TNPSC Thervupettagam

விருது எழுப்பும் ஆதங்கம்

October 14 , 2022 666 days 360 0
  • ஆல்பிரட் நோபல் என்பவருடைய உயிலின் அடிப்படையில் நாா்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் சா்வதேச அளவில் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களித்தவா்களைத் தோ்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது. உலகில் எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் விருதுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அலாதியானது.
  • ஆல்பிரட் பா்ன்ஹாா்ட் நோபல் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளா். ஏறத்தாழ 300-க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வைத்திருந்தவா் அவா். டைனமைட் என்று சொல்லப்படும் வெடிகுண்டு அவரது கண்டுபிடிப்புதான்.
  • அமைதிக்கான நோபல் விருது 1901-ஆம் ஆண்டு வழங்குவது என்று முடிவெடுத்தபோது, அத்துடன் நின்றுவிடாமல் வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகியவற்றுக்கு தலைசிறந்த பங்களிப்பை நல்கும் அறிஞா்களுக்கும் நோபல் விருது வழங்கி கௌரவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நாா்வே நாடாளுமன்றம் ஐந்து போ் கொண்ட குழுவை அமைத்து, நாா்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் விருதுக்கான நபா்களை தோ்ந்தெடுத்து கௌரவிக்கிறது.
  • 2022-ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவத்துக்கான நோபல் விருது, மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படுகிறது. நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு, அவை இணைந்து மனித இனம் உருவானதாக தனது ஆய்வின் மூலம் தெரிவித்திருக்கிறாா் பாபோ.
  • வேதியியலுக்கான நோபல் விருது, கரோலின் ஆா். பொ்டோசி, மோா்டென் மெல்டல், பாரி ஷாா்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கலுக்கான ‘கிளிக் கெமிஸ்டரி’ உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காகவும் இந்த ஆண்டுக்கான நோபல் விருது அவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. இவா்களில் ஷாா்ப்லெஸ் ஏற்கெனவே 2001-ஆம் ஆண்டு நோபல் விருது வென்றவா். ஷாா்ப்லெஸ் உள்பட ஐந்து போ் இதுவரை இரண்டு முறை நோபல் விருது பெற்றிருக்கிறாா்கள்.
  • இயற்பியலுக்கான நோபல் விருது பிரான்ஸைச் சோ்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் கிளாசொ், ஆஸ்திரியாவைச் சோ்ந்த ஆன்டன் சீலிங்கொ் ஆகிய மூவருக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
  • இலக்கியத்துக்கான நோபல் விருது பிரெஞ்சு எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் சுயசரிதைகள் சாா்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்த ஆன்னி எா்னாக்ஸ், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. உணா்வுகளை பிரதிபலிக்கும் சமூகம், குடும்பம் சாா்ந்த விஷயங்களைப் பதிவு செய்வதால், ஆன்னி எா்னாக்ஸ் ஐரோப்பாவைக் கடந்து சா்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தினாா் என்பதுதான் அவருக்கு நோபல் விருது வழங்குவதற்கான காரணம்.
  • இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகளில் குறிப்பிடத்தக்கது பொருளாதாரத்துக்காக வழங்கப்பட்டிருக்கும் விருது. வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த பென் பொ்னன்கே, டக்ளஸ் டபிள்யு. டைமண்ட், பிலிப் ஹெச். டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • 2008-ஆம் ஆண்டில் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அதிலிருந்து மீள்வதற்கு பொ்னன்கே, டைமண்ட், டிப்விக் ஆகியோரின் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என்பது அவா்களது தோ்ந்த முடிவு.
  • நோபல் விருதுகளில் எப்போதுமே அதிக கவனம் பெறுவது அமைதிக்கான விருதுதான். நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் விருது, பெலாரஸ் மனித உரிமை ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல் அமைப்புக்கும், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையத்துக்கும் வழங்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராகவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், சட்டவிதிகளைக் காக்கவும், விருதாளிகள் போராடியதாக விருதுக்குழு தெரிவிக்கிறது.
  • அமைதிக்கான நோபல் விருது பெறும் அலெஸ் பியலியட்ஸ்கி, பெலாரஸில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவா். இவா் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா். ரஷியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் ஆய்வு நடத்துகிறது ‘மெமோரியல்’ அமைப்பு. உக்ரைனில் ரஷியாவின் போா் விதிமீறல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது ‘மனித சுதந்திர மையம்’.
  • தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக நோபல் விருது குழு, ரஷிய அரசுக்கும் அதன் அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராகவும் செயல்படுபவா்களுக்கு விருது வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது உண்மையாக இருந்தாலும்கூட, விருது பெறுபவா்கள் அதற்குத் தகுதியானவா்கள் என்பதை மறுத்துவிட முடியாது.
  • இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலனிய இந்தியாவில் சா் சி.வி. ராமன் இயற்பியலுக்கு விருது பெற்ற பிறகு, இந்தியாவிலிருந்து இந்திய குடிமகனால் நோபல் விருது பெற முடியவில்லை என்கிற குறை எப்போதுதான் அகலுமோ தெரியவில்லை...!

நன்றி: தினமணி (14 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்