- பழைய வண்ணாரப்பேட்டையின் ராமானுஜம் தெருவில் நெரிசலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் கட்டிடம் அது. சட்டென எளிதில் பலர் கடந்துவிடக்கூடியது என்றாலும், பழக்கப்பட்ட வரலாற்று ஆர்வலரின் கண்ணுக்கு அந்த இந்தோ-சாரசனிக் பாணி சிவப்புக் கட்டிடம் பெரும் பொக்கிஷம்.
- ‘வாவிள்ள பிரெஸ்-1856’ என்ற வாயிற்கல்வெட்டு நம்மைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறது. வரிசையாகக் கண்ணாடி அலமாரிகள், அவற்றுக்குள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்கள். செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் பெரியவர் நம்மை அமரச்சொல்லிப் பணிக்கிறார். அல்லாடி ஸ்ரீனிவாசமூர்த்தி என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்.
- அல்லாடி நமக்குப் பரிச்சயமான பெயர்தான். முன்னாள் அட்வகேட் ஜெனரலும், விடுதலைப் போராட்ட வீரருமான அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயரின் தூரத்து உறவினர் இவர். அல்லாடி, வாவிள்ள என்ற இரு ஊர்களில் இருந்து சென்னையில் குடியேறிய இந்தக் குடும்பத்தினர் தமிழுக்குச் செய்த அளப்பரிய பணியை அவர் விவரிக்க, விழிகள் விரிய கேட்கலானோம்.
வாவிள்ளவின் கதை
- பண்டைய மதராஸ் மாகாணத்தின் நெல்லூர் பகுதியில் உள்ள சிறு கிராமம் வாவிள்ள. இங்கிருந்து தண்டையார்பேட்டை பகுதியில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்த்ருலு. 1854 முதலே அச்சுப்பணியில் ஈடுபட்டுவந்த ராமஸ்வாமி, 1856-ம் ஆண்டு தண்டையார்பேட்டையில் ‘வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்த்ருலு’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார். இரண்டரை கிரவுண்டு நிலப்பரப்பில் இந்தோ-சாரசனிக் பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அச்சகத்தில் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
- மூன்று அச்சு இயந்திரங்கள், 2 டைப் காஸ்டிங் இயந்திரங்கள், 10 கையால் அச்சு கோக்கும் (ஹேண்ட் கம்போசிங்) இயந்திரங்கள், பேப்பர் கட்டிங் மற்றும் போர்டு கட்டிங் இயந்திரங்கள், ஹேண்ட் பிரஸ் என வரிசையாக இயந்திரங்களைக் கொணர்ந்து அச்சகத்தை வளர்த்தெடுத்தவர் ராமஸ்வாமியின் மகன் வாவிள்ள வெங்கடேஸ்வர சாஸ்த்ருலு. ஏழு வயதில் தந்தையை இழந்த வா.வெ.சாஸ்த்ருலு, கல்லூரிப் படிப்பை முடித்ததும் நேரடியாக அச்சு வேலையில் இறங்கினார்.
- மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்களின் தொகுப்பு, அவற்றின் மீதான வினா விடை நூல்கள், ஸ்ரீ சங்கராச்சாரியார் இயற்றிய ‘சௌந்தர்ய லஹரி’யின் தமிழாக்கம் போன்றவற்றைப் பதிப்பித்தார். இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பிய நூல் தொகுப்பு, அதிவீரராமபாண்டியர் இயற்றிய ‘வெற்றிவேற்கை’ பாட்டும் உரையும், ‘திருமுறைத் திரட்டு’, ‘திருத்தொண்டர் வெண்பா’ பாட்டும் குறிப்பும், பெருவாயின் முள்ளியார் இயற்றிய ‘ஆசாரக்கோவை’, அபிராமி பட்டரின் ‘அபிராமி அந்தாதி’ பாட்டும் குறிப்பும், சண்முகக் கவிராயர் இயற்றிய ‘பாரத வசனம்’, திவாகரனாரது ‘சேந்தன் திவாகரம்’, தாயுமானவ சுவாமிகளின் ‘திருப்பாடற்றிரட்டு’, படிக்காசுப் புலவரின் ‘தண்டலையார் சதகம்’ என்று கொஞ்சுதமிழ் நூல்களைத் தேடித் தேடி பதிப்பித்தார் வா.வெ.சாஸ்த்ருலு. 1920-களில் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த மணி திருநாவுக்கரசு முதலியார் இவற்றில் பல தொகுப்புகளைப் பண்படுத்தித் தொகுத்து அச்சுக்குத் தந்திருக்கிறார்.
வ.வெ.சா. காட்டிய அர்ப்பணிப்பு
- நல்ல நூல் என்று எவரேனும் அடையாளம் காட்டிவிட்டால் போதும், அதை அச்சிலேற்ற வா.வெ.சா. கடும் முயற்சி எடுப்பார். இராமலிங்க சுவாமிகளின் ‘மனுமுறைகண்ட வாசகம்’, நாராயண பாரதியார் இயற்றிய ‘கோவிந்த சதகம்’ மற்றும் ‘திருவேங்கட சதகம்’, குருபாததாசர் இயற்றிய ‘குமரேச சதகம்’ என்று பக்தி நூல்களையும் விட்டுவைக்கவில்லை. சைவ சமய, வைணவ சமய பக்தி இலக்கியங்களைப் பதிப்பித்ததோடு நில்லாமல், ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையேயான விவாதத்தை முன்னெடுத்த ‘வினோதரசமஞ்சரி’ என்ற நூலையும் பதிப்பித்தார். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சி.ஆர்.தாஸ், சத்தியமூர்த்தி, டி.பிரகாசம், ராஜாஜி என அன்றைய பல விடுதலைப் போராட்ட வீரர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் வா.வெ.சா.
- 1930-களில் திராவிட இயக்கம் மற்றும் நீதிக் கட்சி கொடிகட்டிப் பறந்த காலத்தில் அச்சகத்தின் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தார். அதில் ராவ் சாகிப் கிருஷ்ணசுவாமி ஐயங்கார், சி.எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரி, வ.உ.சி., டி.பி.மீனாட்சிசுந்தரம், மணி திருநாவுக்கரசு முதலியார், பி.டி.சங்கரநாராயணப் பிள்ளை போன்றோர் இடம்பெற்றிருந்தனர். ‘செம்மை நூல்களைத் தேடிக் கண்டெடுத்து, தவறுகளின்றி பதிப்பிக்க தமிழகத்தின் சிறந்த அறிவுசார் குழு முயற்சி எடுக்கும். இந்த நூல்களைத் தமிழர் மட்டுமல்லாமல், திராவிடர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள் உலகின் மிகச் சிறந்த புனைவு, அறிவியல், அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவவியல் என்று அனைத்தையும் கற்றுத்தேற வேண்டும்’ என்றும் அப்போது வெளிவந்த வாவிள்ள நூல்களின் பதிப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 1920-களில் 292, எஸ்பிளனேடு என்ற முகவரியில் வாவிள்ள அச்சகத்தின் நேரடி விற்பனைக்கூடம் ஒன்றும் தொடங்கப்பட்டது. வா.வெ.சா. 1942-ல் ஆந்திர சேம்பர் ஆஃப் காமர்ஸைத் தோற்றுவித்து வழிநடத்தியவர்; பச்சையப்பன் அறக்கட்டளை, சுகுண விலாச சபா, ரானடே நூலகம், சென்னை போர்ட் டிரஸ்ட், மதராஸ் மகாஜன சபா, திரைப்படத் தணிக்கைக் குழு, மேசனிக் லாட்ஜ், மதராஸ் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் போன்ற பல அமைப்புகளின் நிர்வாகத்தில் பணியாற்றியவர்.
- ‘ஃபெடரேட்டட் இந்தியா’ என்ற ஆங்கில மாத இதழ், ‘திரிலிங்கா’ என்ற தெலுங்கு மாத இதழ் மற்றும் ‘பாலவினோதினி’ என்ற சிறாருக்கான தமிழ் மாத இதழ் என மூன்று இதழ்களை வா.வெ.சா. நடத்திவந்தார். இவற்றில் ‘பாலவினோதி’யின் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியாரின் நெருங்கிய நண்பரும், ‘சுதேசமித்திர’னில் பணியாற்றியவரும், அவரது சமகாலப் படைப்பாளருமான வரகவி அ.சுப்ரமணிய பாரதி. அவரது பெரும் முயற்சியால் ‘யயாதி’ என்ற சரித்திர நூலும், விசாகப் பெருமாள் ஐயர் இயற்றிய ‘பாலபோதவிலக்கணம்’ என்ற நூலும் வாவிள்ளவில் அச்சேறின. 1928-ல் வெளிவந்த ‘பாலபோதவிலக்கணம்’ சிறாருக்கென எழுதப்பட்ட இலக்கண நூல்!
வாவிள்ளவின் தமிழாக்கங்கள்
- வ.உ.சிதம்பரனாருடன் நெருங்கிய நட்பு பாராட்டிய புரவலர் வா.வெ.சாஸ்த்ருலு. 1901-ல் வெளிவந்த ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘ஃப்ரம் பாவர்ட்டி டு பவர்’ என்ற நூலை வாவிள்ள அச்சகத்துக்காக வ.உ.சி. தமிழாக்கம் செய்து தந்தார்.
- ‘வலிமைக்கு மார்க்கம்’ என்று பெயரிடப்பட்ட இந்த மொழிபெயர்ப்பின் முன்னுரையில் வ.உ.சி., “நான் இதுவரையில் பார்த்துள்ள இலக்கியங்களில் காணப்படாத ‘எஃது’ என்பது போன்ற ஒன்றிரண்டு சொற்களைப் புதியன புகுதலாக இதில் உபயோகித்துள்ளேன்… வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்திரிகளின் மகனான வெங்கடேச சாஸ்திரியவர்கள் என் குருவாகிய பாலகங்காதர திலகரின் நெருங்கிய நண்பர்; எனக்குப் பல்கால் பணம் உதவிய சீமான்” என்று குறிப்பிட்டு 1930-ல் நன்றி பாராட்டி எழுதியிருக்கிறார்.
- இவை தவிர ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘லீலாவதி’ என்ற புனைவு நூலின் மொழியாக்கம், ‘கிரிசெல்டா’ என்ற ஆங்கிலப் புதினத்தின் மொழியாக்கம் போன்றவையும் வாவிள்ள அச்சகத்திலிருந்து வெளிவந்தன. 1942-ல் பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார் வா.வெ.சா. ஆனாலும், இறக்கும் வரை தன்னால் இயன்றதை நிர்வகித்தார். 9.2.1956 அன்று அவர் மறைந்த பிறகு அச்சகம் அவரது தங்கை அல்லாடி சாரதாம்பாவின் மகன்களால் நிர்வகிக்கப்பட்டது.
காலப் பெண்டுலத்தின் ஆட்டம்
- தொழில் போட்டி காரணமாக 1960-களில் வாவிள்ளவிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவருவது குறையத் தொடங்கியது. அச்சகத்தின் எஸ்பிளனேடு அலுவலகம் மூடப்பட்டது. தெலுங்கு நூல்கள் மட்டுமே அதன் பின் பதிப்பிக்கப்பட்டன; 1990-ல் ஹைதராபாதில் புது அலுவலகம் திறக்கப்பட்டது. 1994-ல் அச்சகப் பொருள்கள் விற்கப்பட்டன; அங்கு பணியாற்றிய முதியவர்கள் வேலை இழந்தனர். 14 வயதில் வாவிள்ளவில் பைண்டராகப் பணிக்குச் சேர்ந்த மாதவரம் சுப்பராயலு மட்டுமே அவர்களில் இன்றும் இருப்பவர்; அவருக்கு இப்போது 90 வயது. அவருக்கு மாதம் ரூ.1,000 பென்ஷன் வழங்கிவருவதாக வா.வெ.சா.வின் தங்கை பேரன் அல்லாடி ஸ்ரீனிவாசமூர்த்தி சொல்கிறார். இப்போது நிர்வாகத்தை அவரும் அவரது மூத்த சகோதரரும் கவனித்துவருகிறார்கள்.
- இருக்கும் 2000 நூல்களை மட்டும் பெயரளவில் விற்பனைக்கு வைத்துக்கொண்டு காலப் பெண்டுலத்தின் ஆட்டத்தை அமைதியாகக் கடந்துகொண்டிருக்கிறது அச்சகம். மீதமிருக்கும் தெலுங்கு நூல்களை ஹைதராபாதுக்கு அனுப்பிவிட்டு, இந்தக் கட்டிடத்தை வணிக நிறுவனமாக மாற்றலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் வாவிள்ள சகோதரர்கள். ‘ஐயையோ… உங்களிடம் உள்ள அரிய பழைய நூல்கள் என்னாவது?’ என்ற பதற்றமான கேள்விக்கு, ‘இந்த இடத்திலேயே சிறு அறை ஒன்றை அமைத்து வா.வெ.சா. அல்லது அவர் தந்தை பெயரில் ஒரு நூலகம் நடத்தலாம் என்றிருக்கிறோம். எங்களிடம் உள்ள அபூர்வமான ஆங்கிலப் புத்தகங்களை நூலகத்தில் வைக்கவிருக்கிறோம்; தன்னார்வலர்கள் உதவி எங்களுக்குக் கட்டாயம் தேவைப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த அச்சுக்கூடத்தை மாற்றிவிடலாம் என்று இருக்கிறோம்’ என்று சொல்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசமூர்த்தி.
- வ.உ.சி.யை ஆதரித்துக் கைகொடுத்த அச்சகம் நூலகமாக உருமாற்றம் அடையக் காத்திருக்கிறது. கையசைத்து வெளியேறி திரும்பிப் பார்க்கிறோம்; சிவப்புக் கட்டிடத்தின் வாயிலில் நின்று நம்பிக்கையுடன் கையசைக்கிறார் ஸ்ரீனிவாசமூர்த்தி. கூடவே, ஈராயிரம் நூல்களும் தங்களின் பக்கங்களைப் புரட்ட சில கைகள் வராதா என்று எதிர்பார்த்திருக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (24-02-2020)