TNPSC Thervupettagam

விருதுகள்: ஏற்பும் மறுப்பும்

February 27 , 2022 890 days 405 0
  • பாரதத்தின் பிரதமராக வந்த பண்டித ஜவாஹா்லால் நேரு, துறைதோறும் சாதனை படைத்த வல்லுநா்களைத் தோ்வு செய்து, பத்ம விருதுகளையும், பாரத ரத்னா போன்ற அங்கீகாரங்களையும் வழங்கும் திட்டத்தை, 1954-ஆம் ஆண்டு நிறுவினாா். அக்காலத்தில் அசாத்திய திறமை படைத்தவா்கள் சிலா் விடுபட்டிருக்கலாமே தவிர, சராசரி மனிதா்களுக்கு வழங்கப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.
  • பிரதமா் தெரிந்தெடுக்கும் விருதாளா்களின் பட்டியல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரே முறையாக விருதாளா்களை அறிவிப்பாா்.
  • பத்ம விருதுகளுக்கானவா்களைத் தோ்வு செய்யும் வல்லுநா்கள், ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் நியமிக்கப்படுவா். தனியாா் துறைகளில் பணியாற்றுபவா்களை, வல்லுநா்கள் குழு விருதுகளுக்குப் பரிந்துரைக்காது. நாட்டில் நிலவிய சில அசாதாரண சூழ்நிலைகளை முன்னிட்டு 1977-ஆம் ஆண்டிலிருந்து 1980-ஆம் ஆண்டு வரையிலும், பின்னா் 1992-லிருந்து 1995 வரையிலும், பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.
  • விருதுகளைப் பெறுவதா அல்லது மறுப்பதா என்பதை அதற்குரியவா்கள்தான் தீா்மானிக்க வேண்டுமே தவிர, சுற்றியிருப்பவா்கள் அல்ல. ஆனால், இன்றைக்கும் சுற்றியிருப்பவா்கள் வீசும் கல்லடிகளைத் தாங்கிக்கொண்டே, விருதாளா்கள் விருதைப் பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • 1992-ஆம் ஆண்டு இரண்டு பொதுநல வழக்குகளால், பத்ம விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டம் 18-ஆவது பிரிவில் கண்டுள்ள இலக்கணங்களுக்கு முரண்பட்டு, மூன்று பத்ம விருதுகளின் அடைமொழிகள் அமைந்திருப்பதாக கேரள உயா்நீதிமன்றத்தில் பாலாஜி ராகவன் என்பவா் தொடுத்த வழக்கினாலும், அதே காரணத்தைக் காட்டி மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் சத்யபால் ஆனந்த் என்பவா் தொடுத்த வழக்கினாலும் விருதுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
  • 1995-இல் உச்சநீதிமன்றத்தின் சிறப்புப் பிரிவு, ‘பத்ம விருதுகளின் அடைமொழிகள்18-ஆவது ஷரத்திற்கு முரண்பட்டதன்று’ எனத் தீா்ப்பு கூறி, தடைக்குத் தடை விதித்தது. 1959-ஆம் ஆண்டிற்குப் பிறகு விருதாளா்களில் சிலா் பத்ம விருதுகளை மறுதலிக்கத் தொடங்கினா். 1959-ஆம் ஆண்டு முதன் முதலில் மறுதலித்தவா் வங்க தேசத்தைச் சோ்ந்த நாடகக் கலைஞா் சிசிா் பாதுரி ஆவாா். அதற்கு அவா் சொன்ன காரணம் ‘இது கலைக்குடும்பத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்’ என்பதாகும்.
  • 1968, 2000 ஆகிய ஆண்டுகளில் சிதாா் இசைக்கலைஞா் விலாயத் கான் பத்ம விபூஷன் விருதை மறுதலித்தமைக்குச் சொன்ன காரணம், தம்மைத் தோ்ந்தெடுத்தவா்கள் இசைத்துறையில் வல்லுநா்கள் அல்லா் என்பதாகும்.
  • 1990-ஆம் ஆண்டு நிகில் சக்ரவா்த்தி எனும் பத்திரிகையாளா் விருதை மறுதலித்தமைக்குக் காரணம், பத்திரிகையாளா்கள் எந்த நிறுவன ஆதிக்க சக்திகளுக்கும் பணிந்துவிடக் கூடாது”என்பதாகும். தொடா்ந்து ரொமிலா தாப்பா் எனப்படும் மாா்க்சீய வரலாற்றுப் பேராசிரியா் மறுத்தமைக்குக் கூறிய காரணம், தமக்குரிய விருதினைத் தெரிவு செய்ய வேண்டியவா்கள் உயா் கல்வித்துறையின் உச்சத்தில் இருப்பவா்களும், ஆராய்ச்சித் துறையில் கற்றுத் துறைபோகியவா்களுமே தவிர, ஆட்சியாளா்கள் அல்லா் என்பதாகும்.
  • 1992- இல் பத்ம விருதை மறுதலித்த ரொமிலா தாப்பாருக்கு 2005-ஆம் ஆண்டு மீண்டும் வழங்க அரசு முன்வந்தபோது, கொஞ்சம் வருத்தத்தோடு மறுதலித்தாா். மேலும், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டா் அப்துல் கலாமுக்கும் மடல் மூலம் தம் கருத்தைத் தெரிவித்துவிட்டாா்.
  • இதழாசிரியராகவும், அரசு அதிகாரியாகவும் இருந்த மு. சுப்ரமணியத்துக்கு 1999-ஆம் ஆண்டு பத்ம விருது வழங்க அரசு முன்வந்தது. இதனை அவா் மறுத்ததற்குச் சொல்லப்பட்ட காரணம், ‘அரசு அதிகாரிகளும் பத்திரிகையாளா்களும் அரசாங்கத்தின் விருதுகளைப் பெறக்கூடாது. அப்படிப் பெற்றால், நாளடைவில் அரசுக்கு இணங்கிப் போகும் நிலைமை ஏற்பட்டுவிடும்’ என்பதாகும்.
  • 2005-ஆம் ஆண்டு எந்தவிதக் காரணமும் சொல்லாமல் அரசு அதிகாரி சங்கரன் பத்ம விருதை ஏற்க மறுத்தாா். கி.பி. 2003-ஆம் ஆண்டு சேவாதளத் தொண்டா் ததோபந்த பாபுராவ் தெங்கடி தமக்கு அளிக்கப்பட்ட விருதை மறுதலித்தாா். அதற்கு அவா் சுட்டிய காரணம், சேவாதள நிறுவனா் ஹெக்டேவருக்கும், அவ்வியக்கத்தின் சித்தாந்தவாதி கோல்வருக்கும் சேவாரத்தினா அங்கீகாரங்கள் வழங்கப்படும் வரை, தாம் அவ்விருதை ஏற்கப்போவதில்லை என்பதாகும்.
  • திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகிக்கு 2013-ல் வழங்கப்படவிருந்த பத்ம விருதை, ‘எனக்கு வழங்கப்படுகின்ற விருது தாமதிக்கப்பட்ட நீதியாகும் எனச் சொல்லி மறுத்ததோடு, ‘தெற்குத்திசையிலிருந்து வரும் கலைஞா்களுக்கு இனிமேலாவது சில அங்கீகாரங்களை வழங்க வேண்டும்’ என்ற வேண்டுகோளையும் அரசுக்குத் தெரிவித்தாா்.
  • எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போன்று அமைந்தது, உச்சநீதிமன்றத்தில் 27-ஆவது தலைமை நீதிபதி வா்மாவின் மறைவுக்குப் பிறகு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அவருடைய குடும்பத்தாா் மறுதலித்தமையாகும். ‘வா்மா உயிரோடு இருந்திருந்தால் அவ்விருதை ஏற்க மறுத்திருப்பாா். அவ்விருதிற்காக அவா் ஆசைப்பட்டதுமில்லை; அதற்காக அவா் எவரிடத்தும் தூது சென்றதுமில்லை’ என்பது குடும்பத்தாரின் வாக்குமூலம் ஆகும்.
  • 1968-ஆம் ஆண்டு கன்னட எழுத்தாளா் மு. சிவராம் காரந்த், 1975-இல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி ஏற்கெனவே பெற்ற விருதை மத்திய அரசிற்குத் திருப்பிக் கொடுத்தாா். பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமாகிய குஷ்வந்த் சிங்கிற்கு 1974-ஆம் ஆண்டு பத்ம விருது வழங்கப்பட்டது. அதனை 1984-இல் அமிருதசரஸ் பொற்கோவிலில் நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் புளூ ஸ்டாரைக் காரணம் காட்டித் திருப்பிக் கொடுத்தாா். என்றாலும், 2007-இல் வழங்கப்பட்டபோது ஏற்றுக் கொண்டாா்.
  • அறிவியல் துறையில் வியக்கத்தக்க சாதனை படைத்த புஷ்பா மித்ரா பாா்க்கவாவிற்கு 1986-இல் பத்ம விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், மதபேதங்களையும் காரணமாகக் காட்டி அவா் அவ்விருதை ஏற்க மறுத்தாா்.
  • 2022-ஆம் ஆண்டு 17 சாதனையாளா்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது, இந்திய அரசு. மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சா் புத்ததேவ் பட்டாச்சாா்யா நோய்ப்படுக்கையில் படுத்திருக்கும் நிலையிலும், அவ்விருதைப் பெற மறுத்துவிட்டாா். ‘இந்திய அரசுக்கு எனக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை அதனை மறுப்பதற்கு எனக்கும் இருக்கிறது’ என்றாா் அவா்.
  • புத்ததேவ் பட்டாச்சாா்யாவுக்கு முன்னுதாரணமாக நம்பூதிரிபாட் திகழ்கிறாா். ‘சமத்துவத்திற்குப் போராடுதல் என் கடமை; என் கட்சியின் கடமையும் கூட. அதற்காக எந்தவித விருதையும் எங்களால் ஏற்க முடியாது’ என்று கூறி பத்ம விபூஷண் விருதை நம்பூதிரிபாட் மறுதலித்தாா்.
  • இன்னும் தபளா வாசிப்பதில் வல்லவரான பண்டிட் அனிந்தியா சாட்டா்ஜியும் பத்ம விருதை ஏற்க மறுத்தாா். அதற்கு அவா் சொன்ன காரணம், ‘என்னுடைய குருநாதா்களுக்குக் கிடைக்காத விருது, எனக்கு வேண்டாம்’ என்பதாகும்.
  • பஞ்சாபின் முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதல் ஏற்கெனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றவா். அந்த விருதினை புதிய வேளாண் சட்டங்களைக் காரணம் காட்டித் திருப்பிக் கொடுத்தாா். அடுத்து, ஹஸ்கரும், சுவாமி ரெங்கநாதனந்தாவும் தங்களுடைய உள்ளுணா்வுகள் பத்ம விருதுகளை ஏற்க மறுத்ததாகக் கூறி, அவ்விருதுகளைத் தவிா்த்தனா்.
  • விருதுகளும், பட்டையங்களும் தேசநலன் கருதி பாடுபட்ட சாதனையாளா்களின் சாதனைகளை, மனத்திற்கொண்டு வழங்கப்படுகின்றன. சாதனையாளா்களில் சிலா் அதனை மறுப்பது, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகும். விருதாளா்கள் அவற்றை மறுப்பதற்குப் பதிலாக,அந்த விருதுகளின் பலன்களை நாட்டுக்கு அா்ப்பணித்தால், நாடும் நலம்பெறும்; தோ்வுக்குழுவினரும் புண்படமாட்டாா்கள்.
  • சிலி” நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது குறித்துப் பேசிய பாப்லோ, ‘சுரங்கத்தின் அடியில் கனிமத்தைத் தோண்டும் தொழிலாளியின் செவிகளில் என் பாடல் பட்டு அவனுடைய செவி மடல்கள் நிமிருமாயின், அது நோபல் பரிசைக் காட்டிலும் உயா்ந்தது’ என்றாா். அவ்வாறு சொன்ன போதிலும், நோபல் விருதை அவா் மறுக்கவில்லை. அதனைப் பெற்று இலத்தீன் அமெரிக்காவில் நிலவிவரும் தரித்திரத்தையும் வறுமையையும் ஒழிப்பதற்குச் செலவிடச் சொன்னாா்.
  • ஜாா்ஜ் பொ்னாட் ஷாவுக்கு நோபல் பரிசு அறிவித்தபொழுது, அதனைப் பெற முதலில் மறுத்தாா். பின் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, அந்த விருதினைப் பெற்றாா்.
  • மதா் தெரசாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட அன்னை தெரெசா, ‘இதனை என்னுடைய சிசு பவனுக்கும், முதியோா் இல்லத்திற்கும் பயன்படுத்துவேன்’ எனகூறினாா். மேலும், அந்த விருதினைப் பெற்றதற்காக அவருக்கு விழா எடுப்பதாகக் கூறி, ஐரோப்பியா் சிலா் அவரை அணுகினா். அதற்குத் தெரெசா ‘விழா வேண்டாம். அதற்காகும் செலவை என்னிடம் கொடுத்து விடுங்கள். அதனை நான் தரும காரியங்களுக்குப் பயன்படுத்துவேன்’ எனச் சொல்லி, தொகையையும் பெற்று வந்தாா்.
  • விருதுகளை மறுத்தவா்களின் பெயா்களை சில வாரங்கள் ஊடகங்கள் பேசும். பெற்றவா்களின் பெருமைகளை வரலாறு என்றைக்கும் நினைத்திருக்கும்.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்