TNPSC Thervupettagam

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே உண்மையான ஜனநாயகம்

February 28 , 2019 2096 days 1377 0
  • தமிழகத்தில் சுமார் ஐந்தரை சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கும் பாமகவால் பிரதானக் கட்சிகளோடு கூட்டணி சேராமல் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்றால், அது பாமகவின் தவறு மட்டுமா?
  • தனித்து நின்று ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றிபெற முடிந்த தேமுதிக கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சியாகவும் முடியும் என்றால் வாக்குகள் என்பது வெறும் கூட்டல் கழித்தல் மட்டும்தானா?
  • தேர்தல் என்பது அதில் பங்கேற்கும் சகல தரப்பு வாக்காளர்களையும் பிரதிபலிக்க வேண்டாமா?
  • தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையோடு தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்கு வங்கி குறைவானதே என்றாலும் சிதைவுறாத வலுவான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது.
  • இருந்தும் ஏன் அவர்களும்கூட கூட்டணிக்காக பிரதான கட்சிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டியிருக்கிறது?
தேர்தல் முறையின் பிரச்சினை
  • இந்தியாவில் எந்த அரசியல் கட்சி என்றாலும், அக்கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ தனது குரலை ஒலிப்பதற்கான வாய்ப்பைப் பெறமுடியும்.
  • எனவே, இந்தப் பிரச்சினை கூட்டணி சேர்வதற்காக அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரச்சினை அல்ல.
  • இந்திய ஜனநாயக முறையின், தனிநபரை மையப்படுத்தும் அதன்வாயிலாக இருதுருவ அரசியலைக் கட்டமைக்கும் இந்தியத் தேர்தல் முறையின் பிரச்சினை.
  • இந்தச் சிக்கலை அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டிருக்கின்றனவா என்பதும்கூட சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.
  • மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தலித் கட்சிகள் இந்தப் பிரச்சினையை உணர்ந்துகொண்டிருக்கின்றன என்று சொல்ல முடியும்.
  • அதனாலேயே தனித்தொகுதிக்கு மாற்றாக இரட்டைத் தொகுதி முறை வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.
  • ஆனால், அரசியல் பொதுவெளியிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக அக்கட்சிகள் தேர்தலில் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு கோரிக்கை விடுக்கலாம்.
  • மற்ற கட்சிகளுக்கும்கூட அதுவே சரியான தீர்வாக இருக்க முடியும்.
  • ஒரு வாக்கு என்றாலும்கூட அது வெற்றியைத் தீர்மானிக்க வல்லது என்கிற தற்போதைய தேர்தல் முறையே, இன்று ஜனநாயகத்துக்குத் தீங்காக மாறிக்கொண்டிருக்கிறது.
  • வாக்குகளைப் பெறுவதற்காக எந்த உத்தியையும் நாடலாம், பணம் கொடுக்கலாம், மது பாட்டில்களை விநியோகிக்கலாம் என்று சகலவிதமான கேடுகளும் பரவிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது.
  • தேர்தலில் வெல்லும் கட்சிகள் அனைத்துமே 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிடுவதில்லை.
  • வெற்றிபெறும் கட்சிக்கும் தோல்வியடையும் கட்சிக்கும் இடையில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசங்களும் இருப்பதில்லை.
  • தோல்வியைச் சந்திக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு எந்த மதிப்புமே இல்லை என்பது மக்களின் மன உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிப்பது ஆகாது.
இருதுருவ அரசியல்
  • இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிற அதேவேளையில் அது பல கட்சி ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டுள்ள நாடு.
  • எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமையுண்டு, கட்சி சாராத சுயேச்சைகளுக்கும் அந்த உரிமையுண்டு என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறோம்.
  • ஆனால், பல கட்சிகள் தேர்தலில் பங்கேற்றாலும் சிறிய கட்சிகள் தனித்து நின்று வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் அரிதினும் அரிதாகவே அமைகிறது.
  • இந்திய அரசியல் எப்போதும், இருதுருவ அரசியல் கலாச்சாரத்திலேயே தேங்கிப்போய் நிற்கிறது.
  • வெவ்வேறுபட்ட அரசியல் கோட்பாடுகளைப் பேசவும் விவாதிக்கவும் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கப்படும் ஒரு நாட்டில் அவற்றுக்கு நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ உரிய பிரதிநித்துவம் கிடைப்பதில் இன்னமும் கண்ணுக்குத் தெரியாத தடைகள் இருக்கின்றன.
  • இன்றைய நிலையில் தேசிய அளவில் பாஜக - காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக - திமுக என்பதாகவே அரசியல் களம் சுருங்கிப்போய் நிற்கிறது.
  • மூன்றாவது அணிக்கு முயற்சி செய்த கட்சிகள், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய கட்சிகள் என எல்லாமும் தேர்தல் நெருங்க நெருங்க மீண்டும் இந்தக் கட்சிகளுடன் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கூட்டுசேர்ந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • ஆனால், அது தங்களுடைய தவறு அல்ல, தேர்தல் அமைப்பின் தவறு என்று விமர்சிக்க அந்தக் கட்சிகள் ஏன் தயங்குகின்றன?
  • பிரதானக் கட்சிகள் ஒருபோதும் அப்படி பேசப்போவதில்லை.
  • பெரிய அளவில் வாக்கு வித்தியாசங்கள் இல்லாமல், மாறி மாறி ஆட்சியில் அமரும் வாய்ப்பை அக்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.
  • ஆனால், மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களது பிரதிநிதித்துவ இழப்புக்கான காரணத்தை வெறும் கூட்டணி விஷயமாக மட்டுமே சுருக்கிப்பார்க்கின்றன?
மாறும் நிலைப்பாடுகள்
  • அதிக வாக்கு பெற்றவர் வெற்றி பெற்றவர் என்ற கணக்கு, தேர்தல் நடைமுறையை எளிமைப்படுத்துவதால் அதுவே தொடர வேண்டும் என்ற நியாயத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீட்டித்துக்கொண்டிருக்கப் போகிறோம்?
  • தற்போதைய நடைமுறைக்கு ஆதரவாக வாதிட்ட தேர்தல் அதிகாரிகளும்கூட தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.
  • 2014 தேர்தலில் 20% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
  • இத்தனைக்கும் அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது கட்சி இது. பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, முன்னாள் தேர்தல் ஆணையர் ஒய்.எம்.குரேஷி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
  • “இது ஜனநாயகம் அல்ல. இது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஜெர்மனியில் உள்ளதுபோல் இரண்டு தேர்தல் முறைகளும் கலந்த ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றி நாம் யோசிக்கலாம்” என்று பரிந்துரை செய்துள்ளார் ஒய்.எம்.குரேஷி.
  • அண்டை நாடுகளான இலங்கையிலும் நேபாளத்திலும் விகிதாச்சார முறை பின்பற்றப்படுகிறது. இந்தியா மட்டும் அதைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறதா?
  • சுதந்திரம் பெற்றபோது, செல்வாக்கு மிக்க ஒரு தேசியக் கட்சியின் கீழ் தேச ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
  • அந்தத் தேவை எப்போதோ நிறைவேறிவிட்டது.
  • இன்றைக்கும் அந்த நடைமுறை தொடர்வது இந்திய ஜனநாயகத்தைப் பின்னோக்கி இழுப்பதாகத்தான் முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்