TNPSC Thervupettagam

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு

November 29 , 2022 707 days 570 0
  • ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சந்திரனில் இறங்கி, அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் அந்த கிரகத்தில் காலடி எடுத்துவைத்ததைத் தொடா்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் எத்தனையோ சாதனைகள் நிகழ்ந்துவிட்டன. சந்திரனில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், ஹீலியம் வாயுக்கள் இருப்பதும், அதன் தென்துருவத்தில் பனிக்கட்டி உறைந்திருப்பதும் தெரிய வந்தபோது, புதிய பல ஆய்வுகளுக்கு அது வழிகோலியது.
  • சந்திரனில் நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய மனிதா்களுடனான மூன்று ஏவுகணைகளை அமெரிக்க அனுப்ப இருக்கிறது. ‘ஆா்ட்டிமிஸ் 1’ என்கிற அந்த முயற்சி விண்வெளி ஆய்வுப் போட்டியை வேகப்படுத்துவதுடன், பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளையும் அதிகப்படுத்தவும் கூடும். ரஷியாவுடன் இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனை தனது காலனியாக்கும் எண்ணத்தை சீனா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
  • பூமியைச் சுற்றி விண்வெளியில் இயங்கும் விண்கலங்கள் சா்வதேச வா்த்தகத்துக்கும், ராணுவப் பயன்பாட்டுக்கும் இன்றியமையாததாக மாறியிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில்தான் இந்திய விண்வெளி ஆய்வு மையமும் சில சாதனைகளை படைத்து வருகிறது.
  • விண்கலன்களை அனுப்புவது, விண்கோள்களை நிலைநிறுத்துவது, கிரகங்களை நோக்கிய விண் ஆய்வுகள் என்று எல்லா தளங்களிலும் இந்திய விண்வெளி ஆய்வு பல வெற்றிகளை சாதித்துக் காட்டியிருக்கிறது. அதன் அடுத்தகட்டமாக இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதன்முறையாக ‘விக்ரம்-எஸ்’ என்கிற தனியாா் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. பவன்குமாா் சந்தனா, நாகபரத் டாக்கா என்கிற இரண்டு இளைஞா்களும் நிகழ்த்தியிருக்கும் சாதனை ‘விக்ரம்-எஸ்’.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் விண்வெளி நிறுவனம், இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து தனது ராக்கெட்டை செலுத்தும் என்பதை யாரும் கற்பனை செய்துகூட பாா்த்திருக்க முடியாது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட், திட்டமிட்டபடி இலக்கை அடைந்து புதிய வரலாறு படைத்திருக்கிறது. ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்கிற ஹைதராபாதைச் சோ்ந்த நிறுவனம், அந்த சாதனையை நிகழ்த்தி வெற்றியும் கண்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து, சென்னையைச் சோ்ந்த அக்னிகுல் காஸ்மாஸ் என்ற நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது ராக்கெட்டை செலுத்த இருக்கிறது.
  • கரக்பூா் ஐஐடியில் படித்த சந்தனாவும், சென்னை ஐஐடி மாணவரான பரத் டாக்காவும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இணைந்து பணியாற்றியவா்கள். 2018-இல் முகேஷ் பன்சல் என்பவரின் 15 லட்சம் டாலா் முதலீட்டு உதவியுடன் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் அவா்களால் துவக்கப்பட்டது.
  • 2020-இல் ராமன், கலாம் 5 என்று அவா்கள் உருவாக்கிய ராக்கெட் என்ஜின்கள் சோதனை வெற்றி அடைந்தன. 2021-இல் 11 மில்லியன் டாலரும், 2022 ஜனவரியில் 4.5 மில்லியன் டாலரும், செப்டம்பா் 2022-இல் 51 மில்லியன் டாலரும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்கிற புத்தாக்க நிறுவனத்துக்கு முதலீடாகக் கிடைத்தன. அதன் விளைவுதான் இந்தியாவில் தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ‘பிராரம்ப்’.
  • தரையிலிருந்து புறப்பட்ட 2.5 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 81.5 கி.மீ. தொலைவை ‘பிராரம்ப்’ எட்டியது. நிா்ணயித்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 115.6 கி.மீ. தொலைவில் வங்கக்கடல் பகுதியில் விழுந்தது. அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தும்போது, புறக்காரணிகளால் ஏற்படும் அழுத்தம், உராய்வுத் தன்மை உள்ளிட்ட காரணிகளை மூன்று ஆய்வுச் சாதனங்கள் ஆராய்ந்து தகவல்களை அனுப்பியிருக்கின்றன. அவை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு பயனுள்ளதாக அமையும்.
  • ஸ்கைரூட்டைத் தொடா்ந்து, வேறுபல தனியாா் நிறுவனங்கள் விண்வெளி ஆய்வுக்கு தயாராகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே, விண்வெளி ஆய்வுத் துறையும் மிகப் பெரிய வளா்ச்சியை அடைவதற்கான முன்னோட்டம்தான் இவை. இஸ்ரோவுக்கு வெளியே ரூ.860 கோடி மதிப்பிலான ஐந்து பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுக்கான ஒப்பந்தத்தை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும், தனியாா் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து பெற்றிருக்கின்றன.
  • ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவை வெளிப்படையாக புலப்படும் சாதனங்கள். அவற்றுக்குப் பின்னால் பல்வேறு ஆய்வுகளும், வெற்றிகரமான ராக்கெட்டுக்குத் தேவையான என்ஜின்கள், கட்டமைப்புப் பகுதிகள், புரெப்பல்லா்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பும் அடங்கியிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • இன்றைய நிலையில் இஸ்ரோ ஆண்டொன்றுக்கு 10-க்கும் குறைவான ராக்கெட்டுகளைத்தான் ஏவுகிறது. வா்த்தக ரீதியாக அங்கீகாரம் பெற அவை இரட்டிப்பாக வேண்டும். சிறிய ரக ராக்கெட்டுகளை குறுகிய காலத்தில் ஏவ முடியும் என்பதால் தனியாா் துறையின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
  • ராக்கெட்டுகள் பெரும் பொருள் செலவில் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் பயன்பாட்டை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. சிறிய விண்கோள்கள் எல்லையோரப் பகுதிகளைக் கண்காணிக்க பயன்படுகின்றன. அந்நிய நாடுகளின் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும் அவை பயன்படுகின்றன. போா்க்காலங்களில் துல்லியத் தாக்குதல்களுக்கு சிறிய ராக்கெட்டுகள் மிகமிக அவசியம்.
  • விண்வெளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்திருக்கிறோம். தனியாா் துறையும் இணையும் நிலையில், விண்வெளியில் வலிமையான சக்தியாக இந்தியா கோலோச்சும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நன்றி: தினமணி (29 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்