- மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
- இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்களை கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.
- அதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் ஊக்கமளிக்க முற்பட்டிருக்கின்றன.
உற்பத்தியை ஊக்குவிப்பது
- கடந்த வாரம், பத்தாவது மாநிலமாக ஒடிஸா அரசு தனது மின்சார வாகனக் கொள்கையை அறிவித்திருக்கிறது.
- அதன்படி, புதைபடிவ எரிபொருள்களிலிருந்து (ஃபாஸில் ஃபூயல்ஸ்) மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவது தொடர்பான வழிமுறைக் கொள்கையை வகுத்திருக்கிறது.
- சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலமும், வாகன உற்பத்தியாளர்களை தில்லிக்கு அழைத்து, தனது மின்சார வாகனக் கொள்கையின் வரைவுத் திட்டத்தை அவர்கள் முன் வெளியிட்டது.
- மாநில அரசுகள் வெளியிட்டிருக்கும் கொள்கையில் மானியம், வட்டிச் சலுகை, உற்பத்தியாளர்களுக்கான ஊக்கங்கள், மின்கல (பேட்டரி) உற்பத்தி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
- உலகளாவிய அளவில் நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்து, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படுகிறது.
- கரியமில வாயு வெளியேற்றத்தால் காற்று மாசுபடுவதற்கு முக்கியமான காரணம், அதிகரித்திருக்கும் வாகனப் பயன்பாடு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
- உலகின் மிக அதிகமாக காற்று மாசு காணப்படும் 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்கிற நிலையில் நாம் மின் வாகனங்களை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
- "ஃபேம்' (ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுபேக்சரிங் ஆஃப் எலக்டிரிக் வெஹிக்கிள்ஸ் இன் இந்தியா) என்கிற திட்டம் மத்திய அரசால் 2015-இல் அறிவிக்கப்பட்டது.
- அடுத்த நான்கு ஆண்டுகளில் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் முன்னெடுத்து விரைவுபடுத்துவதுதான் அதன் நோக்கம். 2019-இல் "ஃபேம்-2' திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடும் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது.
- மின் வாகன உற்பத்தியில் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது பிரிட்டன். 2030-க்குள் பெட்ரோல், டீசல் வாகன விற்பனைக்கு முழுமையான தடை விதிப்பது என்று முடிவெடுத்திருக்கும் பிரிட்டன், அதற்காக 12 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.1.21 லட்சம் கோடி) ஒதுக்கீட்டையும் அறிவித்திருக்கிறது.
- வீடுகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள் என்று எல்லா இடங்களிலும் மின் வாகனங்களுக்கான மின்னேற்ற மையங்களை (சார்ஜிங் பாய்ண்ட்ஸ்) ஏற்படுத்த 1.3 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.13,083 கோடி), மின் வாகனங்களை வாங்குவோருக்கு மானியம் வழங்க 58.2 கோடி பவுண்ட் (சுமார் ரூ.5,857 கோடி), மின் வாகனங்களுக்கான மின்கலங்களை தயாரிப்பதற்கும், அதுகுறித்த ஆராய்ச்சிக்கும் 50 கோடி பவுண்ட் (சுமார் ரூ.5,032 கோடி) என்று ஒதுக்கீடு செய்திருக்கிறது.
- போக்குவரத்துத் துறையின் பெட்ரோல், டீசல் தேவை நமது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80%. நமது பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அடுத்த 9 ஆண்டுகளில், 2005 நிலையில் 35% அளவுக்கு குறைப்பதற்கான இலக்கையும் நாம் நிர்ணயித்திருக்கிறோம்.
- அதனால், மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம்தான் கச்சா எண்ணெய் இறக்குமதியையும், கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும்.
- பிரிட்டனைப் போலவே நாமும் 2030-க்குள் முற்றிலுமாக மின்சார வாகனங்களுக்கு மாறுவது என்கிற பேராசை இலக்கை 2017-இல் நிர்ணயித்தோம்.
- ஆனால் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தத்தாலும், ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் என்கிற அச்சத்தாலும் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்தது.
- மின் வாகனத்துக்கான கட்டமைப்பில் அரசு முதலீடு செய்யாமல் அந்தத் துறையின் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
- ஏறத்தாழ 130 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் எதிர்பார்த்ததுபோல காலக்கெடு, இலக்கு ஆகியவை எட்டப்படுவது அசாத்தியம் என்பதை அனுபவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
- இருந்தாலும்கூட, மத்திய அரசின் அறிவிப்புகளும், மானியமும் ஓரளவுக்கு மோட்டார் வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் ஊக்கமளித்திருக்கின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
- நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
- இந்தியாவிலுள்ள வாகனங்களில் 80% இரு சக்கர வாகனங்கள் என்பதால் அந்தத் துறையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
- சுமார் ரூ.2,400 கோடி முதலீட்டில் ஓலா நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், ஆண்டுதோறும் 20 லட்சம் மின் இரு சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து தனது தொழிற்சாலையை ஒசூரில் நிறுவ இருக்கிறது.
- கடந்த ஆண்டு 14 லட்சம் மின்சார வாகனங்கள் ஐரோப்பாவிலும், 12 லட்சம் வாகனங்கள் சீனாவிலும், 3 லட்சம் வாகனங்கள் அமெரிக்காவிலும் விற்பனையாகியிருக்கின்றன.
- வருங்காலம் மின் வாகனங்களுக்கானது என்பதால் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படுமானால் சர்வதேச சந்தையை கைப்பற்ற முடியும்.
- உடனடியாக நாம் செயல்படத் தவறினால், சர்வதேச மின்சார வாகனத் துறையில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவக்கூடும். மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
நன்றி: தினமணி (01 - 09 - 2021)