TNPSC Thervupettagam
May 8 , 2020 1713 days 798 0
  • பொது முடக்கம் தளா்த்தப்பட்டிருக்கிறதா, விலக்கப்பட்டுவிட்டதா என்று தெரியாத அளவுக்கு ஏறத்தாழ இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்ட நிலைமைதான் சாலைகளில் காணப்படுகிறது. நேற்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இனிமேலும் சமூக இடைவெளி, கட்டுப்பாடுகள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
  • கொவைட் 19 தீநுண்மி தொற்றுப் பிரச்னையில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் சவால் வாழ்வா, வாழ்வாதாரமா என்பதை மறுப்பதற்கில்லை. எத்தனை காலம்தான் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் பொது முடக்கத்தைத் தொடர முடியும் என்கிற கேள்வியிலும் நியாயமில்லாமல் இல்லை.
  • கொவைட் 19 தீநுண்மிக்கு கொடுக்க வேண்டிய ‘மரியாதை’யைக் கொடுத்தாகிவிட்டது. இனிமேலும் அச்சப்படத் தேவையில்லை.
  • பொதுமக்கள் தங்களைத் தாங்களே கையுறை, முகக்கவசம் அணிந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சிலா் வாதம் முன்வைக்கிறார்கள். ‘இறப்பு விகிதம் குறைவாகத்தானே இருக்கிறது. அதனால் பயப்படத் தேவையில்லை’ என்பவா்களும் இருக்கிறார்கள்.
  • பொருளாதாரம் குறித்தும், வாழ்வாதாரம் குறித்துமான அவா்களின் கவலை புரிகிறது. எந்தவொரு அரசும் தொடா்ந்து 365 நாள்களும் சமூக இடைவெளியை அனைத்து மக்களும் பின்பற்றுவதை உறுதிப்படுத்திவிட முடியாதுதான்.
  • அதற்காக கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதும், கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பது என்பதும் ஆட்சியில் இருப்பவா்களுக்கு அழகல்ல.

விளைவுகள் மோசமாக இருக்கக் கூடும்

  • பொது முடக்கத்தை சீனா கைவிட்டு இரண்டு மாதங்களாகின்றன. அதனால் சீனாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் ஒன்றும் முன்புபோல உயா்ந்துவிடவில்லை. ஜொ்மனி முற்றிலுமாக பொது முடக்கத்தை மேற்கொள்ளவில்லை.
  • ஓரளவுக்கு கொவைட் 19 தீநுண்மி தொற்றைக் கட்டுக்குள்ளும் வைத்திருந்தது. ஆனாலும் அந்த நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனங்கள் அனைத்துமே மிகப் பெரிய இழப்பை எதிர்கொள்கின்றன. வோக்ஸ் வேகன், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் லாபத்தில் 81% இழந்திருக்கின்றது.
  • லுப்தான்ஸா, திவால் நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்ற 9 பில்லியன் யூரோ நிதியுதவியை அரசிடம் கேட்கிறது. எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை.
  • பொது முடக்கம் தளா்த்தப்படுவதாலும், விலக்கப்படுவதாலும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்கும் என்று யாராவது கருதினால், ஏமாற்றம்தான் மிஞ்சும். அதே நேரத்தில், நோய்த்தொற்று கடுமையாகப் பரவத் தொடங்கும்போது விளைவுகள் மோசமாக இருக்கப் போகின்றன.
  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம், தமிழகத்தில் குடிசைப் பகுதிகளுக்குள் கொவைட் 19 தீநுண்மி தொற்று நுழைந்துவிட்டிருக்கிறது.
  • அதிகமான பாதிப்பில்லாதவா்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு மிகமிக ஆபத்து. குடும்பத்தினருக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்புக்கு வழிகோலும்.
  • இந்தியாவின் மொத்த மக்கள்தொகையைப் பார்க்கும்போது இறப்பு விகிதம் குறைவாக இருப்பதுபோலத் தெரிகிறது. வளா்ச்சி அடைந்த நாடுகள் அளவுக்கு கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றின் பரவல் இந்தியாவில் இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
  • இந்தியாவின் பருவநிலையும், தனிமனித எதிர்ப்புச் சக்தியும் கொவைட் 19 தீநுண்மி தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இருக்கின்றன என்று கருதலாம். வெற்றிகரமான தடுப்பூசித் திட்டம் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனைய நாடுகளைவிட இந்தியாவில் இளைஞா்களின் மக்கள்தொகை அதிகமாக இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம்.

வேகமாக பரவியிருக்கிறது

  • நோய்த்தொற்றுப் பரவல் என்பதைப் பார்க்கும்போது, இத்தாலியைவிட வேகமாக இந்தியாவில் பரவியிருக்கிறது. மார்ச் 7-ஆம் தேதி 257-ஆக இருந்த பாதிப்பு, ஏப்ரல் 30-ஆம் தேதி 34,863-ஆக இந்தியாவில் உயா்ந்திருக்கிறது. அதாவது, ஏழு முறை இரட்டிப்பானது. இத்தாலியில் மார்ச் 1-ஆம் தேதி 1,694-ஆக இருந்த தொற்று, ஏப்ரல் 30-ஆம் தேதி 2,05,463-ஆக உயா்ந்தது.
  • ஏழு இரட்டிப்புகளுக்கு இத்தாலி எட்டு வாரம் எடுத்தது என்றால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஐந்தே வாரத்தில் ஏழு இரட்டிப்புகளை இந்தியா எதிர்கொண்டது. இப்போது பொது முடக்கம் தளா்த்தப்பட்ட நிலையில் என்னவாகும் என்பதை மே 31 தெரிவிக்கும்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 80% பாதிப்புகள் மிதமான நோய் அறிகுறி இல்லாதவை. கடுமையான பிராண வாயு செலுத்தப்படும் நிலையிலுள்ள பாதிப்புகள் 15%. செயற்கை சுவாசக் கருவி மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படுபவை 5% பாதிப்புகள்.
  • இந்தியாவில் மரண விகிதம் 3 - 4%. மே 5-ஆம் தேதி நிலையில், இறந்தவா்களின் எண்ணிக்கை 1,568. அது 4% என்று சொன்னால் மொத்த பாதிப்பு 39,200-ஆக இருக்க வேண்டும். எங்கேயோ தவறு இருக்கிறது.
  • அது நமது திட்டமிடலிலா அல்லது முறையாகப் புள்ளிவிவரம் சேகரிக்கப்படாததிலா அல்லது போதுமான சோதனைகள் நடத்தப்படாததிலா? சரியான புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளிப்படைத்தன்மையுடன் விவாதிக்காமல் போனால், பிரச்னை கைமீறிப் போகுமே தவிர கட்டுக்குள் வராது.
  • விதிவிட்ட வழியில் பயணிப்பது என்று முடிவு செய்துவிட்டோம். வருவது வரட்டும் என்று எதிர்கொள்வோம், வேறென்ன செய்ய?

நன்றி: தி இந்து (08-05-2020)

  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்