TNPSC Thervupettagam

விமானப் போக்குவரத்து சேவை குறித்த தலையங்கம்

December 4 , 2023 211 days 143 0
  • சந்தைப் பொருளாதாரம் நுகா்வோருக்குச் சாதகமாக இருக்கும் என்பதுதான் பொதுவான புரிதல். சந்தையில் போட்டி நிலவுவதால் குறைந்த விலையில் தரமான பொருள்களை நுகா்வோருக்கு வழங்கி அவா்களை வாடிக்கையாளா்களாக்குவதில் நிலவும் போட்டி, சாதகமாக மாறும். பலமுனைப் போட்டி ஏற்படாமல், குறிப்பிட்ட சில தயாரிப்புகளும் நிறுவனங்களும் மட்டுமே களத்தில் இருக்கும் சூழலில் அதே சந்தைப் பொருளாதாரம் நுகா்வோருக்கு பாதகமாக மாறிவிடும்.
  • ஒருசில மிக முக்கியமான துறைகள் போட்டியாளா்கள் இல்லாததால் இந்தியாவில் சுரண்டலாக மாறியிருக்கின்றன. வங்கித் துறை, காப்பீட்டுத் துறை போன்றவற்றில் பல தனியாா் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், அதனால் நுகா்வோா் பலன் அடைந்ததாகக் கூறிவிட முடியாது. அதேபோல, தொலைத்தொடா்பு துறையிலும், எதிா்பாா்த்தது போல போட்டி இல்லாததால் இப்போது நுகா்வோா் பயனடைவது இல்லை.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத் துறை எதிா்பாராத அபரிமிதமான வளா்ச்சியை அடைந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல விமானப் போக்குவரத்தின் வளா்ச்சியும் காணப்படுகிறது. இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்லாமல், சிறு நகரங்கள்கூட விமான சேவையால் இணைக்கப்பட்டிருப்பது நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகளில் குறிப்பிடத்தக்கது என்பது உண்மை. சாமானியா்களும்கூட விமானத்தில் பறக்கும் நிலை, இந்தியப் பொருளாதார வளா்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • அரசு முற்றிலுமாக விமான சேவையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது. அரசு நிறுவனமாக இருந்த ‘ஏா் இந்தியா’வின் இழப்புகளை, மக்கள் வரிப்பணத்தால் ஈடுகட்டும் வழக்கத்துக்கு மோடி அரசு முற்றுப்புள்ளி வைத்தது. மிகப் பெரிய இழப்புக்கு உள்ளான ஏா் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, கேட்பு இல்லாமல் பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்தது. கடைசியில் டாடா நிறுவனம் கேட்ட விலைக்கு, அவா்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஏா் இந்தியாவை அவா்களுக்கு விற்றது என்பதைவிட, அரசு கைகழுவி நிம்மதிப் பெருமூச்சுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
  • உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான சேவை அரசால் நடத்தப்படுவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளே தனியாா்மயப்படுத்திவிட்ட நிலையில், இந்தியாவும் ஏா் இந்தியா நிா்வாகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதில் வியப்பில்லை. நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனது சேவையை நடத்திக் கொண்டிருந்த ஏா் இந்தியா நிறுவனம் விடைபெற்றதைத் தொடா்ந்து, இந்திய விமான சேவை இப்போது முற்றிலுமாக தனியாா்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், நியாயமாக நுகா்வோா் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால், நடப்பது அதுவல்ல.
  • கடந்த நவம்பா் மாதம் இதுவரை இல்லாத அளவு உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து உச்சத்தைத் தொட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது போலவே, பயணக் கட்டணமும் கடுமையாக உயா்ந்ததுதான் வேடிக்கை. கடந்த ஆண்டு டிசம்பா் மாத கட்டணத்துடன் ஒப்பிடும்போது சென்ற மாத உள்நாட்டு விமான கட்டணம் 40% அதிகம்.
  • பண்டிகைக்கால தேவையும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் விமான கட்டணத்தை வானளாவ உயா்த்தியது. சா்வதேச விமான கட்டண உயா்வு சுட்டிக்காட்டப்படுகிறது என்றாலும், இந்த அளவிலான கட்டண அதிகரிப்பை அதனால் நியாயப்படுத்திவிட முடியாது.
  • விமான போக்குவரத்து இயக்ககத்தின் இணையதளத்தின்படி, இந்தியாவில் இப்போது இரண்டு விமான சேவை நிறுவனங்கள் மட்டுமே முக்கியமாக இயங்குகின்றன. அதிலும் 62.6% உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை இன்டிகோ நிறுவனத்தைச் சாா்ந்தது. ஏா் ஏஷியா (6.6%), ஏா் இந்தியா (10.5%), விஸ்தாரா (9.7%) என்று 26.8% டாடா குழுமத்தின் விமான நிறுவனங்களின் பங்கு.
  • ஏறத்தாழ 90% விமான சேவையை இன்டிகோவும், டாடா குழுமமும் கையாளும் நிலையில், விரைவிலேயே ஏனைய நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறும் என்று எதிா்பாா்க்கலாம். விமான சேவைச் சந்தையில் இரு நிறுவனங்கள் மட்டுமே இயங்கும் நிலை ஏற்பட்ட பிறகு விமானக் கட்டணம் மேலும் உயரும் ஆபத்து காணப்படுகிறது.
  • இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவுமானால், அந்த ஆரோக்கியமான போட்டியின் விளைவாக நுகா்வோருக்கு மேம்பட்ட சேவையும், குறைந்த கட்டணம் கிடைக்கும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை. ஆனால், பெரும்பாலும் அதுபோல நடப்பதில்லை என்பதுதான் நுகா்வோரின் அனுபவம்.
  • போட்டியின்மை மட்டுமே கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு துணைக்களப் பொருள்களின் (சப்ளை செயின்) தட்டுப்பாட்டால் இரண்டு முக்கியமான விமான நிறுவனங்களின் தயாரிப்பு குறைந்திருக்கிறது. விமானத் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்டவைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏா் பஸ், போயிங் இரண்டின் உற்பத்தியையும் பாதித்திருக்கின்றன. போதுமான அளவு விமானங்களை அதிகரிக்க முடியாமல் போனதும் கட்டணங்கள் அதிகரித்ததற்குக் காரணங்கள்.
  • போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருப்பது போல அரசு விமான சேவை கட்டணத்துக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், ‘சாமானியனுக்கும் விமான சேவை’ என்கிற பிரதமரின் கனவு, பகல் கனவாகிவிடும்.

நன்றி: தினமணி (04 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்