வெப்ப மரணங்களும் நீளும் சிக்கல்களும்
- உயர் வெப்பநிலை மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல வகைப்பட்டவை:
- மன அழுத்தம், பதற்றம், நிலைகொள்ளாமையினால் தூக்கம் கெடுதல்; உடலின் நோய்த் தடுப்பாற்றல் வீழ்ச்சி; உடலைக் குளிர்விக்கும் முயற்சியாக இதயத் துடிப்பு அதிகரித்து, நிறைய வியர்க்கும்.
- உடல் நீர்ச்சத்தையும் அயனிகளையும் இழந்து, கடும் தாகம் ஏற்பட்டு, வாய் உலர்ந்து, மந்தநிலை உண்டாகும். அடுத்த கட்டம், உடலால் அதன் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த இயலாத நோய்மைநிலை. உடல் வியர்ப்பது நின்றுபோய், மூர்ச்சையாகிவிடும் நிலை. இதை வெப்ப மயக்கம் (heat stroke) என்கிறார்கள்.
- உலகின் மாறுபட்ட 750 பகுதிகளில் நிகழ்ந்த வெப்ப மயக்க மரணங்களைக் குறித்து நிகழ்த்தப்பட்ட மொனாஷ் ஆய்வு, ‘உலக அளவில் கோடை வெப்ப அலையினால் 100 இல் ஒருவர் மரணத்தை எதிர்கொள்கிறார்’ என்கிறது. இதில் அதிகப்படியான மரணங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில்- குறிப்பாக குவைத், லெபனான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நேர்கின்றன; ஈராக்கில் மட்டும் ஆண்டுக்கு 1,000 பேர் உயிரிழக்கின்றனர். 2024இல் இந்தியாவில் பதிவான வெப்ப மயக்க மரணங்கள் 143; 42,000 பேர் வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
தொழில்சார் சிக்கல்கள்:
- ‘முறையான, சீரான தொழில் சூழல்’ - இது பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் இலக்காக முன்னிறுத்தப்படுகிறது. காலநிலைப் பிறழ்வின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெப்ப நெருக்கடி, உலக அளவில் தொழிலாளர்களின் பணித் திறனையும், பணிநேரத்தின் அளவையும் பாதித்துள்ளது.
- காலநிலைப் பிறழ்வினால் நேரடியாகப் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக அச்சூழலில் தொடர்ந்து வேலை செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வெப்ப நெருக்கடியினால் இவர்களுக்கு நேருகிற பாதிப்புகளில் முக்கிய மானவை- வெப்ப மயக்கம், இதய நோய், சிறுநீரகக் கோளாறு, உடல் அழற்சி.
- ஆசிய - பசிஃபிக் பகுதிகள் நிலஅமைப்பில் மாறுபட்டவை. இந்தியநிலப்பரப்பு பல்வேறு வேளாண் பருவ மண்டலங்களை உள்ளடக்கியது. காலநிலைப் பிறழ்வின் தாக்கமும் அதற்கேற்ப மாறுபடுகிறது. 2030 வாக்கில் 16 - 20 கோடி இந்தியர்கள் வெப்ப அலைத் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- மக்கள்தொகை மிகுந்திருக்கும் நம் நாட்டில் முழுநேர வேலைவாய்ப்புகள் சரியும்; முறைசாரா தொழில்களங்களில் வேலைபார்க்கும் புலம்பெயரும் தொழிலாளர்களின் பணிக்களப் பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் மேலும் குறையும். ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை; அவர்கள் உழைத்தேயாக வேண்டும்.
- வெப்ப அலையின் பாதிப்புகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை உள்துறையுடன் இணைந்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தொழிலாளர்களுக்கு அறிவூட்டுதல், போதிய நீர் அருந்துதல், பணிநேரத்தை மறுசீரமைத்தல், அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்றவை அதில் உள்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பணிச்சூழலைப் பன்னாட்டுச் சூழலுக்கு நிகராகத் தரமேம்பாடு செய்வது மிக முக்கியமானது.
பொருளாதாரத் தாக்குதல்:
- காலநிலைப் பிறழ்வு 2022இல் இந்தியாவுக்கு 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண்டில் மொத்த உற்பத்தியில் 8% வீழ்ச்சி ஏற்பட்டது. 2021இல் 159 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. காலநிலை மாற்றம் பண வீக்கத்தை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வெப்பநிலை உயர்வினால் வேளாண் உற்பத்தி சரிவைச் சந்தித்தபோது உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது.
- 2030 இல் காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் 8 கோடி பேர் தொழிலை இழப்பார்கள் என ஐ.நா.வின் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. அதில் 3.4 கோடி பேர் இந்தியர்களாக இருப்பார்கள்.
பெண்களின் சிக்கல்கள்:
- சமூகப் பின்னடைவுகள் காலநிலைப் பிறழ்வின் தாக்கத்தை அதிகரித்திருக்கின்றன. ஏற்கெனவே பலவீனப்பட்டிருக்கும் தரப்பினர் இயற்கைச் சீற்ற, சமூக நெருக்கடிச் சூழல்களில் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாக நேருகிறது. இந்தியாவில் தொழிற்சாலைகளில் உழைக்கும் பெண்களில் 42% தமிழ்நாட்டவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
- சூழலியல் சிதைவினால் பெண்களுக்கு நேர்ந்துவரும் இழப்புகளைப் பன்னாட்டு முகமைகள் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆசிய - பசிஃபிக் பகுதிகளில் நிலவும் தனித்துவமான பொருளியல், பண்பாட்டுச் சூழலில் வெப்பநிலை உயர்வு பெண்களின் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
- நகர்ப்புறங்கள் / குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் குடியிருப்பிடங்கள் பெரும்பாலும் தாழ்ந்த கூரைகளுடன் தகரம், கல்நார்த் தகடுகள், ஞெகிழிப் பொருள்களால் அமைக்கப்படுபவை. இவ்வகைக் கட்டுமானம் அறை வெப்பநிலையை உயர்த்திவிடுகிறது. காற்றோட்டத்துக்கான ஜன்னல், வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் வசதிகள் எதுவும் இல்லாத நெரிசலான வீடுகளில் பெண்கள் பகல் பொழுதைச் சமையல்கட்டில் செலவிட வேண்டியிருக்கிறது.
- வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து, ஊதியமில்லா உழைப்பைத் தந்துகொண்டிருக்கும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் அன்றாடப்பணிச்சுமையின் முக்கியமான பகுதி, வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பதும். சமைப்பதற்கான எரிபொருளைத் (விறகு) தயார் செய்வதும், அன்றாடப் பயன்பாட்டுக்கான நன்னீரைச் சுமந்துவருவதும் அவர்களின் வேலையாக நம் சமூகத்தில் நிறுவப் பட்டிருக்கிறது.
- கிராமப்புறங்களில் 57% பெண்கள் சமையலுக்கு விறகை நம்பியிருக்கின்றனர். விறகு சேகரிக்க பகல் வேளைதான் உகந்தது. இதன் காரணமாக வெயிலுக்கு ஏற்றபடி உடுத்திக்கொள்ள, பண்பாட்டுக் கட்டுக்கோப்புகள் அனுமதிப்பதில்லை. கடுமையான வறுமையும், நன்னீர், மின்னாற்றல் பற்றாக்குறையும் இந்தச் சுமையை இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கின்றன. ‘வெப்ப அலைகளால் ஊதியமில்லா உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு இழப்பு ஏற்படுகிறது’ எனத் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் 2019 அறிக்கை குறிப்பிடுகிறது.
- திறந்தவெளியில் அன்றாடக் கூலிகளாக வேலைசெய்யும் பெண்களின் நிலைமையோ இன்னும் சிக்கலானது. தெருவோரக் கடைகள், சந்தைகள், கட்டுமானப் பணி, துப்புரவுப் பணி, வீடுகளில் பணிப்பெண்ணாக- இப்படிப் பல இடங்களிலும் அன்றாடம் அவர்கள் உழைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
- வெப்ப அலைகள் நீடித்தால் சாகுபடி குறையும் என்பதை அறிந்திருக்கும் நாம், திறந்தவெளியில், கடும் வெப்பச் சூழலில் நீண்ட நாள்கள் உழைக்கும் பெண்களுக்குத் தாய்மை/பேறு சார்ந்த நோய்கள் ஏற்படும் என்பது குறித்து நினைத்துப் பார்ப்பதில்லை.
- பெண்களின் உடல் இயங்கியல் ஆண்களின் உடலிலிருந்து மாறுபட்டது.தாய்மைப் பொறுப்பு சார்ந்து, பெண்ணுடல் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மாறுபட்ட ஹார்மோன்களால் ஒழுங்காற்றப்படுகிறது. மாதவிடாய்ச் சுழற்சியும் பிள்ளைப்பேறும் உடலின் வெப்ப ஒழுங்காற்றுத் திறனைப் பாதிக்கின்றன. உடலின் கொழுப்புச்சத்து விழுக்காடும் நீர்ச்சத்தின் அளவும் அதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
- ஆக, வீட்டில் இருந்தாலும், திறந்தவெளி என்றாலும், வெப்பம் மிகுந்த சூழலில் வேலை செய்துவரும் பெண்கள் பல வகையான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாக நேர்கிறது. பேறுகாலத் தாய்-சேய் இறப்புகள் வெப்பநிலை உயர்வினால் அதிகரித்திருப்பதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறைப்பேறு, கருச்சிதைவு, பச்சிளம் குழந்தை மரண விகிதங்களும் உயர்ந்து கொண்டிருக்கின்றன.
- பெண்களுக்காக யார் வழக் குரைப்பது? காலநிலைக்கு உகந்தநகரியத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தலாம்; வாய்ப்பு மறுக்கப் பட்டோருக்குக் காற்றோட்டமான சுகாதாரமான குடியிருப்புகளை உரிமையாக்கலாம்; பொது விநியோக வசதிகளை முறைப்படுத்தலாம். இவை யெல்லாம் பெண்களின் சுமையை ஓரளவு குறைக்கும். அடிப்படையில், மக்கள் உரிமை குறித்த தெளிவு ஆட்சியாளர்களுக்கு வேண்டும்.
- நாம் நினைத்தால் வீட்டில் பெண்ணின் மிகையான பணிச்சுமையில் ஒரு பங்கைப் பகிர்ந்துகொண்டு, அவரது வாழ்வைச் சற்று எளிதாக்க முடியும். தாய்மை என்பது பெண்ணின் மீது விழுந்த சாபமல்ல, சமூகத்துக்குக் கிடைத்த வரம் என்பதைச் செயல் முறையில் இனிதான் நாம் நிறுவ வேண்டியிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2024)