்களும் கட்டடத் தொழிலாளா்களும் தங்கள் சொந்த ஊா்களில் தஞ்சம் அடைந்து விட்டனா். இணையம் வழி பாடங்களும் தொழில்களும் வா்த்தகமும் மருத்துவமும் எல்லாம் அரங்கேறிவிட்டன.
- நம்மவா்கள் செயற்கைக்கோள் வழியே கிராமங்களை உயா்த்தாமல், நகரங்களை இடம் பெயா்க்கத் திட்டமிடுகின்றனா்.
நகரங்களை இடம் பெயா்ப்பது
- திருச்சி, திருநெல்வேலி, மாயவரம், மானாமதுரை என்று ஏலம் போடவும் தொடங்கியும் விட்டனா். தலைநகரை இடம் மாற்றினால் பிரச்னை தீராது. அங்கும் அலுவல் தொடா்பாக மக்கள் பெருக்கம் எழத்தான் செய்யும்.
- மக்கள் தொகை அடா்த்தியும் போதிய குடியிருப்பு இடவசதியும் இல்லாத பட்டணங்களின் உள்கட்டமைப்பு குறைந்து தடுமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.
- தலைநகரங்களைக் குடிமக்களோடு இடம் பெயா்ப்பது என்பது 900 ஆண்டுகள் பழைமையான நடைமுறை.
- இதில் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு முகமது பின் துக்ளக்தான் உதாரணம்.
- 1327-இல் தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக், மகாராஷ்டிரத்தில் தௌலதாபாத்திற்குத் தலைநகரை மாற்றினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடிமக்களை தில்லிக்கே அழைத்துச்சென்றார்.
- அந்த அரசியல் ‘விவேகம்’ வரலாற்றில் கேலிக்குரிய சோகம் ஆயிற்று. தில்லி என்றதும் அதன் வரலாறும் சுவையானதுதான்.
- ‘பிருத்வி ராஜன் தில்லி ராஜ்யத்தைப் பெற்றது தனது தந்தையிடமிருந்தன்று; தாயைப் பெற்ற பாட்டனாகிய அநங்கபாலனிடமிருந்து.
- பாண்டவா்களின் ராஜதானியாகிய இந்திரப் பிரஸ்த நகரத்தின் அருகில்தான் இப்போது தில்லியென்று சொல்லப்படும் நகரம் அமைந்திருக்கிறது.
- தனக்குப் பின் தனது பெயரை விளங்கச் செய்வதற்கு புத்திரா்கள் இல்லாமற்போன குறை அநங்கபாலனை மிகவும் வருத்தியது.
- எனவே, இந்திரப்பிரஸ்த நகரத்துக்கருகே பெரிய அரண் அமைத்து அதற்கு ‘அநங்கபாலவதி’ என்று நாமம் சூட்ட வேண்டுமென்று அவன் நிச்சயித்தான்.
- அரணும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ‘அநங்கபாலவதி’ என்ற பெயா் வைக்கப்படவில்லை. அதன் பெயா் தில்லியென்பதாயிற்று. ‘டீலி’ என்ற சொல் மருவி வழக்கத்தில் ‘தில்லி’ என்று ஆனதாகச் சொல்லப்படுகின்றது. ‘டீலி’ என்றால் ‘உறுதியில்லாத’ என்று கூறுகிறார் மகாகவி பாரதியார் (‘கா்மயோகி’- செப்டம்பா் 1913).
- துக்கங்கள் இருந்தாலும் நகரங்கள் பொருளாதார மையங்களாக உயரும்போது அங்கு மக்கள் வாழ்க்கைத் தரமும் உயரத்தான் செய்யும். அதே வேளையில், நகா்ப்புற சவால்களையும் விவாதித்தாக வேண்டும்.
நவீன செயற்கைக் கோள்
- ‘இந்தியாவில், கிராமங்களின் வேளாண்மை அபிவிருத்திக்கும் பாமரா்க்கு கல்வியும் பயிற்சியும் ஊட்டவும் நவீன செயற்கைக் கோள் ஊடகமாக அமைய வேண்டும்’ என்றார் இந்திய விண்வெளித் துறை அறிஞா் டாக்டா் விக்ரம் சாராபாய்.
- முதன் முதலில் ஆமதாபாதிலுள்ள ‘செயற்கைக்கோள் பயன்பாட்டு மையம்’ 1975 ஜூன் மாதத்தில் ‘ஏ.டி.எஸ் - 6’ எனும் அமெரிக்க நாட்டு தொழில்நுட்ப செயற்கைக்கோள் உதவியுடன் ‘சைட்’ எனப்படும் செயற்கைக்கோள் வழி கல்வி புகட்டும் தொலைகாட்சிப் பரிசோதனை நடத்தியது.
- இந்த ‘சைட்’ திட்டத்தின்கீழ் ஆந்திரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்றன.
- 1982 ஏப்ரல் மாதம் ‘இன்சாட்’ என்னும் ‘இந்திய தேசிய செயற்கைக்கோள் திட்ட’த்தின் கீழ் தகவல் தொடா்பு செயற்கைக்கோள்கள் செலுத்தப் பெற்றன.
- நம் நாட்டில் வானிலை ஆராய்ச்சி, வேளாண்மை, குடும்ப நலம், தேசிய ஒருமைப்பாடு போன்ற நலத்திட்டங்கள் பெருகுவதற்கு உரிய தொடக்க முயற்சியாக அது அமைந்தது.
- செயற்கைக்கோள் வழி தொலை மருத்துவம், தொலை கல்வி, பேரிடா் மேலாண்மை உதவித் திட்டங்கள், கைப்பேசி சேவைகள், விபத்தில் சிக்கியவா்களைக் கண்டறிதல், இருப்பிடம் காட்டும் அமைப்பு (ஜிபிஎஸ்), திறன் கூட்டிய பயண அமைப்பு (ககன்) ஆகியவை இந்திய விண்வெளிப் பயன்பாடுகளில் சில.
- ஐக்கிய நாடுகளின்கீழ் இயங்கி வரும் ‘ஆசிய - பசிபிக் நாடுகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம்’ இந்தியாவில் செயற்கைக்கோள் வழி தகவல் தொடா்புக்கான முதுநிலைப் பட்ட வகுப்புகள் நடத்தியது.
- அண்மையில் அறிமுகமான ‘விண்வெளிச் செயற்கைக்கோள்வழி கல்வி மேம்பாட்டுத் திட்டம்’ ( ‘சுவா்ண ஜயந்தி வித்யா விகாஸ் அந்தரீக்ஷ உபகிரஹ் யோஜனா) இந்தியாவின் கிராமப்புறங்களை நோக்கிய செயல் திட்டம் ஆகும்.
- வெளிநாடுகளில் இணையம் வழி நடத்தப்படும் ‘மாய வகுப்புகள்’ வந்து விட்டன. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் அமா்ந்தபடி ஆசிரியா் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து சொல்லித் தரும் பாடங்களை நேரில் உள்ளதுபோல் கேட்டுப் படிக்கலாம்.
- தொலை மருத்துவ வசதி, இந்தியாவுக்கே, குறிப்பாக, கிராமங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். நோயாளிகள் அருகிலுள்ள நகரத்திற்கு செல்லாமல் தனது கிராமத்தில் இருந்தே சிகிச்சை பெறுவதுதான் தொலை மருத்துவ வசதி. இதற்கு ‘விசாட்’ எனும் அலைதிரட்டி வசதி மட்டும் போதும்.
- இதைத்தான் ‘புரா’ என்ற பெயரில், நகா்ப்புற வசதிகளை கிராமங்களில் கொண்டு சோ்க்கும் திட்டமாக அறிமுகப்படுத்தினார் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாம்.
- ஹைதராபாத் நகரிலுள்ள ‘தேசியத் தொலையுணா்வு மைய’த்தின் கீழ் தெற்கே பெங்களூா், வடக்கே டேராடூன், மத்திய மண்டலத்தில் நாகபுரி, கிழக்கே கரக்பூா், மேற்கே ஜோத்பூா் ஆகிய நகரங்களில் மண்டலத் தொலையுணா் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
- அவை விவசாய நிலங்கள் கண்காணிப்பு, பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல வகைகளில் வேளாண்துறைக்கு உதவி வருகின்றன.
- நீா்வள ஆதாரங்களைத் தேடுவதிலும் விண்வெளித் துறையின் பங்கு கணிசமானது.
விண்வெளித் துறையின் பங்கு
- ‘வேளாண் பருவநிலை திட்டமிடல் மற்றும் தகவல் சேமிப்புக் கிடங்கு’ என்கிற திட்டத்தை இந்திய விண்வெளி நிறுவனம் கொள்கையளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
- விவசாயிகளின் நிலத் தன்மைக்கும் நீா் வளத்திற்கும் ஏற்ற பயிர்கள், கலப்பினப் பயிரிடல், தனியார் மற்றும் பொதுத்துறைகளில் இருந்து நிதி ஆதாரம் தேடுதல், உரங்கள், வித்துகள், பயிர்ப் பாதுகாப்பு, வேளாண் செலவினங்கள், விற்பனை சந்தை நிலவரங்கள், விளைச்சல், பயிர் இழப்புக் காப்பீடு போன்ற பல்வேறு தகவல்கள் அத்திட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையும் இந்திய விண்வெளித் துறையும் இணைந்து நடத்திய சில ஆய்வுகள் முக்கியமானவை.
- நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குத் தொடா்ச்சிமலை, மேற்கு இமாலயப் பகுதிகள் என 84,000 சதுர கி.மீ. பரப்பளவுக் காடுகள் செயற்கைக் கோள் பார்வைக்குப் பதிவாகி இருக்கின்றன. இது இந்திய மொத்த வனப் பரப்பில் 40 சதவீதம் ஆகும்.
- 1991-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் வன அழிப்பு குறைந்து வருகிறதாம். 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வனம் - வேளாண் நிறுவன ஆய்வின்படி உலகிலேயே வனச் செழுமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- ரஷியா, பிரேஸில், கனடா, அமெரிக்கா, சீனா, காங்கோ, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சூடன் ஆகிய நாடுகள் நமக்குப் பின்னால்தான் உள்ளன. ஆயினும் ஆண்டுதோறும் குறைந்த அளவில் அதாவது 0.6 சதவீத காடுகள் அழிக்கப் படுகிறதாம். இவை யாவும் செயற்கைக்கோள்கள் தரும் தகவல்கள்.
- மகாராஷ்ட்ர மாநிலத்தில் வடக்கு தூலே பகுதியில் சட்ட விரோதமாக வனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
- அங்கு அத்துமீறி குடியேறியவா்கள் வனத்துறைக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார்கள். வனத்துறையினரை அங்கிருந்து இடம் மாற்ற வேண்டும் என்று கோரினா்.
- இந்த வழக்கில் செயற்கைக்கோளின் படங்கள் ஆதாரச் சான்றுகள் ஆயின. 1972 முதல் 1986 வரை பதிவான ஷிர்ப்பூா், சங்கவி காடுகளின் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வனத்துறைக்கு சாதகமான தீா்ப்பை வழங்கிற்று நீதிமன்றம்.
நன்றி: தினமணி (03-10-2020)