விருதும் பணமும்
- கவிஞர் இசைக்கு ‘நாஞ்சில் நாடன் விருது’ அண்மையில் அறிவிக்கப்பட்டபோது, அத்தகவலை ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்திருந்தார். ‘அறிவிப்பைப் பகிர்ந்ததுபோலப் பரிசைப் பொருண்மையாய்ப் பெற்ற பிறகு பதிவிடுங்கள்’ என்று என் வாழ்த்தில் கேட்டுக்கொண்டிருந்தேன்.
- கோரிக்கைக்கு அவர் ஒப்புதல் தந்து பதிவிடவில்லை. அலகிலா விளையாட்டுக் கவிஞராகக் காட்சி தந்தாலும் கள நிலவரம் தேர்ந்தவர் இசை. தோற்றப் பிழை! தேர்தல் அறிக்கைகள் நன்றாகத் தயாரிக்கப்படுகின்றன; மோசமாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பார்கள். நம்பிக்கையை அளித்து வாக்கு அறுவடை செய்துவிடுவர்; பின் அறிக்கையைப் பற்றி எதற்குக் கவலைப்பட வேண்டும்? இலக்கியப் பரிசை வழங்கும் புரவலர்களுக்கு உடனடிப் பயன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
- சேவை, மனத்திருப்தி, புகழ், வரிவிலக்கு போன்றவை சில காரணங்கள். மதிப்பார்ந்த கவிஞர் ஒருவர் பெயரிலான ஒரு விருது அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் அது வழங்கப்படவில்லை என்று அண்மையில் தெரிய வந்துள்ளது.
- பரிசு பெற்ற இருவருள் ஒருவர் இளைஞர். பரிசை வழங்கும்படி அந்த அமைப்பை இளைஞர் தனிப்பட்ட வகையில் பலமுறை வேண்டியுள்ளார். பொதுவெளியில் அறிக்கை விட்டும் பார்த்தார். விண்ணப்பித்துப் பெறப்படும் பரிசு அல்ல இது. அப்படி இருந்தாலாவது ‘உன்னை யார் ஐயா விண்ணப்பிக்கச் சொன்னது’ என்று மட்டையை இளைஞர் பக்கம் திருப்பிவிடலாம்.
- அமைப்புடனும் பரிசிலுடனும் சம்பந்தப்பட்ட எவரும் வாய் திறந்து உண்டு, இல்லை என்று பதில் அளிக்கவில்லை. இத்தனைக்கும் பணத்துக்குப் பஞ்சமற்ற அமைப்பு அது. அவமானத்தை அந்த இளைஞர் உணர்கிறாரோ இல்லையோ, பொதுவெளி உணர்கிறது. பரிசு அறிவிக்கப்பட்ட இன்னொருவர் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
- வளமிக்க முதியவர்களுக்கு வழங்கப்படும் பரிசிலில் ஒரு வசதி உண்டு. விருதோடு தரப்படும் பணத்தைப் பல சமயம் திருப்பிவிடுவர். அதே அமைப்புக்கோ அவர்கள் சுட்டும் அறக்கட்டளைக்கோ பணம் போய்ச் சேரும். “பல் போன மாட்டுக்கு எதற்குப் புல் போடுகிறீர்கள்?” என்று தனக்கு விருதுடன் பணம் வழங்கிய ‘முன்றில்’ அமைப்பை தெ.ஞானசுந்தரம் கேட்டார்.
- பல்லாண்டுகளுக்கு முன் எனக்கு ஓர் அமைப்பு ரூபாய் பத்தாயிரம் பரிசளித்தது. பரிசு அறிவிப்புக் கடிதம் வந்த இரண்டு நாள்களுக்குள் அந்த அமைப்புக்கு (வரி விலக்குடன்) நன்கொடை வழங்குவது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய விவரத்தாள்களும் வந்து சேர்ந்தன.
- தகுதிமிக்க நண்பருக்கு ஒரு பெரும் நிறுவனம் விருது அறிவித்துவிட்டது. கரோனா காலம் என்பதால் இணையத்திலேயே விழாவையும் நடத்திவிட்டது. ஆனால், விருதுப் பணம் மட்டும் விருதாளருக்கு வந்து சேரவில்லை.
- பரிந்துரை செய்ததாகத் தெரியவந்தவரிடம் தயக்கம் மற்றும் வெட்கத்துடன் அப்போதைய நிலைமை சொல்லப்பட்டது. அவரது தொடர் உசாவல்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டின் பரிசு அறிவிப்புக்குச் சற்று முன் தொகை வந்துசேர்ந்ததாம். இதில் நேர்ந்தது வெறும் நடைமுறைத் தாமதம்தான்.
- ஓர் இலக்கியவாதி பல்லாண்டுகளுக்கு முன் இளம் வயது நண்பர் ஒருவருக்குப் பரிசை அறிவித்தார். விழா நடக்கவில்லை; பரிசும் வரவில்லை. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு பணம் வந்து சேர்ந்தது என்று கேள்விப்பட்டேன். உறுதி செய்துகொள்ள அவரிடம் ‘பணம் வந்ததா’ என்று கேட்டேன்.
- “வரவில்லை; பிடுங்கிவிட்டேன்” என்றார். பணிவு மிக்க, வாயாற்றல் குறைந்த அவரே இப்படிச் சொன்னார். இன்னோர் இலக்கியவாதி அதிகாரி ஓராண்டு மட்டும் பரிசு அறிவித்து, சரியாக அதை வழங்கிவிட்டு, அடுத்த ஆண்டு தொடரவில்லை. இந்த இரு அதிகாரிகளும் தம் சொந்தப் பணத்தைக் கொண்டு பரிசு அளிப்பவர்கள் என்று கேள்விப்பட்டேன்.
- இன்னொரு நண்பர் உண்டு. தான் நடத்துவதாகக் கருதும் ஓர் அமைப்பின் பெயரில், விரும்பும்போது விருதுகள் வழங்குவார். எதற்குத்தான் அவர் விருது வழங்குகிறார் என்றே புரியவில்லை. நண்பர்களாக உள்ள வசதியானவர்களிடம் வற்புறுத்திப் பணம் பெற்று, அதை வழங்குகிறார்.
- புலவர்கள் இப்படி ஒரு முகவரை வைத்துக்கொண்டு பரிசு பெறுவதுபோல இருக்கிறது இந்த முறை. புரவலர்கள் தாமே ஒரு நிறுவனத்தை நாடி இப்படிப் பரிசு தரும் பணியைச் செய்யுங்கள் என்று சொன்னால் அதைப் பாராட்டலாம், மதிக்கலாம், ஒரு பிரபல பதிப்பகம் வழங்கும் விருதுகள்போல. மேற்சொன்னது அப்படி அல்ல.
- அரசியல் கட்சி சார்ந்த இன்னொரு கலை, இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் பல பரிசுகளை வழங்கிவருகிறது. ஒரு முறை என் நண்பருக்கு அப்பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசை ஏற்றுக்கொண்ட நண்பர் அதனோடு தரப்பட்ட பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்து, “வேறு நல்ல பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார்.
- தயக்கத்தோடு பணத்தைப் பெற்றுக்கொண்ட கூட்டத் தலைவர், “தோழர், அடுத்து பரிசு பெறும் பரிசாளர்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டாம்” என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டார். இச்சம்பவத்தால், சக பரிசாளர்களுக்குத் திடீரென நேர்ந்த சங்கடமும் தீர்ந்தது. இவர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்கள். இத்தகைய நுண்ணுணர்வு இலக்கியவாதிகளிடமே இல்லையானால், வேறு யாரிடம் நாம் எதிர்பார்ப்பது?
- விருது சர்ச்சைகளை வைத்து ‘விருது வாங்கலையோ, விருது’ என்றொரு கட்டுரையைச் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். அதைப் படித்த ஒரு துணைவேந்தர் ‘உங்களுக்கும் ஒரு விருது வழங்கிவிட வேண்டியதுதான்’ என்றார். என் வாயை அடைக்க அவர் கண்டுபிடித்த வழி! அவர் சொல்லி இரண்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு விருதும் வரவில்லை; நானும் விருதுகளைக் கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதுவதையும் விடவில்லை.
- சில அமைப்புகள் தொடர்ந்து சரியாக இயங்குகின்றன. அவற்றின் பெயர்களைச் சொல்ல விரும்பினேன். சொன்னால் அதைப் பாராட்டாகக் கருதாமல், எனது விண்ணப்பமாகக் கருதிவிட அதிக வாய்ப்பு என்று பிறகு தோன்றிவிட்டது.
- ‘கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றேன்; பொல்லாத ஒருவனை நல்லாய் என்றேன்; போர் முகத்தை அறியானைப் புலி என்றேன், மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை, வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன். இல்லாததை இருப்பதாகப் பொய்ப் புகழ் சொன்ன எனக்குப் புரவலனும் இல்லை என்றான்’ என்று வருந்தினார் ராமச்சந்திர கவிராயர். அதிலாவது ஒரு நியாயம் இருந்தது!
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 08 – 2024)