TNPSC Thervupettagam

வெறிச்சோடும் வானம்!

June 15 , 2021 1143 days 497 0
  • நிகழ் நிதியாண்டிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விற்பனை சாத்தியமாகாது போலிருக்கிறது. ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், நிகழ் நிதியாண்டில் மேலும் இழப்பை எதிர்கொண்டு, கடன் சுமை அதிகரிக்குமே தவிர இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்.
  • இந்தியன் ஏர்லைன்ஸ் என்றில்லை, ஒட்டுமொத்த விமான சேவைத் துறையும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

விமான சேவைத் துறை

  • விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, விமான சேவைத் துறையே நிலைகுலைந்து போயிருக்கிறது. கடந்த மாத இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 20 லட்சம் மட்டுமே.
  • ஏப்ரல் மாதம் 57 லட்சமாக இருந்தது நோய்த்தொற்று அதிகரிப்பால் மேலும் குறைந்தது. 2019 மே மாதத்தில் கொவைட்-19 நோய்த்தொற்று இல்லாமல் இருந்தபோது 1.22 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் வீழ்ச்சியின் தாக்கம் புரியும்.
  • கடந்த ஆண்டும் நிகழ் ஆண்டும் சேர்த்தால் இந்திய விமான போக்குவரத்துத் துறை சுமார் 8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.58,550 கோடி) அளவுக்கு இழப்பை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது.
  • இந்தியாவில் லாபகரமாக இயங்கும் விமான நிறுவனமான "இண்டிகோ' தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியமில்லாத விடுப்பு அறிவித்திருக்கிறது.
  • அடுத்த ஆண்டு வரை லாபத்தை எதிர்பார்க்க முடியாது என்று அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
  • கொள்ளை நோய்த்தொற்றால் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து விட்டது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 8 கோடி பேர் முதல் 9 கோடி பேர் மட்டுமே பயணிப்பார்கள் என்று இந்திய விமானத் துறை எதிர்பார்க்கிறது.
  • மூன்றாவது அலை நோய்த்தொற்று உறுதிப்படுமேயானால் அதுவும் சாத்தியமாகாது. 2019-இல் சுமார் 14 கோடி பயணிகள் பறந்ததுபோய், இப்போது உள்ளூர் விமான சேவை அதில் சரிபாதி அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • பெரும்பாலான விமானங்கள் சேவை இல்லாமல் விமான நிலையங்களில் முடங்கிக் கிடக்கின்றன. ஆனாலும்கூட, பழுதடைந்து விடாமல் இருப்பதற்காக தினந்தோறும் சில மணி நேரங்கள் ஆகாயத்தில் பயணிகள் இல்லாமல் பறந்தாக வேண்டும்.
  • கொவைட்-19 நோய்த்தொற்றுக்கு முன்னால் தினந்தோறும் 2000-க்கும் அதிகமான விமானங்கள் இந்திய வான்வெளியில் பறந்ததுபோய், இப்போது அதில் சரிபாதி அளவிலான விமானங்கள்தான் பறக்கின்றன.
  • அவையும்கூட மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லவும், அதிகாரிகள், மருத்துவர்கள் போன்றோர்களின் அவசர கால சேவைக்காகவுமே பெரும்பாலும் இயக்கப் படுகின்றன.
  • நோய்த்தொற்றுக்கு முன்னால் தில்லி விமான நிலையத்தில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து போய்க்கொண்டிருந்ததுபோய் இப்போது சுமார் 30,000 பயணிகள்தான் வருகிறார்கள்.
  • மூன்று முனையங்களில் இரண்டு மூடப்பட்டு, டெர்மினல்-2 மட்டுமே செயல்படுகிறது. மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்திலும் இதுதான் நிலைமை.
  • வெளிநாட்டுப் பயணிகள் வந்துபோவது என்பது முற்றிலுமாக முடங்கி விட்டது. அதிலும் இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் இரண்டாவது அலை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாகப் பல நாடுகளும் இந்தியாவுக்குப் பயணிப்பதை அனுமதிப்பதில்லை.
  • பன்னாட்டு விமான நிறுவனங்களின் இந்திய சேவையும் குறைந்து விட்டது. இதே நிலை இந்த ஆண்டு முழுவதும் தொடருமே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட வழியில்லை.
  • அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது இந்திய விமான சேவைத் துறை. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிவேகமான வளர்ச்சியைக் கண்டதன் காரணமாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில்கூட விமான நிலையங்கள் உருவாகின.
  • 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் இரட்டிப்பு வளர்ச்சியை எதிர்கொண்டது இந்திய விமான சேவைத் துறை.
  • 2015-இல் 20.8%, 2016-இல் 22.2%, 2017-இல் 18.2%, 2018-இல் 18.6% என்று வளர்ந்து கொண்டிருந்த விமான சேவைத் துறை இப்படியொரு திடீர் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்று யாரும் கனவில்கூட எதிர்பார்த்திருக்க முடியாது. கொள்ளை நோய்த்தொற்று அந்தப் பாவத்தைக் கட்டிக் கொண்டது.
  • அதிவேகமான வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் விமான நிலையங்கள் தவித்தன.
  • 6 கோடி பயணிகளை ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் விதத்தில் அமைந்த தில்லி விமான நிலையம், 2018-19 இல், சுமார் 7 கோடி அளவிலான பயணிகள் வந்தபோது திகைத்துப் போனது.
  • வளர்ச்சியின் வேகத்தை ஈடுகட்ட 10 கோடி பயணிகளை எதிர்கொள்ள விரிவாக்கத்துக்கு முனைந்தது. இதேதான் மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் விமான நிலையங்களின் நிலைமையும்.
  • இப்போது விமான சேவையும் குறைந்து, பயணிகள் வருகையும் குறைந்த நிலையிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பராமரிப்புச் செலவுகள் குறையாததால் கடும் நிதி நெருக்கடியை விமான நிலையங்கள் எதிர்கொள்கின்றன.
  • விமான ஊழியர்களை ஊதியமில்லா விடுப்பில் அனுப்புவதுபோல, விமான நிலைய ஊழியர்களையும், விமானப் பராமரிப்பு ஊழியர்களையும் குறைத்துவிட முடியாது.
  • வரவில்லாமல் வழக்கம்போல பராமரிப்புச் செலவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் விமான நிலையங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று, மனிதர்களைப் போலவே விமான சேவைத் துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது.
  • நோய்த்தொற்றிலிருந்து உலகம் மீண்டாலும்கூட எதிர்கொண்டிருக்கும் இழப்பிலிருந்து பல விமான சேவை நிறுவனங்கள் மீண்டெழுமா என்பது கேள்விக்குறியே.

நன்றி: தினமணி  (15 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்