TNPSC Thervupettagam

விவேகமற்ற முடிவு! | தாய்மொழிக் கல்வி

January 7 , 2021 1299 days 644 0
  • மகாத்மா காந்தியில் தொடங்கி, தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர்கள் அனைவருமே தாய்மொழிக் கல்வியை வற்புறுத்தினார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல உயர்கல்வி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருந்தனர்.
  • சுவாமி விவேகானந்தரிலிருந்து தொடங்கி, சர்வதேச அளவில் இந்தியா குறித்த புரிதலை ஏற்படுத்தியவர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • அதேபோல, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், பண்டித ஜவாஹர்லால் நேரு, ஜனாப் முகமது அலி ஜின்னா, பாபாசாஹேப் அம்பேத்கர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்கள் அனைவருமே பிரிட்டன் சென்று படித்தவர்கள் அல்லது ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக் கூடியவர்கள்.
  • நோபல் விருது பெற்ற இந்தியர்களான சர் சி.வி. ராமனும், குருதேவர் ரவீந்திரநாத் தாகூரும் ஆங்கிலப் புலமை இருந்ததால்தான் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முடிந்தது.
  • இன்று உலக அளவில் இந்தியர்கள் தங்களது திறமையாலும், கல்வி அறிவாலும் குடியேறி தடம் பதிக்க முடிந்திருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், அவர்களது ஆங்கிலப் புலமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • சீனர்களையும் ஜப்பானியர்களையும் பின்னுக்குத் தள்ளி, நாசாவிலும் சிலிக்கன்வாலியிலும் இந்திய விஞ்ஞானிகளும் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களும் கோலோச்சுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களது ஆங்கிலப் பின்னணிதான்.
  • இப்போது எதற்காக இப்படி ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழக்கூடும். சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டிருக்கும் ஓர் அறிவிப்பு, அடுத்த தலைமுறை இந்தியர்களின் வருங்காலத்தை சிதைத்துவிடுமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம்.
  • கடந்த அரை நூற்றாண்டுகால அரசியல், தாய்மொழியில் எழுதவும் படிக்கவும் தெரியாத தலைமுறையினரை உருவாக்கியிருப்பது இன்றைய தலைமுறையினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அநீதி.
  • அந்தத் தவறை திருத்தும் வகையில் ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பதையும், அரசியல் சாசனத்தின் 8-ஆவது ஷெட்டியூலில் இணைக்கப்பட்டிருக்கும் 22 மொழிகளையும் வலுப்படுத்த வேண்டும் என்பதையும் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவது வரவேற்புக்குரியது.
  • அதே நேரத்தில், தாய்மொழிக் கல்வி என்பதை உயர்கல்வியிலும் கட்டாயப்படுத்துவது என்பது மாணவர்களை அவரவர் மாநிலத்துக்குள் மட்டுமே இயங்க முடியும் என்கிற அவலத்தில் ஆழ்த்திவிடும்.
  • அடுத்த கல்வியாண்டிலிருந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) ஆகிய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் மாநில மொழியில் கல்வி வழங்குவது என்கிற மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் முடிவு வரவேற்புக்குரியதாக இல்லை.
  • ஆங்கிலேயர்களுக்கு எப்படி லத்தீனும், கிரேக்கமும் தொழில்நுட்ப வார்த்தைகளை உருவாக்க உதவியதோ, அதேபோல இந்தியாவுக்குத் தமிழும் சம்ஸ்கிருதமும் தொழில்நுட்பக் கலைச்சொற்களை உருவாக்குவதற்கு கைவசமிருக்கும் வரப்பிரசாதங்கள். அதனால், புத்தகங்கள் இருக்காதே என்பது பிரச்னை அல்ல.
  • சீனாவிலும், ஜெர்மனியிலும், ரஷியாவிலும், பிரான்ஸிலும் தொழில்நுட்ப உயர்கல்வி அவரவர் மொழியில்தான் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இப்போது அவர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டு ஆங்கிலத்துக்கு முன்னுரிமை வழங்க முற்பட்டிருக்கிறார்கள்.
  • பரவலாக உலகம் முழுவதும் ஆங்கிலத்தை அறிவியல் தொழில்நுட்பத்துக்கான சர்வதேச மொழியாக ஏற்றுக்கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம்.
  • எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் வெளியாகின்றன. அதனால், ஆங்கிலத்தில் இருந்து தாய்மொழிக் கல்விக்கு மாறுவது என்பது நாம் பின்னோக்கி நகர்வதாகிவிடும்.
  • தன்னாட்சியுடன் இயங்கும் ஐஐடி-களும், என்ஐடி-களும் தனியார் நிறுவனங்களைவிடப் பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் என்பதன் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
  • உலக அளவில் மும்பை, தில்லி, கரக்பூர், சென்னை, கான்பூர் ஆகிய ஐந்து ஐஐடி-களும் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களாகப் போற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் இந்திய மொழிக் கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டால், இப்போது இருக்கும் மரியாதையை இழந்துவிடும்.
  • இந்தியாவிலுள்ள 23 ஐஐடி-களில் இருக்க வேண்டிய 9,718 பேராசிரியர் பதவிகளில் 3,709 பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது, இந்திய மொழிக் கல்விக்கான பேராசிரியர்களை எங்கேபோய் அரசு தேடப்போகிறது?
  • இன்றைய நிலையில் ஏறத்தாழ மூன்று கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பலர் தொழில்நுட்பப் பொறியாளர்கள். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆங்கிலம்தான் காரணமாக இருந்திருக்கிறது. மொழிப்பற்று அரசியல் காரணமாக, நமக்கு இருக்கும் பலத்தை இழந்துவிடக் கூடாது.
  • பள்ளி அளவில் தாய்மொழிக் கல்வியும், கல்லூரி அளவில் ஆங்கிலக் கல்வியும் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
  • தாய்மொழி எழுதப் படிக்க தெரியாத குழந்தைகளும் இருக்கக் கூடாது, ஆங்கிலத்தில் உயர்கல்வி பெறாத இளைஞர்களும் இருக்கக் கூடாது. அதுதான் அறிவுபூர்வமான செயல்பாடாக இருக்கும்!

நன்றி: தினமணி  (07 -01 -2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்