- மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி, விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனம் நிற்காமல் செல்லும் ‘ஹிட் அண்ட் ரன்’ வழக்குகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டுநர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் பரவியதால், இச்சட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
- 2023 டிசம்பரில் நடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின்போது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 106 (2)பிரிவின்படி, கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து வாகன ஓட்டுநர்கள் காவல் துறையிடமோ மாஜிஸ்திரேட்டிடமோ தெரிவிக்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றால், பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரியவந்தது. பழைய சட்டத்தில் இது இரண்டு ஆண்டுகளாக இருந்தது.
- இந்த மாற்றங்களைக் கண்டித்து, லாரி ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியது. இதன் விளைவாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்குச் சூழல் மோசமானது.
- புதிய சட்டங்கள் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்தப் பிரச்சினையை அரசு திறந்த மனதுடன் அணுகும் என்றும் மத்திய உள் துறை அமைச்சகம் விளக்கமளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தை தொடர்கிறது.
- பொதுவாக இம்மாதிரியான சாலை விபத்துகளை ஏற்படுத்தியதும் கும்பல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க ஓட்டுநர்கள் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் செல்வது வழக்கம். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் சற்று நேரம் கழித்துப் புகார் அளிக்கலாம். ஆனால், அது ‘ஹிட் அண்ட் ரன்’னாகப் பார்க்கப்படக் கூடாது எனச் சொல்லப்படுகிறது.
- விபத்து ஏற்படுத்திக் கண்டறியப்படாமல் இருக்கும் வாகனங்கள் குறித்துத்தான் ‘ஹிட் அண்ட் ரன்’ வழக்கில் விசாரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் குழப்பம் இருப்பதாக ஓட்டுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
- மேலும் மத்தியப் போக்குவரத்து அமைச்சகக் கணக்கெடுப்பின்படி, 3,564 விபத்துகள் நடந்ததற்கு முக்கியக் காரணம், மோசமான சாலைகள்தான் எனத் தெரியவந்திருக்கிறது. பதிவுசெய்யப்படாதவை இவற்றைவிட அதிகமாக இருக்கலாம். மேலும் இப்புதிய சட்டம் மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் பிரிவு 134 இன் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தையும் வழங்கவில்லை.
- இந்த இரு அம்சங்களும் சாலைப் பாதுகாப்பில் முக்கியமானவை. வாகன விபத்துக்கான தண்டனைகள், பாதுகாப்பு, நிவாரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தண்டனைகளை மட்டும் அதிகரித்தால் அது பயனுள்ளதாக இருக்காது. அரசு இதை உணர்ந்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2024)