TNPSC Thervupettagam

வெடித்துச் சிதறுமா திருவாதிரை விண்மீன்

June 16 , 2023 574 days 336 0
  • மரணத் தறுவாயில் உள்ள நோயாளியின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்த்து, ‘இன்றோ நாளையோ சொந்தங்களுக்குத் தகவல் சொல்லிவிடலாம்’ என மருத்துவர்கள் கூறுவார்கள். அதுபோல, திருவாதிரை (Betelgeuse) விண்மீனின் துடிப்பைப் பகுத்து ஆராய்ந்து இன்னும் சில பத்தாண்டுகளில் வெடித்துச் சிதறும் என இந்திய ஆய்வு மாணவர் தேவேஷ் நந்தல் அடங்கிய சுவிஸ்-ஜப்பானியக் கூட்டு ஆய்வுக் குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தினாலும், இந்த முடிவை லாஸ்லோ மோல்னார், மெரிடித் ஜாய்ஸ் அடங்கிய வேறொரு குழு கடுமையாக மறுத்துள்ளது.

வாராது வந்த மாமணி:

  • ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற விகிதத்தில் பால்வெளி மண்டலத்தில் விண்மீன் வெடிப்பு நிகழ்வு (Supernova) ஏற்படும்; தொலைநோக்கி மூலம் மட்டுமே அதைக் காண முடியும். சுமார் 500-600 ஒளி ஆண்டு தொலைவிலுள்ள திருவாதிரை விண்மீன், சிவப்பு ராட்சச நிலையில் உள்ளது.
  • சிவப்பு ராட்சச நிலையின் இறுதியில் விண்மீன் வெடித்துச் சிதறும். நமக்கு அருகே உள்ள திருவாதிரை விண்மீன் சூப்பர்நோவாவாக வெடித்துச் சிதறும்போது, சில கோடி சூரியன் அளவுக்குப் பிரகாசிக்கும். பொ.ஆ. (கி.பி.) 1604இல் வெடித்துச் சிதறிய ஒரு விண்மீனைக் கெப்ளர் (Johannes Kepler) முன்னதாக இனம் கண்டிருக்கிறார்.

எதிரும் புதிரும்:

  • பிரபஞ்சத்தில் அதிகம் விரவியுள்ள ஹைட்ரஜன், ஒரு விண்மீன் பிறப்பின்போது அதிலும் செறிவாக இருக்கும். அதன் சொந்த நிறையின் காரணமாக உருவாகும் ஈர்ப்புவிசை விண்மீன் திரட்சியை அழுத்திச் சுருக்கும். தலையில் பொதியின் எடை கூடினால் நாம் நிலைகுலைந்து விடுவதைப் போல, விண்மீனில் வெறும் ஈர்ப்பு ஆற்றல் மட்டும் செயல்பட்டால் விண்மீன் நிலைகுலைந்துவிடும்.
  • ஆனால், அந்த ஈர்ப்புவிசையே தனக்கு எதிராகச் செயல்படும் வேறொரு விசையை உற்பத்தி செய்கிறது. ஈர்ப்பு விசையின் அழுத்தத்தின் விளைவாக மையத்தில் வெப்ப ஆற்றல் கூடி, ஒருகட்டத்தில் ஹைட்ரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியம் உருவாகும். இந்த வினை உற்பத்தி செய்யும் வெப்ப ஆற்றலானது, ஈர்ப்புவிசையின் அழுத்தத்துக்கு முட்டுக்கொடுத்து விண்மீனைத் தாங்கிப் பிடித்துக்கொள்கிறது.

சிவப்பு ராட்சச விண்மீன்:

  • குறிப்பிட்ட கட்டத்தில், மையத்தில் ஹீலியத்தின் செறிவு கூடி, ஹைட்ரஜன் கையிருப்புக் குறையும்போது கருப்பிணைவு வினை முடங்கும். எதிர்ப்பு ஏதும் இல்லாததால் ஈர்ப்புவிசையின் கை ஓங்கி மையம் மறுபடியும் சுருங்கும். விண்மீனின் மேற்புறம் ஊதிப் பெருகும். இதுவே சிவப்பு ராட்சச நிலை. திருவாதிரை போன்ற விண்மீன்கள் இந்த நிலையை அடைய தனது பிறப்பிலிருந்து சில கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
  • முதலில் ஹைட்ரஜன் பிணையும் நிலையில் பிறக்கும் விண்மீன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஹீலியம் பிணையத் தொடங்கும்; ஹீலியம் பிணைந்து கார்பன் உருவாகும். மறுபடி விண்மீனில் ஆற்றல் உற்பத்தியாகும். இது அடுத்த கட்டம். ஒருகட்டத்தில் ஹீலியமும் தீர்ந்துபோகும்தானே. அப்போது மையம் முழுவதும் கார்பன் அணுதான் இருக்கும். இந்த நிலைகளில் எல்லாம் சிவப்பு ராட்சச விண்மீனாகத்தான் நமக்குத் தெரியும்.
  • திருவாதிரை போன்ற பெரும் நிறை கொண்ட விண்மீன்கள், சூரியனிலிருந்து வேறுபட்டவை. பெரும் நிறை கொண்ட விண்மீன்களில் மீஈர்ப்பு ஆற்றலின் அழுத்தத்தில் கார்பன் பிணைந்து நியான், அதன் பின்னர் இரும்பு வரையுள்ள தனிம அட்டவணைத் தனிமங்கள் ஒவ்வொன்றாக உருவாகும். இந்த நிலையில், அந்த விண்மீனின் கட்டமைப்பு வெங்காயத்தைப் போன்றிருக்கும்.

மரண அறிகுறி:

  • இறுதி நிலையில், இரும்பு வரையுள்ள தனிமங்கள் பிணைந்தால் ஆற்றல் வெளியேறும். இரும்புக்குப் பின்னர் உள்ள தனிமங்கள் பிணைந்தால் ஆற்றலை உறிஞ்சிக்கொள்ளும். எனவே, இரும்பு நிலை ஏற்பட்டதும் ஈர்ப்புவிசைக்கு எதிராக எதுவும் இருக்காது. ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, கண நேரத்தில் விண்மீன் நிலைகுலைந்துவிடும். மையத்தில் நியூட்ரான் விண்மீன் அல்லது கருந்துளை உருவாகும். அதில் ஏற்படும் வெடிப்பு அலை பரவி, விண்மீனின் மேற்பகுதி வெடித்து விண்வெளியில் சிதறும்.
  • இதுவே ‘சூப்பர்நோவா’ எனப்படுகிறது. அந்தக் கணத்தில் சூரியனைப் போலக் கோடி மடங்கு ஆற்றலை அது வெளிப்படுத்தும். திருவாதிரை போன்ற விண்மீனில் ஹைட்ரஜன் பிணையும் நிலை சில கோடி ஆண்டுகள் தொடரும் என்றால், ஹீலியம் பிணையும் நிலை சுமார் பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். இரும்பு நிலை நொடியின் கால் பகுதி அளவுக்குக்கூட நீடிக்காது. கண நேரத்தில் சூப்பர்நோவா வெடிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, இரும்பு வரை பிணைவு நீளும் என்றாலும், திருவாதிரை போன்ற விண்மீன்களில் கார்பன் பிணைவு நிலையின் இறுதிக்கட்டம் ஏற்பட்டுவிட்டால், அது மரணத்துக்கான அறிகுறிதான்.
  • தோல் இசைக்கருவியை இசைக்கும்போது முதன்மை அதிர்வைத் தவிர, மேல்தொனி இணை அதிர்வுகளும் உருவாகும். அதே போல், திருவாதிரையின் துடிப்பில் 2,190, 417, 230, 185 நாள்களுக்கு ஒருமுறை சுருங்கி விரியும் நான்கு ஊசல்கள் உள்ளன.
  • சூரியனைப் போல சுமார் 11 மடங்கு நிறையும், 1,300 மடங்கு ஊதிப்பெருத்தும், 2,190, 417, 230, 185 நாள்கள் ஆகிய நான்கு ஊசல்களையும் கொண்டிருந்தால் அந்த விண்மீன் கார்பன் நிலையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது - அதாவது மரணப்படுக்கையில் உள்ளது என்று பொருள். இதன் அடிப்படையில்தான், தேவேஷ் நந்தல் குழு திருவாதிரை சில பத்தாண்டுகளில் வெடித்துச் சிதறிவிடும் எனக் கணித்துள்ளது.

திருவாதிரை பிழைக்குமா?

  • நான்கு ஊசல்களில் எது முதன்மை அதிர்வு, எவை மேல்தொனி அதிர்வுகள் என்பதில் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. தேவேஷ் நந்தல் குழு, 2,190 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படும் விரிந்து சுருங்கும் துடிப்பை அடிப்படை அதிர்வு எனவும் மற்ற மூன்றை மேல்தொனி அதிர்வுகள் எனவும் கொள்கிறது; இது உண்மை என்றால் திருவாதிரை கார்பன் பிணைப்பு நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று பொருள். அதாவது அதன் ஆயுள் - இன்றோ நாளையோ.
  • ஜாய்ஸ் அடங்கிய எதிர்த்தரப்பு, 2,190 நாள் ஊசலைக் காரணம் விளங்காத புதிர் என ஒதுக்கித் தள்ளி, 417 நாள் ஊசலை முதன்மை எனவும் ஏனைய இரண்டை மேல்தொனி எனவும் கொள்கிறது. இவர்கள் கருத்து உண்மை என்றால், திருவாதிரை பத்தாயிரம் முதல் லட்சம் ஆண்டுகள் இன்னும் வாழும்.
  • 550 ஒளியாண்டு முதல் 730 ஒளியாண்டு வரை அதன் தொலைவு இருக்கலாம் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. திருவாதிரை விண்மீன் உள்ள தொலைவைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. தொலைவு துல்லியமாகத் தெரிந்தால்தான் திட்டவட்டமாக அதன் உண்மையான ஒளிர்வு என்ன எனக் கணிக்க முடியும். திருவாதிரையின் தொலைவு குறித்த தெளிவின்மை காரணமாக அதன் ஒளிர்வு, சூரியனைப் போல 90,000 முதல் 1,50,000 மடங்கு வரை அமையக்கூடும் எனக் கணிக்கிறார்கள்.
  • தொலைவு, ஒளிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சூரியனைப் போல 600 முதல் 1,000 மடங்கு பருமன் கொண்டது எனவும் மதிப்பிடுகிறார்கள். தேவேஷ் நந்தல் ஆய்வில் பருமன் 1,300 மடங்கு எனக்கொள்கிறார். இவையெல்லாம் திட்டவட்டமாக அறிய முடியாத மதிப்பீடுகள். எனவே, இவை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகிறது.
  • “எதுவாக இருந்தாலும் திருவாதிரை வெடித்துச் சிதறப்போவது உறுதி; நமது வாழ்நாளிலேயே வெடித்து அரிய வானக் காட்சியைக் காண வாய்ப்புக் கிடைக்குமா அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுமா என்பதுதான் புதிர்” என்கிறார் பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் ஆய்வு மையத்தில் பணிபுரியும் பெரோஸ் சுதாரியா.

நன்றி: தி இந்து (16 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்