TNPSC Thervupettagam

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

May 11 , 2024 235 days 170 0
  • உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதிக வெப்பத்தால் ஒவ்வொரும் நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சராசரி வெப்பத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும்போது நமது உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கிறது.
  • இதனால் வெப்பச் சோர்வு, வெப்ப மயக்கம், ஹைபர்தெர்மியா போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உச்சபட்ச வெப்பநிலையால் இதயம், சுவாசம், பெருமூளை நோய், நீரிழிவு போன்ற நோய்களும் ஏற்படலாம். உயரும் வெப்ப நிலையால் தொற்று நோய் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். கோடைக்காலத்தில் ஏற்படும் தீவிர வெப்ப அலையை ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ள முடியும்.

ஆரோக்கியமான உணவு:

  • உடலின் நீர்ச்சத்தை முறையாகப் பராமரிக்க தாதுக்கள், எலக்ட்ரோ லைட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வெப்ப மயக்கத்தைத் தடுக்கலாம். இவை உடலின் வெப்பநிலையைச் சீராக்கவும் வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்கவும் உதவும்.
  • உதாரணத்துக்குத் தினைக் கஞ்சி, கேழ்வரகு்க் கூழ் சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்துடன் உடலுக்கு கால்சியம், நார்ச் சத்தைத் தருகின்றன. எதிர் ஆக்ஸிகரணியாகவும் செயல்படும். நம் உடலைக் குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவும்.

நீர்ச்சத்துள்ள உணவு:

  • சுரைக்காய் வகையைச் சேர்ந்த காய்கறிகள், வெள்ளரிகளில் நீர்ச்சத்து அதிகம். முலாம்பழம், தர்பூசணி போன்ற பழங்களையும், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடலாம். முருங்கை இலை சூப் உடலுக்கு இரும்புச்சத்து, நார்ச்சத்து, கரோட்டின், விட்டமின் சி, தாதுக்கள் ஆகிய வற்றை வழங்குகிறது.
  • நுங்கு போன்ற பருவகாலப் பழங்களில் விட்டமின்கள் பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன. பதநீர் உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

குழந்தைகள், பெண்கள்:

  • வெப்ப அலையால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதான வர்கள் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஆறு மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குக் கூடுதல் தாய்ப்பால் தேவைப்படலாம். வெப்ப அலையின்போது 6 மாதங்களுக்கோ அதை விடக் குறைவான குழந்தைகளுக்கோ கூடுதல் தண்ணீர் தேவையில்லை.
  • தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துச் சத்தும் உள்ளன. தாய்ப்பால் உற்பத்தியை நீரிழப்பு பாதிக்கும் என்பதால், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பெரியவர்களை விட 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் உடல் வெப்ப நிலையைச் சீரமைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால், அத்தகைய குழந்தைகளுக்குப் பெரியவர்களின் கண்காணிப்பு தேவை. கர்ப்பிணிகளுக்கு அதிக வெப்பத்தால் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, முன்கூட்டிய குழந்தைப் பிறப்பு (preterm) ஏற்படலாம்.
  • சிலருக்குக் கர்ப்பக்கால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கலாம். இவற்றைத் தவிர்க்கச் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். வெப்பம் குறைவாக இருக்கும் போது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
  • அதிக வெப்பநிலை நிலவும் கோடைக்காலத்தில் வயதானவர்களுக்குப் பெரும்பாலும் குறைவாகவே பசிக்கும். இருப்பினும், உணவைத் தவிர்க்கக் கூடாது. சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட லாம். சாலட், சாண்ட்விச் போன்றவை ஆற்றலை அதிகரிக்கும் என்பதால் அவற்றையும் சாப்பிடலாம்.
  • கார்பனேற்றப்பட்ட உணவு வேண்டாம்: வெளியில் வேலை செய்பவர்கள் தண்ணீருடன் பழச்சாறு, காய்கறி சூப் போன்ற ஆரோக்கியமான பானங்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். தாகம் எடுக்கும் வரை காத்திருக் காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். மது, தேநீர், காபி, கார்ப னேற்றப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

காற்றோட்டம் அவசியம்:

  • கொல்லைப்புறத் தோட்டம், சமையலறைத் தோட்டம், நகர்ப்புறங்களில் மொட்டை மாடித் தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கலாம். இது சுற்றுப்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. சமையலறைத் தோட்டத்தில் பருவகாலக் காய்கறிகளைத் திட்டமிட்டு வளர்க்கலாம்.
  • வீட்டின் அறை வெப்பநிலையைப் பராமரிக்க மின்விசிறிகள் அல்லது ஏ.சி.யைப் பயன்படுத்தி நன்கு காற்றோட்டமாக வைத்திருக்கலாம். நேரடி சூரிய ஒளியைத் தடுக்க வெப்பமான நேரத்தில் திரைச்சீலை களை மூடி வைக்கலாம். வெப்பம் அதிகமான நாள்களில் கடுமையான உடல் வேலைகளைக் காலை 4 மணி முதல் 7 மணி வரை செய்துவிட்டு மற்ற நேரத்தில் தவிர்க்கலாம்.

பருத்தி ஆடைகள்:

  • கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளுக்கு மென்மையான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகள், மெத்தைகள், படுக்கை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். இவை சூட்டுக் கொப்புளங்களைத் தடுக்க உதவும்.
  • கிராமப்புறங்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிக உடலுழைப்பு வேலைகளைச் செய்கிறார்கள்.
  • குறிப்பாக, விவசாய வேலைகளைச் செய்கிறார்கள். அத்தகைய பெண்களுக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் வெப்ப அலை யின் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்கிற விழிப்புணர்வை வழங்குவது அவசியம்.

எவற்றைத் தவிர்க்கலாம்?

  • காபி, மதுபானங்களை அதிகமாகக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். புரதம் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவும் துரித உணவும் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம். மேலும் இவை வெப்பச் சோர்வு, வெப்ப மயக்கத்துக்கு வழிவகுக்கும்.

தண்ணீர் அருந்துவது அவசியம்:

  • ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். இளநீர், எலுமிச்சைச் சாறு, புதினா தண்ணீர் போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்களைப் பருகலாம். வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம் போன்ற வாசனைப் பொருள்களை அவ்வப்போது உண்ணலாம் அல்லது இப்பொருள்கள் ஊறவைத்த தண்ணீரைக் குடிக்கலாம். தயிர், மோர், லஸ்ஸி போன்ற புரோபயாடிக் உணவை நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்