TNPSC Thervupettagam

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்த தலையங்கம்

January 18 , 2022 930 days 364 0
  • இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக் கிழமை அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல.
  • ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், அவர் இப்படி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டிருப்பதுதான் எதிர்பாராதது.
  • நான்கு மாதங்களுக்கு முன்பு டி 20 கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைமையிலிருந்து அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அகற்றியது.
  • குறுகிய நேர ஆட்ட (ஒயிட் பால்)தொடர் களுக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்பதால்தான் அவர் விலக்கப்பட்டார் என்கிற கிரிக்கெட் வாரியத்தின் வாதம் சர்ச்சையானது.
  • அப்போதே விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்கலாமோ என்று அவரது ரசிகர்கள் கருதுவதை புரிந்துகொள்ள முடிகிறது.
  • இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான 33 வயது விராட் கோலி, இனிமேல் இந்திய அணியின் வீரராக மட்டுமே தொடருவார்.
  • பேட்ஸ்மேனாக உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய வெற்றிகளை குவித்த விராட் கோலி, உலகக் கோப்பையை தனது தலைமையில் வெற்றி பெறாமல் விலகுகிறார் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது.

விராட் கோலிக்கு விடை!

  • உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றவர் விராட் கோலி.
  • கிரேம் ஸ்மித் (53), ரிக்கி பான்டிங் (48), ஸ்டீவ் வாக் (41) ஆகியோரை அடுத்து நான்காவது இடத்தில் 40 டெஸ்ட் வெற்றிகளுக்கு கேப்டனாக தலைமை வகித்த பெருமை அவருக்கு உண்டு.
  • அணியினரை வழிநடத்துவது என்பது ஒருவகை. அணியினரைத் தனது தலைமைப் பண்புகளால் உற்சாகப்படுத்தி உருவாக்குவது என்பது இன்னொருவகை. இம்ரான் கான் (பாகிஸ்தான்),
  • அர்ஜுன ரணதுங்க (இலங்கை), ஹான்ஸி குரோனியே (தென்னாப்பிரிக்கா) வரிசையில் தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்கியவர்களின் வரிசையில் விராட் கோலிக்கும் ஓர் இடம் உண்டு.
  • 2014-இல் டெஸ்ட் கிரிக்கெட் தலைமையிலிருந்து மகேந்திர சிங் தோனி விடைபெற்றபோது, அந்த இடத்திற்கு வந்தவர் விராட் கோலி.
  • ஒருநாள் போட்டி, டி 20 போட்டி ஆகியவற்றின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விடைபெற்ற போது அந்த பொறுப்பு இயல்பாகவே கோலியைத் தேடி வந்தது.
  • ஒரு பேட்ஸ்மேன் என்கிற அளவிலும், கேப்டன் என்கிற நிலையிலும் அதன் பிறகு விராட் கோலியின் வெற்றிகள் தொடர்கதையாகின.
  • ஒருநாள், டி 20, டெஸ்ட் என்கிற மூன்று பிரிவுகளிலும் இந்தியா பல வெற்றிகளை கோலியின் தலைமையில் அடைந்தது.
  • விராட் கோலியின் சாதனைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர் கேப்டனாக பதவி ஏற்பதற்கு முன்பு இருந்த நிலைமை குறித்து சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
  • எம்.எஸ். தோனி தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்திலும், டி 20 பந்தயத்திலும் இந்திய அணி அடைந்த வெற்றியை, டெஸ்ட் பந்தயங்களில் அடையவில்லை.
  • ஐந்து நாள்களுக்கு நீளும் டெஸ்ட் பந்தயங்களில், அணியினரின் உற்சாகத்தை தக்க வைத்து அவர்களை ஒருங்கிணைக்க இயலாத பலவீனம் தோனியின் தலைமைக்கு இருந்தது.
  • உலக அளவில் டெஸ்ட் பந்தயங்களில் இந்தியா 7-ஆவது இடத்தில் இருந்தபோது கேப்டனாக கோலி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு தொடர்ந்து பல வெற்றிகளால் முதலிடத்தை எட்ட முடிந்தது.
  • கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது; இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தை வென்றது; 2017, 2018, 2019 ஆண்டுகளில் தலைசிறந்த ஆட்டக்காரருக்கான சர்வதேச விருதைப் பெற்றது என்று பல சாதனைகள் விராட் கோலிக்கு உண்டு.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்று வரை சென்ற இந்திய அணி அவர் தலைமையில் அதை வெல்ல முடியாமல் போனது என்பது மட்டுமே ஒரேயொரு குறை.
  • கிரிக்கெட்டின் மூன்று பிரிவு ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு விளையாடும் விராட் கோலியின் சராசரி ரன்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். 70 தடவை சதம் அடித்த சாதனையும் உண்டு.
  •  சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பான்டிங் (71) என்று இருவர் மட்டுமே அவரை முந்திய சதம் அடித்த சாதனையாளர்கள்.
  • 68 டெஸ்ட் பந்தயங்களில் 40 பந்தயங்களை வென்று சாதனை படைத்திருக்கும் விராட் கோலி, அவரது ஏழு ஆண்டு தலைமையில் ஐந்து தொடர் ஆட்டங்களில்தான் வெற்றி காண முடியவில்லை என்கிறது புள்ளிவிவரம்.
  • விராட் கோலியின் தலைமையின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவரிடம் காணப்பட்ட அசாத்திய தன்னம்பிக்கை.
  • வெற்றிபெற முடியும் என்கிற அவரது வெறித்தனமான நம்பிக்கையை, தனது அணியினருக்கும் அவரால் ஏற்படுத்த முடிந்தது என்பதால்தான் அவரது தலைமைப் பண்பு பல பலவீனங்களுக்கு இடையிலும் பாராட்டப்பட்டது.
  • மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியிலும் ஆத்திரத்தில் கேப்டன் விராட் கோலி வெளிப்படுத்தும் அனல்கக்கும் விமர்சனங்களும், வார்த்தைகளும் விவாதப்பொருளாகி இருக்கின்றன.
  • ஆனால், அவரது சாதனைகளுக்கு முன்னால் அவை புறந்தள்ளப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான சர்ச்சையைத் தொடர்ந்து, கோலி கேப்டன் பதவியிலிருந்து வெளியேறுகிறார் என்பது நெருடலாகத்தான் இருக்கிறது. விராட் கோலி விட்டுச் செல்லும் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது புதிராக இருக்கிறது.

நன்றி: தினமணி  (18 - 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்