- விவசாய சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு புதிதாக அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
- விவசாய சந்தையும் மாநிலங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக இந்த மசோதாக்களை நிறைவேற்றி விட்டதாக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
- ஆனால், விவசாய சீர்திருத்தம் தொடர்பான மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததோடு, "தேவையற்ற குழப்பங்களை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துகின்றன' என்கிற ஒரு குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.
- பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு மாத்திரமல்லாமல், அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கௌர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
- "இந்த மசோதாக்கள் எதிர்காலத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய சந்தைக்குள் நுழைய வழிவகுக்கும் என்று விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்' என்று அகாலி தளம் தனது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.
எதிர்பார்ப்புகள்
- "விவசாயிகளின் அச்சங்களுக்குத் தீர்வு காணாமல், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன' என்று தனது பெரும் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறது அகாலி தளம்.
- ஆனால், விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், ஏற்கெனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.
- அதேபோல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்திற்கும் எந்தப் பிரச்னையும் எழாது.
- விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும் என்கிற அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மசோதாக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது.
- சந்தைக் கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்கிற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது.
- இதுபோல் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக அரசுக்கு எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.
- இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தைகளில் இருக்கும் போட்டிகள் ஆகியவை அதிகரிக்கும். இதனால் விவசாயத் துறையில் உள்கட்டமைப்பு வலுவடையும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
- இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகளுக்குப் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கிடைக்கும். இவையெல்லாம் இம்மசோதாக்கள் குறித்தான பெரிய எதிர்பார்ப்புகள்.
விவசாயிகளின் கேடயங்கள்
- ஆனால், நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியோ, எதிர்க்கட்சிகளுக்கு மிகத் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறார். அது என்னவெனில், "இந்த மசோதாவை ஏற்கப்போவதாக தேர்தலின்போது உறுதியளித்த கட்சிகள் தற்போது இந்தப் பண்ணை மசோதாக்களை எதிர்க்கின்றன.
- ஏனெனில், நாங்கள் இதை செயல்படுத்துவதுதான் அவர்கள் எதிர்ப்புக்குக் காரணம்.
- முன்னதாக அவர்கள் மாற்று விருப்பத்தை வழங்குவதற்காக ஏபிஎம்சி ஏற்பாட்டைத் திருத்துவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தனர்.
- இப்போது அவர்கள் அதே திருத்தங்களையும், விதிகளையும் எதிர்க்கின்றனர். அவர்கள் விவசாயிகளுக்கு உதவ விரும்பவில்லை. மாறாக இடைத்தரகர்களுக்கு உதவ விரும்புகிறார்கள்' என்று பிரதமர் கூறுகிறார்.
- "காங்கிரஸும், சில எதிர்க்கட்சிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், அவை தங்கள் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இதைப் போன்று நிறைவேற்றவில்லை.
- பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட இந்தக் கட்சியினரிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று கூறியதோடு, "விவசாயிகளை விடுவிப்பதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கை இந்த மசோதா' என்றும், "தங்கள் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்க அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு மாற்றமே தற்போது இந்த நாட்டுக்குத் தேவை' என்றும், "கோதுமை, அரிசி மற்றும் பிற பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப் போவதில்லை என்ற வதந்திகளை பரப்புகிறார்கள்' என்கிற ஒரு குற்றச்சாட்டையும் இந்திய பிரதமர் முன்வைத்திருக்கிறார்.
- விவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும், வாய்ப்புகளையும் விவசாயிகள் பெறுகிறார்கள் என்பதற்கான இம்மசோதா இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்கின்ற விவசாயிகளின் கேடயங்களாகும் என்று மத்திய அரசு குறிப்பிடுகிறது.
பயனளிக்கக்கூடிய சட்டங்கள்
- "விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதா', "விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஒப்பந்தம்', "அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா' ஆகிய மூன்று மசோதாக்கள்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவை.
- இந்த மசோதாக்கள் மூலம், அதிகாரபூர்வமாக விவசாய சந்தைகளிலும் மண்டிகளுக்கு வெளியிலும் விவசாயப் பொருள்களை விற்க முடியும்.
- குறிப்பிட்ட இடத்தில்தான் விவசாயப் பொருள்களை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி இனி எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தை செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
- இதனால், இவ்வகையான வர்த்தகத்தின் மூலமாக சந்தை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை இனிமேல் மாநில அரசு பெற முடியாது.
- இதை விற்பனை செய்வதற்கான அனுமதியையும் விவசாயிகள், அரசிடமிருந்து பெற வேண்டியத் தேவையில்லை.
- இந்த இரண்டு காரணங்களுக்காகவே பல்வேறு மாநிலங்கள் இம்மசோதாக்களை எதிர்க்கின்றன.
- மேலும், "விவசாயத் துறையில் தனியார் நுழைய வாய்ப்பு உள்ளது. அதனால் தங்களுக்குப் போதிய வருமானம் வராது' என்று விவசாயிகளில் ஒரு சாரார் கூறுகின்றனர். இது முதலாவது மசோதாவில் இருக்கின்ற முக்கிய ஷரத்து ஆகும்.
- இதுபோலவே மசோதா 2, பண்ணைப் பொருள்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ஒழுங்குபடுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட மசோதாவாகும்.
- இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் மூலம் தங்கள் பண்ணைப் பொருள்களை விற்பனை செய்ய முடியும்.
- இந்த மசோதாவில் பண்ணைப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் எப்படி என்று அறிவிக்கப்படவில்லை.
- இதனால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பண்ணைப் பொருள்களைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
- மசோதா 3-இன்படி, அத்தியாவசியப் பொருள்களின் சந்தையில் இருக்கின்ற தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.
- இதனால் இந்த உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இனிமேல் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.
- இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
- தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவையெல்லாம் விவசாயத்தில் மொத்தமாக வீழ்ச்சி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.
- அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் வெங்காயம், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும்போது, அவற்றை ஏற்றுமதி செய்யவும், சேமித்து வைக்கவும் அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
- இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி, இம்மாதிரிக் கட்டுப்பாடுகளை எப்போதும் விதிக்க முடியாது. சில சூழல்களில்தான் விதிக்க முடியும்.
- அதாவது, தோட்டப்பயிர்களைப் பொருத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களில் சராசரி விலையை விட, 100 சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும்.
- தானியங்களைப் பொருத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் சராசரி விலையை விட 50 சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும்.
- ஆனால், இந்தக் கட்டுப்பாடு, உணவுப்பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
- இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், விளைபொருள்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
- இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு விவசாயத்துறையில் நேரடி அந்நிய முதலீடு கிடைக்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
- உணவு விநியோகச் சங்கிலிக்கு முக்கியமாகத் தேவைப்படும் குளிர்ப்பதனக் கிடங்குகள் போன்றவை அமைப்பதற்கான முதலீட்டைப் பெறுவதை இந்தச் சட்டம் எளிதாக்குகிறது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
- விளைபொருள்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய வழிவகுக்கிறது.
- இதன் மூலம் மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் விற்பனை செய்ய வழி ஏற்படுகிறது.
- இதனால் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.
- விவசாய ஒப்பந்ததாரர்களுக்கு இதன் மூலம் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கிறது.
- இந்த மூன்று சட்டங்களின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்பும் கிடைக்கும்.
- நுகர்வோரும், வர்த்தகர்களும் பயன்பெறுவார்கள். ஆக, மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்களே இவை என்கிற கருத்து நிலவுகிறது.
நன்றி: தினமணி (30-09-2020)