- ஸ்பெயினில் ஒருவர் மீது இன்னொருவர் தக்காளியை வீசி விளையாடும் தக்காளித் திருவிழாவைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் இத்தாலியில் ஆரஞ்சுப் பழத் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இத்தாலியின் வடக்குப் பகுதியான ஈவ்ரியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஆரஞ்சுப் பழத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- இத்திருவிழாவின்போது ஊரே ஆரஞ்சுப் பழத்தால் அல்லோலகல்லோலப்படும். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டிகளில் ஆரஞ்சுப் பழங்களை நிறைத்துக் கொண்டு வருவார்கள். போர் வீரர்களைப் போல கவச உடை அணிந்தவர்கள் அந்த வண்டியின் மீது அமர்ந்துகொண்டு மக்களை நோக்கி ஆரஞ்சுப் பழங்களை வீசுவார்கள்.
- பதிலுக்கு அவர்களும் தங்கள் கைகளில் கிடைக்கும் ஆரஞ்சுப் பழங்களை வண்டியின் மேல் இருப்பவர்கள் மீது வீசுவார்கள். இந்தக் கொண்டாட்டத்துக்காக டன் கணக்காக ஆரஞ்சுப் பழங்கள் பக்கத்து நாடான சிசிலியிலிருந்து இத்தாலிக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. காரணம், இத்தாலியில் ஆரஞ்சு விளைவிக்கப்படுவதில்லை.
- விசித்திரமான இந்தக் கொண்டாட்டத்துக்குப் பின்னால் புராதனக் கதைகளும் சொல்லப்படுகின்றன. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த கொடுங்கோல் அரசன் தன் படையில் பணியாற்றியவரின் மகளைத் திருமண நாளன்று தன்வசமாக்கிக் கொள்ள முயற்சி செய்தாராம். கோபத்தில் அந்தப் பெண் அரசனைக் கொல்ல, அதையொட்டி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அரண்மனையைத் தீவைத்து எரித்தார்களாம். இதையொட்டியே ஆண்டுதோறும் இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை பீன்ஸ், ஆப்பிள் போன்றவற்றையே ஒருவர் மீது இன்னொருவர் எறிந்து வந்திருக்கின்றனர். அதன் பின்னர் ஆரஞ்சுப் பழத்துக்கு மாறியிருக்கிறார்கள். என்ன ஒன்று, ஒரு நாட்டில் எளிதில் வாங்கி உண்ண முடியாத விலையில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்கள், இன்னொரு நாட்டில் வீணாவதுதான் முரண்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 07 – 2024)