- தான் கற்ற கல்வியையும் தனது தனித் திறமையையும் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆயுதமாக அர்ப்பணிப்பவர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். இந்தியாவில் விழித்திரை அறுவைசிகிச்சை குறித்த விழிப்புணர்வில்லாத காலத்தில், மக்கள் நலன் கருதித் தனது எதிர்காலக் கனவைத் தியாகம் செய்துவிட்டு, ‘சங்கர நேத்ராலயா’ எனும் பெரும் கண் மருத்துவமனையை நிறுவி, இறுதிவரை சேவைபுரிந்துவந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களில் ஒருவர். அவரது மறைவு மருத்துவ உலகில் மட்டுமல்லாமல், சமூக அளவிலும் பேரிழப்பே.
மருத்துவப் படிப்பு
- 1940 பிப்ரவரி 24 அன்று, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எஸ்.வி.சீனிவாசராவ்-லட்சுமி தேவி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் செங்கமேடு சீனிவாச பத்ரிநாத். சிறுவயதில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாகத் தன்னுடைய ஏழாவது வயதில்தான் பள்ளிப் படிப்பை அவர் தொடங்கினார். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்த அவர், லயோலா கல்லூரியில் இடைநிலை பட்டப்படிப்பு முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
- 1963 இல் மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட் மருத்துவமனையில் ஒருவருட பயிற்சி மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி, நியூயார்க் புரூக்ளின் கண் - காது மருத்துவமனையில் கண் மருத்துவப் படிப்பினைப் படித்தார். பாஸ்டன் மாசசூசெட்ஸ் கண் - காது மருத்துவமனையில் விழித்திரை அறுவை சிகிச்சை உயர் படிப்பை டாக்டர் சார்லஸ் ஸ்கெபன்ஸீடன் உதவியுடன் பெற்றார். எஃப்.ஆர்.சி.எஸ். (கனடா), அமெரிக்க வாரியம் (கண் மருத்துவம்) ஆகிய தேர்வுகளில் வெற்றிபெற்ற பிறகு 1970இல் நாடு திரும்பினார்.
- சென்னையில் உள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் ஆறு ஆண்டுகள் கண் மருத்துவராகப் பணியாற்றினார். எச்.எம்.மருத்துவமனை, விஜயா மருத்துவமனை ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.
பிறந்தது சங்கர நேத்ராலயா
- அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் விழித்திரை மருத்துவச் சிகிச்சையில் வெகு சிலர்தான் நிபுணர்களாகத் திகழ்ந்தனர்; தமிழ்நாட்டில் பத்ரிநாத் மட்டும்தான் ஒரே விழித்திரை சிகிச்சை மருத்துவர்.இந்நிலையில், தான் படித்த உயர்தர விழித்திரைசிகிச்சை அளிப்பதற்கான வசதிகளைக் கொண்ட மருத்துவமனை இங்கு இல்லையே என்ற ஆதங்கம் பத்ரிநாத்துக்கு இருந்தது. அவருடைய மனைவியும் மருத்துவருமான வசந்தியும் அதே வருத்தத்தைக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் பொருளாதாரரீதியான சவால்களை எதிர்கொண்டிருந்த அந்த மருத்துவத் தம்பதி, அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றத் தீர்மானித்திருந்தது.
- அப்போது, ஏழை-எளிய மக்களின் இருளைப் போக்கும் உயர்தரக் கண் மருத்துவத்தை, இங்கிருந்தே மக்களுக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணம் பத்ரிநாத்தின் மனதில் துளிர்விட்டது. அமெரிக்கா செல்லும் முடிவைக் கைவிட்டார். உலகத் தரம் வாய்ந்த கண் மருத்துவ சிகிச்சை குறைந்த கட்டணத்தில் இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டும்; ஏழை மக்களுக்குச் சிகிச்சை இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்கிடையே, 1974இல் காஞ்சி மகா பெரியவருக்குக் கண்புரை அறுவைசிகிச்சை செய்யும் வாய்ப்பைப் பெற்றார் பத்ரிநாத்.
- காஞ்சி சங்கர மடத்தில் ஓர் அறுவை அரங்கத்தையே உருவாக்கி அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டார். அவரது சேவை மனப்பான்மையையும் மருத்துவ அறிவையும் மகா பெரியவர் பாராட்டினார். 1976இல்,பத்ரிநாத்தும் தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர்களும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆலோசனை பெற்று,சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு கண் மருத்துவமனையைத் தொடங்குவது என முடிவுசெய்தனர். அதன்படி, 1978 செப்டம்பர் 6 அன்று விஜயா மருத்துவமனை வளாகத்தில் ‘சங்கர நேத்ராலயா’ தொடங்கப்பட்டது.
இருளைப் போக்கும் பணி
- சிறிய மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட சங்கர நேத்ராலயா, இன்று சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, கொல்கத்தா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட் எனப் பல இடங்களில் மருத்துவ சேவை வழங்கிவருகிறது. தினமும் 1,500 புறநோயாளிகளுக்குக் கண் மருத்துவச் சிகிச்சை, நூற்றுக்கும் மேற்பட்ட கண் அறுவைசிகிச்சை என சங்கர நேத்ராலயா இயங்கும் விதம் சர்வதேச மருத்துவர்களையே வியக்கவைத்திருக்கிறது. சங்கர நேத்ராலயாவில் பயிற்சி பெற்ற 1,000க்கும் மேற்பட்டகண் மருத்துவர்கள் இந்தியா முழுவதும் இருளைப் போக்கும் கண் மருத்துவப் பணியைச் செய்துவருகிறார்கள்.
- இலவச மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் முற்றிலும் இலவச சிகிச்சை பெற்று வருகிறார்கள். பணம் செலுத்தும் நோயாளிகளுக்கும், இலவசமாகச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் சமமான உயர்தர சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது. பணம் தேவைப்படும்போது பலரிடம் சென்று தானமாகப் பெறப்படுகிறது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவக் குழுமத்தின் இலவச கண் மருத்துவமனையான ஜே.சி.ஓ.சி ஜஸ்லோக் சமூக கண் சிகிச்சை மையம் 1987 முதல் செயல்பட்டுவருகிறது. தற்போது சென்னை பரங்கிமலை டாக்டர் அப்புகுட்டி வளாகத்தில் மிக பிரம்மாண்டமான, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது.
சுயசரிதை எழுத மறுத்தவர்
- எளிமைதான் பத்ரிநாத்தின் மிகப் பெரிய சொத்து. சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் / தலைமை மருத்துவர் என்றாலும் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சமமாகவே தன்னை நினைத்து, மாத ஊதியம் பெறும் மருத்துவராகவே இறுதிவரை பணியாற்றியவர் அவர். மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரிடமும் சமமாக அன்பு காட்டினார். அவருடைய எளிமை, எதையும் எதிர்பாராமல் மக்களுக்குச் சேவையாற்றும் பண்பு, நேரம் தவறாமை போன்றவற்றைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பல கண் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அவரைப் போலவே தங்கள் வாழ்வை சங்கர நேத்ராலயாவுக்கு அர்ப்பணித்தனர்.
- அது இன்றும் தொடர்கிறது. பத்ரிநாத்தின் தன்னலமற்ற பணிகள் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரங்களைப் பெற்றுத்தரத் தவறவில்லை. இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷண் விருது, பி.சி.ராய் விருது உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் அவர். “விருதுகள் என்னை கௌரவப்படுத்துவற்காக அளிக்கப்பட்டவை என நான் எண்ணவில்லை. இந்திய இளைஞர்களை தங்கள் நாட்டுக்காகப் பணியாற்ற ஊக்குவிப்பதற்காகக் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தியத் திருநாடு மிகப் பெரிய எதிர்காலத்தை கொண்டது. சக்தி வாய்ந்த இந்திய இளைஞர்கள் தங்கள் தேசத்துக்காகப் பணியாற்ற வேண்டும்” என்றவர் பத்ரிநாத். ஒரு கர்மயோகியாகவே வாழ்ந்தபத்ரிநாத், தனது சுயசரிதையை எழுத வேண்டும் எனப் பலர் வற்புறுத்தியும், அதை உறுதியாக மறுத்துவிட்டார். தனது 79 வயது வரை மருத்துவப் பணியாற்றிவந்த பத்ரிநாத், கடந்த நான்கு ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்றுவந்தார். நவம்பர் 21 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த உலகைவிட்டு விடைபெற்றார்.
இறுதிவரை எளிமை
- இன்றைய உலகில் அரிதாகிவரும் விழுமியங்களை இறுதிவரை கடைப்பிடித்தவர் பத்ரிநாத். தன்னுடைய இறுதி ஊர்வலம் மிக எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்றும், தனது மறைவின் காரணமாக சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் பணிகள் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது எனவும் முன்பே அவர் தெரிவித்திருந்தார். அவர் உருவாக்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை மட்டுமல்லாமல், அவரிடம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமல்லாமல், அவரது ஒட்டுமொத்த வாழ்வும் உலகின் உள்ள உன்னதங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்!
நன்றி: இந்து தமிழ் திசை (23 - 11 – 2023)