TNPSC Thervupettagam

விபத்தில் சிக்கும் விமானங்கள்!

June 14 , 2019 2038 days 975 0
  • அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டிலிருந்து அருணாசலப் பிரதேசம் ஷியோமி மாவட்டத்துக்கு கடந்த 3-ஆம் தேதி பிற்பகல் ஏ.என்-32 ரக போக்குவரத்து விமானம்  புறப்பட்டது. சீனஎல்லையோரத்தில் அந்த விமானம் வனப் பகுதியின் மேலே பறந்தபோது காணாமல் போனது. அதில் பயணித்த விமானப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிகழாண்டில்
  • நிகழாண்டில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் இந்திய விமானப் படை இழந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக விமானம், உத்தரப் பிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. பிப்ரவரி மாதத்தில் ஒன்றுக்கும்மேற்பட்ட விபத்துகளை இந்திய விமானப்படை எதிர்கொண்டது.
  • பெங்களூருவில்  விமானப்படையின் இரண்டு ஹாக் ரக விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. அதே மாதத்தில் பெங்களூருவில் மிராஜ் 2000 விமானமும், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மிக்-27 ரக  விமானமும் விபத்துக்குள்ளாயின.
  • ]மார்ச் மாதத்திலும் விபத்தின் அணிவகுப்பு தொடர்ந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே  மிக்-27 ரக விமானமும், பிகானீர் அருகே மிக்-23 ரக விமானமும் விபத்துக்குள்ளாயின. ஒன்றன் பின் ஒன்றாக இந்திய விமானப்படை விமானங்களை இழந்து வருவதற்கு அந்த விமானங்கள் மிகவும் பழைய தொழில்நுட்பத்துடன் கூடியவை என்பது மிக முக்கியமான காரணம்.
நவீனமயமாக்கம்
  • இந்திய விமானப்படை இனியும்கூட நவீனப்படுத்தப்படாமல் பெரும்பாலான பழைய விமானங்களையே பயன்படுத்தி வருகிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அதி நவீன ரஃபேல் போர் விமானத்துக்கான ஒப்பந்தம், அரசியல் காரணங்களால் தாமதமானதன் பாதிப்பை இந்திய விமானப் படை எதிர்கொள்கிறது.
  • புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பிப்ரவரி 26-ஆம் தேதி நடத்திய பாலாகோட் விமானத் தாக்குதலுக்கு அடுத்த நாள், காஷ்மீர் மாநிலம் பட்காமில்இந்திய விமானப் படையின் மிக்-17 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 6 விமானப் படையினர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். பாலாகோட் தாக்குதலும், பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலையும் ஏற்படுத்திய பரபரப்பும், தலைப்புச் செய்திகளும், பட்காம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை அநேகமாக இருட்டடிப்புச் செய்து விட்டன. ஊடகங்களில் சிறு தகவலாக மட்டுமே அது வெளியிடப்பட்டது.
நடவடிக்கைகள்
  • இப்போது இந்திய விமானப்படை ஸ்ரீநகர் விமான தளத்தின் தலைமை அதிகாரியைப் பதவி நீக்கம் செய்திருக்கிறது. அதன் பின்னணியில் பட்காம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை இருந்தது இப்போது வெளிவந்திருக்கிறது. பட்காமில் சுட்டு வீழ்த்தப்பட்ட மிக்-17  ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையின் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
  • பாலாகோட் விமான தாக்குதலைத் தொடர்ந்து, விமான பாதுகாப்பு மிக அதிகமான தயார் நிலையில் இருந்தும்கூட, மிக்-17 ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தீவிர விசாரணைக்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை.
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நௌஷேரா என்கிற இடத்தில் இந்திய - பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் மிகக் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது பட்காமில் மிக்-17 ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது.
  • நண்பர்களையும், எதிரிகளையும் அடையாளம் காட்டும் ஐ.எஃப்.எஃப். என்கிற தொலைப்பார்வைக் கருவி, வான்வெளியில் நமது இந்திய விமானங்களை அடையாளம் காட்டும். மிக்-17 ஹெலிகாப்டரில் அந்தக் கருவி செயல்படவில்லையா, இல்லை முடக்கப்பட்டிருந்ததா என்கிற கேள்வி எழுகிறது.
  • சாதாரணமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறக்கும்போது, விமான தளத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் ஐ.எஃப்.எஃப். கருவி  இணைக்கப்பட்டிருக்கும். அதனால், விமான தளத்திலிருந்து விண் ஏவுகணைத் தாக்குதலை நடத்தும்போது, எதிரி விமானங்களைக் குறிப்பிட்டு அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்திவிட முடியும். அப்படி இருக்கும்போது, பட்காமில் வழக்கமான நடைமுறைகளையும், இந்திய விமானப்படையின் தலைமையகத்தின் கண்டிப்பான உத்தரவுகளையும் அந்த ஹெலிகாப்டர் பின்பற்றாமல் போனது ஏன் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டாக வேண்டும்.
காரணங்கள்
  • குறிப்பாக, இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த விமானத் தலைமையும், கட்டுப்பாட்டு நிர்வாகமும் எல்லையில் பதற்றம் நிலவிய சூழலில் ஏன் தீவிர கண்காணிப்புடன் இயங்கவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி. ரேடார்கள், ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட எந்த ஒரு கருவியும் மிக் 17 ரக விமானத்தை எதிரிகளின் ஊடுருவல் விமானம் என்று அடையாளம் காட்டவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  • கடந்த மூன்று மாதங்களாக பட்காம் விபத்து ரகசியமாகவும், மர்மமாகவும் காப்பாற்றப்பட்டது என்பதேகூடக் கண்டனத்துக்குரியது. என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அந்த விபத்துக்குக் காரணமான பல்வேறு நிலையிலுள்ள விமானப் படை அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
  • இந்திய விமானப்படையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, விமானப்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் எந்தவிதத் தளர்ச்சியும்ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, புதிய பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங்குக்கு உண்டு.

நன்றி: தினமணி (14-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்