TNPSC Thervupettagam

விபத்தைக் குறைப்பதில் ஒரு சம்பிரதாயமா

January 12 , 2023 577 days 285 0
  • ஆண்டுதோறும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறை, சாலை பாதுகாப்பு வாரமாக சாலை விதிகள் மற்றும் விபத்து குறைப்பு பற்றிய விழிப்புணர்வு விழாவாக நடத்துகிறது. இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400 முதல் 450 பேர் உயிரிழக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகள் விபரம் வருமாறு:

  • 2021-இல் நடந்த மொத்த சாலை விபத்துகள் எண்ணிக்கை- 4,12,432
  • விபத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை- 1,53,972
  • விபத்தில் காயம்பட்டவர்கள் எண்ணிக்கை - 3,84,448
  • 2020-ஐ விட 2021-இல் விபத்துகள் அதிகம் (%)  - 12.6%
  • 2020-ஐ விட 2021-இல் விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அதிகம் (%)- 16.9%
  • 2020-ஐ விட 2021-இல் விபத்தில் காயம்பட்டவர்கள் அதிகம் (%)  -  10.39
  • 2021-இல் தேசிய நெடுஞ்சாலைகளில்  நடந்த மொத்த சாலை விபத்துகள்  - 1,28,825
  • 2021-இல் மாநில நெடுஞ்சாலைகளில்  நடந்த மொத்த சாலை விபத்துகள்-  96,382
  • 2021-இல் பிற சாலைகளில்  நடந்த மொத்த சாலை விபத்துகள்-1,87,225

இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை வகுத்த நிலையான வளர்ச்சி இலக்கினை - 3.6 (சாலை விபத்துகள்) எப்போது அடையும்?

  • சீரான வேகத்தில் தேவையான பொருளாதார செலவிலும் ஆட்சியாளர்களின் விருப்பம் மற்றும் ஒத்துழைப்புடன் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, 2020-இல் நடந்த  சாலைப் போக்குவரத்து இறப்புகளை 2030க்குள் பாதியாகக் குறைக்கும் நிலையான வளர்ச்சி இலக்கை (SDG-3.6) அடைய வழிவகுக்கிறது . விபத்துகளைக் குறைப்பதில் நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டிலும் மனித தவறுகளின் விளைவாக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால் சாலை அமைப்புகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக விபத்துகள் ஏற்பட காரணம்தான் என்ன?

  • 40 கிமீ/மணி அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய 86% இந்திய சாலைகளில் பாதசாரிகளுக்கு இன்னும் முறையான நடைபாதைகள் இல்லை.
  • 80 கிமீ/மணி அல்லது அதற்கும் அதிகமான வேகம் செல்லக்கூடிய இந்திய சாலைகளின் மத்தியில் 76% மத்திய தடுப்புச்சுவர் கொண்டு பிரிக்கப்படவில்லை. இதனால், கணிக்கக்கூடிய சராசரி இடைவெளியில் நேருக்கு நேராக அதிகமாக சாலை பயனாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.
  • 35% இந்திய சாலைகளில் பாதசாரி  கடக்கும் பாதைகள் மிக  மோசமான நிலையில் உள்ளன.
  • சாலைகளின் தரமதிப்பீட்டில் ஒன்று அல்லது 2 நட்சத்திர அளவீடு கொண்ட 50% சாலைகள் இந்தியாவில் உள்ளன.
  • இந்தியாவில் 9.91% பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் இயக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவில் ஏழைகளின் பங்கு 25.01% (தேசிய சராசரி). ஸ்போர்ட்ஸ் பைக்குகள், அதிவேகத்தில் செல்லக்கூடிய  வாகனங்களை நடுத்தர வர்க்கம்/கீழ் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் வாங்கும் சக்தி கொண்டுள்ளதால், அதை தங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  எளிதாக வாங்கிக்கொடுத்துவிடுகின்றனர். இதனால் 25 முதல் 30 வயதிற்குள் 25% பேர் விபத்துகளுக்கு பலியாக வழிவகுக்கிறது.
  • இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் 700 கண்மறைவு பிரதேசங்கள் (Blind Spots) 10% உள்ளன. இது பெருமளவில் குறைக்கப்பட வேண்டும். (உலகம் முழுவதும் 80,000 கண்மறைவு பிரதேசங்கள் உள்ளன). நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கண்மறைவு பிரதேசங்கள் (100) உள்ளது குறிப்பிடத்தக்கது.
  •  2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிவேகம் காரணமாக சாலையில்  90,000 குடும்பத் தலைவர்கள் இறந்துள்ளனர்.
  • திட்டமிடப்படாத, தன்னிச்சையான, பொறுப்பற்ற மற்றும் அலட்சிய அணுகுமுறைகள் சாலை பிரச்னைகளை தீர்க்காது.
  • சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை விஷயங்களை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் பின்வருவனவற்றைச் நாம் செய்ய வேண்டும்:
  • அரசு மற்றும் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் சாலை விபத்தை குறைக்கும் உத்திகளை கொண்ட திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • சாலை விபத்தைக் குறைப்பதற்கான திட்டத்திற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கவேண்டும்.
  • சாலைப் பாதுகாப்புக் கல்வியை உயர்நிலைப் பள்ளியிலிருந்தே சிறந்த தரத்துடன் கூடிய பாடத்திட்டம்  புகுத்தப்பட வேண்டும் மற்றும் அதை தொடர்ந்து கல்லூரிப் பாடத் திட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  • கைமுறை செயல்பாட்டில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்பாட்டு முறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  • அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வாகனங்களின் வேகவரம்பினை மணிக்கு 80 கிமீ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்
  • சாலைப் பாதுகாப்பு ஆணையத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு உத்திகள், அடையக்கூடிய இலக்குகள் மற்றும் செயல் திட்டத்தினை உருவாக்க உத்தரவிட வேண்டும்
  • சாலை விதிகளை அமல்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பாக சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை விபத்துகளை தடுப்பதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கொண்டதாக மாற்ற வேண்டும்.
  • நமது சாலைகளில் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான காயங்களைத் தடுக்க பாதுகாப்பான சாலைகள் உதவும். சாலைகளின் தரமதிப்பீட்டில் 3 அல்லது அதற்கு மேலான நட்சத்திர அளவீடு கொண்ட  சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
  • சாலைப் பாதுகாப்பு விஷயங்களில் உண்மையான தகுதி, பயிற்சி பெற்ற, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை இந்தியாவில் இருக்கிறது. அரசாங்கத்தின் முன்முயற்சியாக அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு கல்வியினை பட்டய, பட்டப் படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.
  • இவற்றை செய்தாலே பெரும்பாலான சாலை விபத்துகள் குறையும்.

விபத்தினை விதியென்று கொள்வோம்!

ஆராய்ந்து மதி கொண்டு வெல்வோம்!

நன்றி: தினமணி (12 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்