TNPSC Thervupettagam

விடுதலைக்குக் காத்திருக்கும் வேழங்கள்

December 11 , 2022 693 days 370 0
  • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் மரணம், கோயில்களில் யானைகளின் தேவை குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது. காடுகளில் வாழும் பேருயிர்களைக் கோயில் வளாகத்தில் இன்னமும் பிணைத்துவைக்க வேண்டுமா என ஒரு தரப்பும், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமா என இன்னொரு தரப்பும் வாதிடுகின்றன. வரலாற்றுத் தரவுகள் என்ன சொல்கின்றன?

சுயநல மனிதர்கள்

  • வேட்டையாடிச் சமூகம், உணவுக்காகத் தனக்குத் தோதான விலங்குகளைக் கொல்லத் தொடங்கிய காலகட்டம், விலங்குகளின் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்தது என தனது ‘சேப்பியன்ஸ்: மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார் யுவால் நோவா ஹராரி. சகட்டுமேனிக்குக் கண்ணில் படும் விலங்குகளைக் கொன்று புசிப்பதைக் காட்டிலும், சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வளர்த்து, இனப்பெருக்கம் செய்யவைத்து, தேவையானபோது மனிதர்கள் கொன்று புசிக்கத் தொடங்கினர்.
  • அப்படியே சில விலங்குகளைத் தங்களின் பிற தேவைகளுக்காகப் பழக்கினர். தாங்கள் பார்த்துவந்த உடலுழைப்பு சார்ந்த கடினமான பணிகளை விலங்குகளின் முதுகுகளில் சுமத்தினர். அப்படித்தான் ஆடு, மாடு, குதிரை, கழுதை போன்ற விலங்குகள் மனிதர்களுக்காக உழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. காலப்போக்கில், வன விலங்கான யானையும் இப்பட்டியலில் சேர்ந்தது.
  • தந்தம் முதல் வால் முடி வரை யானையின் உடல் பாகங்களைப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த, ஒரு காலத்தில் பெருமளவில் யானைகள் வேட்டையாடப்பட்டன. பெருமிதத்துக்காகவும் யானைகள் கொன்று குவிக்கப்பட்டன. இவற்றைக் கட்டுப்படுத்த 1871இல் பிரிட்டிஷ் அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கிடையே காலம்காலமாகக் கோயில்களில் யானைகளைப் பராமரிக்கும் பழக்கம் தடைகளின்றித் தொடர்ந்தது.

சர்க்கஸிலிருந்து தப்பிய யானைகள்

  • 2017இல், விலங்குகளை வைத்து நிகழ்ச்சி நடத்தும் சர்க்கஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை ரத்துசெய்து மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த இடத்தை நோக்கி நகர்வதற்கு முன்னர் பல தடங்கல்களை அரசு சந்திக்க நேர்ந்தது. 1998இல் சிங்கம், புலி, கரடி, குரங்கு, சிறுத்தை ஆகிய விலங்குகளை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பயன்படுத்த அரசு தடைவிதித்தது; யானைகளுக்கு அதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
  • எனினும், சர்க்கஸில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்புகள் சுட்டிக்காட்டிவந்தன. உயிரியல் பூங்கா அங்கீகார விதிமுறைகள் 2009இன்படி, யானைகளைப் பராமரிப்பதற்கான வழிமுறைகளை சர்க்கஸ் நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா எனத் தொடர்ச்சியாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சர்க்கஸ் நிகழ்ச்சிகளிலிருந்து யானைகளுக்கும் முழுமையான விடுதலை கிடைத்தது.
  • மறுபுறம், இன்னமும் கோயில் நிர்வாகங்களும் தனியாரும் யானைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் மொத்தம் 2,675 யானைகள் மனிதர்களின் பராமரிப்பில் உள்ளன என 2019இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் 1,821 யானைகள் கோயில்கள், தனியாரால் பராமரிக்கப்படுகின்றன. வனத் துறை ரோந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான சவாரி போன்ற பணிகளுக்காகவும், வன யானைகளைப் பிடிக்க அல்லது அடக்க ‘கும்கி’களாகவும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 124 யானைகள் பராமரிப்பில் இருக்கின்றன. அவற்றில் 33 கோயில்களிலும், 26 தனியாரிடமும் உள்ளன. சில தர்காக்களிலும் யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இயற்கைக்கு மாறானது

  • யானைகள் தினமும் 20 முதல் 40 கி.மீ. வரை நடக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், கோயில்களிலோ தனியாரின் பராமரிப்பிலோ அதற்கெல்லாம் வாய்ப்பு குறைவு. அதேபோல், ஏறத்தாழ 70 வகைத் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் வழக்கம் கொண்ட யானைகளுக்கு, கோயில்களில் வழங்கப்படும் உணவு அவற்றின் செரிமான அமைப்புக்குப் பொருந்தாதவை என்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள். யானைகளுக்கு உடல்பருமன் அதிகரிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அது ஒரு காரணம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • கேரளத்தைச் சேர்ந்த சங்கீதா, அம்மாநிலத்தின் கோயில்களில் யானைகள் நடத்தப்படும் விதம் குறித்து 2016இல் ‘காட்ஸ் இன் ஷாக்கிள்ஸ்’ எனும் ஆவணப்படத்தை எடுத்தார். திருச்சூர் பூரம் கொண்டாட்டத்தின்போது நாள் முழுக்க யானைகள் படும் இன்னல்களும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில்தான் கேரளத்தில் பல கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பொதுவாக, யானைகள் இணைசேரும் காலகட்டம் அது. அதற்கு வழியின்றி கோயில் யானைகள் தொடர்ந்து வேலைவாங்கப்படுவதாக அந்த ஆவணப்படத்தில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.
  • யானையின் முதுகின் மேல் நான்கைந்து பேர் அமர்ந்துகொள்வது, அதன் உடலில் கனமான ஆபரணங்களை அணிவிப்பது என யானைகளைத் துன்புறுத்தும் பல செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது காதைக் கிழிக்கும் சத்தத்துடன் நடத்தப்படும் வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் என யானைகள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளை மனிதர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை.
  • மதம் பிடித்த யானைகள் பாகன்களை, பொதுமக்களைக் கொல்லும் காட்சிகள், சக யானைகளுடன் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவை பிடிபட்ட பின்னர் கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவது வெளியுலகத்துக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, ‘கட்டி அடிக்கை’ எனும் பெயரில் அவை கடுமையாகத் தாக்கப்படுகின்றன. கேரளத்தில் இதை ஒரு சடங்காகவே மேற்கொள்வது வழக்கம். கொடூரமான இந்தத் தாக்குதலில் பல யானைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றன.

சட்டத்தின் ஓட்டைகள்

  • வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் (1972), அட்டவணை 1 இன்கீழ் சிங்கம், புலி ஆகிய விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை வைத்திருப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கைகள் பாயும். யானைகளும் அதே சட்ட உரிமையைக் கொண்டிருக்கின்றன என்றாலும், சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகள் யானைகளின் துயரத்துக்குக் காரணமாகிவிடுகின்றன. இந்தச் சட்டத்தில் 2002இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, தலைமை வனப் பாதுகாவலரிடம் ஒரு சான்றிதழைப் பெற்று வைத்திருந்தாலே ஒருவர் யானைகளைத் தன் பராமரிப்பில் வைத்திருக்க முடியும்.
  • இதை வைத்தே சட்டவிரோதமாக யானைகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் உண்டு. போதாக்குறைக்கு, அந்தச் சட்டத்தில் புதிதாகக் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தத்தின்படி, சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் எளிதாகப் பிறருக்கு யானைகளைக் கைமாற்றிவிட முடியும் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கூடவே, சட்டவிரோதமான யானை வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் வகையில், குழப்பமான அம்சங்கள் அந்தத் திருத்தத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்கள்.
  • இந்தியா முழுவதும், தனியாராலும் கோயில் நிர்வாகங்களாலும் பராமரிக்கப்படும் யானைகள் அனைத்தையும் மீண்டும் வனப் பகுதிகளுக்கு அனுப்புவது சாத்தியமற்றது. ஏற்கெனவே வனப் பகுதிகள் சுருங்கி, மனிதர்களின் வாழிடங்கள் அதிகரித்துவிட்டன. அரசாலும் மறுவாழ்வு மையங்களில் அத்தனை யானைகளுக்கும் இடமளிக்க முடியாது. ஒரு யானையைப் பராமரிக்க மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம்வரை செலவாகும்.
  • இன்னொரு புறம் பீட்டா போன்ற அமைப்புகள், இந்தியப் பண்பாட்டுக் கூறுகள் குறித்த புரிதல் இல்லாமல் மேற்கத்தியச் சிந்தனையுடன் இந்தப் பிரச்சினையில் குறுக்கிடுவதால், ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் யானைகள் மேலும் சிரமத்துக்குள்ளாவதாகவும் புகார்கள் உண்டு. ஜல்லிக்கட்டு விஷயத்திலேயே அது நன்றாக வெளிப்பட்டது. தற்போது மணக்குள விநாயகர் கோயில் யானையின் மரணத்தின் பின்னணியில் பேசப்படும் பிரச்சினைகளுக்கும் பீட்டா ஏற்படுத்தும் குளறுபடிகளே காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அந்தப் புகார்களுக்கு வலுசேர்க்கின்றன.

என்ன செய்யலாம்?

  • ஏற்கெனவே இருக்கும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதுதான் இப்போதைக்குச் செய்ய முடிந்த ஒரே விஷயம். இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் கோயில் யானைகள், கோயிலுக்குச் சொந்தமான வனப் பகுதிகளில் - இனப்பெருக்க நடைமுறைக்கு இடமளிக்கும் வகையிலும் - சுதந்திரமாகவும் வளர்க்கப்படுகின்றன.
  • நிலங்களைப் போலவே வனப் பகுதிகளும் தமிழகக் கோயில்களுக்குச் சொந்தமாக உள்ளன. அந்தப் பகுதிகளைப் பராமரித்து, உரிய பாதுகாப்புடன் யானைகளைச் சுதந்திரமாக உலவவிடலாம். முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்களில், இதுவரை கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அவற்றை இன்னும் மேம்படுத்தலாம். அத்துடன், இனியும் கோயில்களில் புதிதாக யானைகளை வளர்க்க வேண்டியதில்லை எனும் மனமாற்றம் பொதுச்சமூகத்திடமும் ஏற்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (11 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்