விண்வெளி செல்லும் இந்தியர்கள்
- மனிதர்களை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்புவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) நெடுங்காலக் கனவு. ககன்யான் என்கிற திட்டம் மூலம் அக்கனவு நனவாகப்போகிறது. இத்திட்டத்துக்கான குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டனர். திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வீரர்களைக் கௌரவித்தார்.
- இந்தியரான ராகேஷ் ஷர்மா, 1984இலேயே விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ககன்யான் திட்டம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இம்முறை குழுவில் ஷுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- நால்வரில், விங் கமாண்டர் ஷுபான்ஷு சுக்லா பயணத்தை முன்னெடுக்கும் பொறுப்பில் இருப்பார். குழுத் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பாலகிருஷ்ணன் அவருக்கான மாற்றாக இருப்பார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் இப்பயணத்தை அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். இவ்வீரர்கள் ‘ககன் யாத்ரி’ எனப்படுகின்றனர். வடமொழியில் ‘ககன்’ என்றால் வானம் என்று பொருள்.
ககன்யான் தனிச்சிறப்பு:
- ராகேஷ் சர்மா, 1984இல் இரண்டு சோவியத் ஒன்றிய வீரர்களுடன் விண்வெளிக்குப் பயணம் செய்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. சோவியத் ஒன்றியம் - இந்தியாவின் கூட்டுழைப்பில் நிகழ்ந்த இப்பயணம், சோவியத் ஒன்றியத்தில் தயாரான ‘சோயுஸ் டி11’ என்கிற விண்கலம் மூலமே நிகழ்ந்தது.
- ககன்யான் திட்டத்துக்கான விண்வெளிப் பயணம், இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான விண்கலம் மூலம் நிகழ உள்ளது. ஏறக்குறைய ரூ.9,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதரைச் சொந்த விண்கலத்தில் அனுப்பும் நான்காம் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறவிருக்கிறது.
- இத்திட்டத்துக்கான வேலைகள் 2012இலிருந்தே செய்யப்பட்டுவந்தன. இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு நிறைவான 2022இல் ககன்யான் பயணம் தொடங்கும் என 2018இல் பிரதமர் மோடி அறிவித்தார். எனினும், கரோனா தொற்று காரணமாக இப்பயணத்துக்கான வேலைகள் பாதிக்கப்பட்டதால் இப்பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
முன்தயாரிப்பு வேலைகள்:
- சந்திரயான் - 3 திட்டத்தில் பயன்பட்ட எல்விஎம் 3 என்கிற ஏவூர்தி (ராக்கெட்), ககன்யான் திட்டத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இது செலுத்தப்படும். மனிதர்களைச் சுமந்துசெல்லும் விண்கலத்தைத் தாழ் விண்வெளிப் பாதையில் பயணிக்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் முதன்மையான நோக்கம். திட்டத்தின் ஒவ்வொரு கூறும் சோதிக்கப்பட்டு வருகிறது.
- அவை தோல்வியுறும் விகிதம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, வீரர்களுடன் இப்பயணம் மேற்கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வீரர்களுக்கும் ரஷ்யா பயிற்சி அளித்ததுடன், மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை உருவாக்கத் தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பயிற்சி மையத்தில் 13 மாதங்களுக்கு ககன்யான் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின் பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றனர்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்களைக் கையாள்வதற்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்குமான பயிற்சி இங்கு நடைபெறும். உடல் - மனநலப் பயிற்சியோடு, விண்வெளியில் உள்ள சூழலைப் பூமியிலேயே உணரத்தகுந்த வகையிலான ‘சிமுலேட்டர்’ பயிற்சியும் இதில் உண்டு.
- அடுத்தபடியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் விண்வெளி மையத்தில் இவர்களுக்கு உயர்நிலைப் பயிற்சி அளிக்கவுள்ளது. ககன்யான் ஆராய்ச்சி, பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நடக்கும்.
- இந்த விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்லும் திறன் சார்ந்த தரத்தை அறிவதற்கான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விண்கலத்தில் உள்ள சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, உயிர் வாழ்தலுக்குத் தேவையான சூழல், பயணிகளின் உடல்நலத்தைப் பேணுவதற்கான ஒட்டுமொத்த அமைப்பு ஆகியவற்றைப் பொறியாளர்கள் தினமும் பரிசோதித்து வருகின்றனர்.
- எதிர்பாராத நெருக்கடிகளின்போது தப்பிக்கும் சாத்தியங்களைச் சோதனை செய்து பார்க்கும் ‘பேட் அபார்ட்’ சோதனையும் ‘ஹை அல்டிடியூட்’ சோதனையும் முடிந்துவிட்டன. இவர்களது பயணம், பயணிகள் நடவடிக்கைகளுக்கான பல்லடுக்குக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆளற்ற விண்கலத்தை இருமுறை செலுத்தி சோதனை செய்யப்படும். எல்லாம் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் பயணம் செய்வார்கள். 2024 இறுதியில் ககன்யான் ஆய்வுப் பயணம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகேஷ் சர்மாவும் ககன்யான் வீரர்களும்:
- ராகேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்கள், விண்வெளியில் உள்ள சால்யுட் 7 என்கிற நிலையத்தில் தங்கி, ஏறக்குறைய 8 நாள்கள் ஆய்வு செய்தார்கள். விண்வெளியிலிருந்து இந்தியாவை ஒளிப்படம் எடுப்பது, யோகா பயிற்சி உடல் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை எடை உணரப்பட முடியாத சூழலில் ஆய்வுசெய்வது போன்றவற்றையும் அப்பணி உள்ளடக்கியிருந்தது.
- ககன்யான் வீரர்கள், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்வர். தகவல் தொடர்பு, தொலையுணர்திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான வழக்கமான செயற்கைக்கோள்களையும் கடந்து, ககன்யான் மூலம் ஆய்வுப் பணிகள் நடக்க உள்ளன.
அமெரிக்காவின் பங்களிப்பு:
- 2023இல் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்ததை அடுத்து, 2024இல் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கான பயணம் ஒன்றை இரண்டு நாடுகளும் கூட்டு முயற்சியுடன் திட்டமிடுவதாகக் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
- ஹூஸ்டன் நகரில் செயல்படும் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்துடன் இஸ்ரோவின் ‘மனிதர் பயணிப்பதற்கான விண்கல மையம்’ ஒப்பந்தம் செய்துள்ளது. நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸுடன் ஒப்பந்தம் இட்டுச் செயல்பட்டுவருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்நிறுவனம் வீரர்களை வழிநடத்தும்.
பயன்பாடுகள்:
- ஐயத்துக்கு இடமற்ற, சிறப்பான செயல்விளக்கங்களுடன் கூடிய அறிவியல் தொழில்நுட்பச் சோதனைகளை (demonstration experiments) விண்வெளியில் இந்திய வீரர்கள் மேற்கொள்வார்கள்; குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஐந்து வகையான பரிசோதனைகளை மேற்கொள்வர்.
- இது மனிதர் மேற்கொள்ளும் விண்வெளிப் பயணம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டம் தனியார் செயற்கைக்கோள்களை இயக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விண்வெளித் துறையில் இந்தியாவின் செல்வாக்கு உயரும் என அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 08 – 2024)