- விமானநிலையங்களில் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுவது உண்டு. விமானநிலைய நடைமுறை, அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன எனச் சரியாகத் தெரியாமல் வாதிடுபவர்களே அதிகம். என் அனுபவத்தில் நான் கண்ணுற்ற சில விஷயங்களைப் பதிவுசெய்கிறேன். நான் 1995 முதல் விமானப் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
- அப்போதெல்லாம் தமிழகக் காவல் துறைக் காவலர்கள்தாம் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர். 2000ஆம் ஆண்டுக்குப் பிற்பாடுதான் இது சிஐஎஸ்எஃப் (CISF) காவலர்களுக்குக் கைமாற்றப்பட்டது. பன்னாட்டு அளவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததுதான் அதற்குக் காரணம்.
- சிஐஎஸ்எஃப் 1969இல் நிறுவப்பட்டது. பொதுத்துறைத் தொழிற்சாலைகள், அணுசக்தி நிலையங்கள், சுரங்கங்கள், எண்ணெய் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், துறைமுகங்கள் முதலான மத்திய அரசு நிறுவனங்களை சிஐஎஸ்எஃப் காவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் விமானநிலையங்களும் பின்னாட்களில் சேர்க்கப்பட்டன.
- பாதுகாப்பின் பொருட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, குடிமக்களாகிய நாம் ஒத்துழைத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், காவலர்கள் இந்தி மட்டுமே பேசினார்கள் என்றால் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் அறிந்த பயணிகள் அவஸ்தைக்குள்ளாவார்கள். சரி, விமானநிலையத்தில் நடைபெறும் சோதனைகள் எப்படியானவை?
அலகீட்டுச் சோதனை
- விமானநிலையத்தின் புறப்பாட்டு வாயிலில் நுழையும் முன்பே பயணிகளின் பயணச்சீட்டும் அடையாள அட்டையும் (அயல்நாட்டுப் பயணமாக இருந்தால் கடவுச்சீட்டும்) சோதிக்கப்படும். சோதிப்பவர்கள் சிஐஎஸ்எஃப் காவலர்கள். அடுத்து, விமான சேவை நிறுவனத்திடம் சரக்குப் பொதியைக் கையளித்துவிட்டு, அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். மூன்றாவது கட்டம் பாதுகாப்புச் சோதனை.
- பயணிகளும் அவர்கள் கையில் கொண்டுசெல்லும் கேபின் பொதியும் சோதிக்கப்படும். சோதிப்பவர்கள் சிஐஎஸ்எஃப் காவலர்கள். நமது சட்டைப் பைகளிலும் கால்சராய்களிலும் உள்ள மணிபர்ஸ், சாவிக்கொத்து, கைப்பேசி முதலானவற்றை கேபின் பொதிக்குள் வைத்தோ அல்லது திறந்த மரவையில் (ட்ரே) வைத்தோ அலகீட்டுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பயணியையும் காவலர்கள் சோதிப்பார்கள்.
- பர்ஸுக்குள் இருக்கும் நாணயங்களையும் பைக்குள் இருக்கும் மின்னணுச் சாதனங்களையும் அலகீட்டுக் கருவியே தெளிவாகக் காட்டிவிடும். என் அனுபவத்தில் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு விமானநிலையத்திலும் அவற்றை வெளியே எடுத்துத் தனியாகச் சோதிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தியதில்லை.
- அலகீட்டுச் சோதனையின்போது சிலர் தங்கள் பர்ஸுகளையும் கைப்பேசிகளையும் தாமாக மரவையில் வைப்பார்கள். சிலர் பாதுகாப்புக் கருதி தங்கள் பயணப்பொதிக்குள் வைப்பார்கள். அவரவர் விருப்பம். மடிக்கணினியை மட்டும்தான் மரவையில் வைக்க வேண்டும்.
மொழிப் பிரச்சினை
- சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமானநிலையங்கள் வழியாகப் பலமுறை பயணித்திருக்கிறேன். ஒருமுறைகூடத் தமிழ் பேசும் காவலரை நான் எதிர்கொண்டதில்லை.
- ஒரு பயணத்தின்போது அலகீட்டுச் சோதனைக்கான வரிசை நீண்டிருந்தது. ஓரிடத்தில் வரிசை U வடிவில் திரும்பியிருந்தது. அப்படித் திரும்பியது தெரியாமலோ அல்லது தெரியாததுபோல் அபிநயித்துக்கொண்டோ சில பயணிகள் இடையில் நுழைந்து இன்னொரு வரிசையை உருவாக்கினர். ‘வரிசையை ஒழுங்குபடுத்தக் கூடாதா?’ என்று அங்கிருந்த பெண் காவலரிடம் ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் இந்தியில் பதிலளித்தார்: ‘அது என்னுடைய வேலை அல்ல.’
- ‘அப்படியானால் அது யாருடைய வேலை?’ என்று கேட்டேன். இந்த முறை அவர் பதிலளிக்கவில்லை. எங்கள் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்த ஓர் அதிகாரி என்னிடம் வந்தார். ‘காவலரின் பதிலைப் பொருட்படுத்தாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டார். இரண்டாவது அதிகாரி ஆங்கிலத்தில்தான் பேசினார்.
- ஆனால் அவரும் தடுமாற்றத்துடன்தான் ஆங்கிலத்தில் பேசினார். அவரும் வரிசையை ஒழுங்குபடுத்தவில்லை. இருவரும் பயணிகளோடு உரையாடுவதைத் தவிர்த்தார்கள் என்பது என் அனுமானம். மொழிச் சிக்கல்தான் காரணமாக இருக்க வேண்டும்.
தமிழறிந்த காவலர்
- அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை, ரயில்வே துறை முதலான பல மத்திய அரசுத் துறைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. இங்கெல்லாம் கணிசமான தமிழர்கள் பணியாற்றுகிறார்களே? தமிழ் தெரியாத ஒரு தபால்காரரை நினைத்துப் பார்க்க முடியுமா?
- சிஐஎஸ்எஃப்-இல் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் தமிழ் பேசக்கூடிய சில நூறு பேரைத் தமிழக விமானநிலையங்களில் பணியமர்த்தக் கூடாதா? எல்லா விமானநிலையங்களும் தமிழ் தெரியாத காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பது தற்செயலானதா? விமானநிலையங்களில் அந்தந்த மாநில மொழி பேசும் காவலர்களை சிஐஎஸ்எஃப் நியமிக்க வேண்டும். அல்லது மாநில அரசின் காவலர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதுதான் பலரது கோரிக்கை.
- இந்தியா ஒரு கூட்டாட்சி; தமிழகம் இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநிலம். மேலதிகமாக, பயணிகளிடம் கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானது. சிஐஎஸ்எஃப் இவற்றையெல்லாம் பரிசீலிக்குமா?
நன்றி: தி இந்து (08 – 01 – 2023)