TNPSC Thervupettagam

வெறுப்பரசியலைத் தடுப்பதில் உங்கள் பங்கு என்ன?

October 27 , 2022 653 days 379 0
  • இந்தியாவெங்கும் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கட்டற்றுப் பெருகிக்கொண்டிருந்த வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த இப்போது ஒரு விரல் உயர்ந்திருக்கிறது, ஒரு குரல் ஒலித்திருக்கிறது. மக்கள் நம்பிக்கை இழந்து கும்மிருட்டில் கை பிசைந்து நிற்கும்போதெல்லாம் உதவிக்கு வரும் உச்ச நீதிமன்றம்தான் இப்போதும் அந்த நம்பிக்கைச் சுடரை ஏற்றியிருக்கிறது. ‘வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்துங்கள்’ என மூன்று மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு 20.10.22 அன்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு மிக முக்கியமான இடையீடு!

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?

  • முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பல்வேறு நபர்களால் பேசப்பட்ட வெறுப்புப் பேச்சுகளைப் பட்டியலிட்டும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இருந்தும் அவை செயல்படுத்தப்படாத நிலை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியும் மனுதாரர்களுக்காக நீதிபதிகளின் முன்பு வாதாடினார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். அதைக் கேட்ட நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், தனிநபர்களுடைய கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்; அதுவே நாட்டின் ஒற்றுமைக்கு வழிகோலுவதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, டெல்லி போலீஸ் கமிஷனருக்கும், உத்தராகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களின் டிஜிபிகளுக்கும் குறிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். 

நீதிமன்றத்தின் உரத்த குரல்

  • “வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வெறுப்புப் பேச்சுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ, 153பி, 295ஏ, 550 ஆகிய பிரிவுகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது எவரும் புகார் சொல்லவில்லை என்றாலும்கூட, தானே முன்வந்து காவல் துறை வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப காவல் துறை உயர் அதிகாரிகள் தமக்குக் கீழே பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்!”
  • “சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குத் தயக்கம் காட்டப்பட்டால் அது இந்த நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கருதி குறிப்பிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்கும்!”
  • “வெறுப்புப் பிரச்சாரத்தில் யார் ஈடுபட்டாலும் அவரது மதம் என்ன, அவர் எத்தகையவர் என்பதைப் பற்றியெல்லாம் பார்க்காமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை என்ற பண்பைக் காப்பாற்ற வேண்டும்!”
  • இவையெல்லாம் தன்னுடைய உத்தரவில் கண்டிப்பான குரலில் நீதிபதிகள் வலியுறுத்தியிருக்கும் கருத்துகள்.

எங்கே தொடங்குகிறது வரலாறு?

  • வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே விவாதங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்திய தண்டனை சட்டத்தில் 153ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. 292, 293 மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளும் இதைக் கையாள்வதற்கு வழி செய்யப்பட்டன. ஆனால், அந்தப் பிரிவுகள் நமது சட்ட அமைப்புகளால் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
  • இரண்டு மதத்தினருக்கிடையில், இனங்களுக்கிடையில், மொழியினருக்கிடையில் பகைமையை ஏற்படுத்தினால், பகை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசினால், செயல்பட்டால் இந்தப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
  • சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பிரிவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டத்திலோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ ’ஹேட் ஸ்பீச்’ எனப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ என்பதற்கு சரியான விளக்கமும் தரப்படவில்லை. ‘ப்ரவாசி பாலாய் சங்காதன் எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் 2014இல் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது.
  • இந்திய சட்ட ஆணையம் ’ஹேட் ஸ்பீச்’ என்பதை வரையறுக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

பொறுப்பு அனைவருக்குமானது

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்ட ஆணையம் பரிசீலித்தது. அதனடிப்படையில் தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை (அறிக்கை எண்: 267) இந்திய ஒன்றிய அரசிடம் அது 2017 மார்ச் 23ஆம் தேதி சமர்ப்பித்தது. வெறுப்புப் பேச்சு என்றால் என்ன? யார் பேசும் வெறுப்புப் பேச்சைக் குற்றமாகக் கருத வேண்டும்? அதற்கு எவ்வளவு தண்டனை விதிக்க வேண்டும்? – இப்படிப் பல்வேறு விஷயங்களையும் சட்ட ஆணையம் தனது அறிக்கையில் ஆராய்ந்திருக்கிறது.
  • இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐபிசி) 153சி, 505ஏ என இரண்டு பிரிவுகளைப் புதிதாக சேர்க்க வேண்டும் எனச் சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அந்த சட்டப் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு ஏதுவாக ‘குற்றவியல் சட்டத் திருத்த மசோதா (2017)’ என ஒரு சட்ட மசோதாவையும் தயாரித்து ஒன்றிய அரசிடம் சட்ட ஆணையம் வழங்கியிருக்கிறது.
  • சட்ட ஆணையம் ஐபிசியில் சேர்க்கும்படி கூறிய பிரிவு 153சி. “அச்சுறுத்தக்கூடிய விதத்தில் எழுதுவது அல்லது பேசுவது; குறியீடு, பார்க்கக்கூடிய அல்லது கேட்கக்கூடிய எதேனும் ஒன்றின் மூலமாக அச்சுறுத்துவது; வன்முறையைத் தூண்டும் வகையில் குறியீடு, எழுத்து அல்லது பேச்சின் மூலம் வெறுப்பை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது 5,000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது அது.
  • சட்ட ஆணையம் ஐபிசியில் சேர்க்கும்படி பரிந்துரைத்த இன்னொரு பிரிவான 505ஏ: ”பொதுவெளியில் எவரேனும் ஒருவர் - மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பிறந்த இடம், இருப்பிடம், மொழி, உடல் ஊனம் முதலானவற்றின் அடிப்படையில் அச்சுறுத்தும் விதமாகவோ அவதூறு செய்யும் விதமாகவோ பேசுவது எழுதுவது, கோபமூட்டுவது அல்லது வன்முறையைத் தூண்டுவது – என்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனையோ அல்லது 5,000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வேண்டும்” என அது கூறுகிறது.
  • சட்ட ஆணையம் தயாரித்துக்கொடுத்த மசோதாவைக் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசு கிடப்பில் போட்டுவைத்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தேர்தல் ஆணையமும் மதிக்கவில்லை. இந்தக் கொடுமை ஒருபக்கம் என்றால், சட்ட ஆணையம் தயாரித்துத் தந்த மசோதாவை ஏன் இதுவரை சட்டமாக்கவில்லை என்றோ, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தேர்தல் ஆணையம் ஏன் செயல்படுத்தவில்லை என்றோ எந்தவோர் எதிர்க்கட்சியும் கேட்கவில்லை என்பது அதைவிடப் பெருந்துயரம்.
  • உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாடிய கபில் சிபலைப் பார்த்து, “நீங்கள் ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்தீர்களில்லையா? அப்போது இதற்காக ஏதேனும் திட்டத்தை முன்வைத்தீர்களா?” என உச்ச நீதிமன்றம் கேட்டது. அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, ‘வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?’ எனக் கேட்கப்பட்டால் நம்மாலும்கூட பதில் சொல்ல முடியாது. 
  • வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பது முதன்மையாக ஒரு அரசியல் பணி.
  • வெறுப்பால் மட்டுமே ஜீவித்திருக்கும் ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அரசாங்க எந்திரமானது தானே முன்வந்து வெறுப்பை அணைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதைச் செய்யவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது!

நன்றி: அருஞ்சொல் (27 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்