TNPSC Thervupettagam

வெறுப்பின் கரங்கள் இன்னும் எவ்வளவு நீளும்?

January 2 , 2025 9 days 32 0

வெறுப்பின் கரங்கள் இன்னும் எவ்வளவு நீளும்?

  • சமூக ஊடகங்களில் போலிக் கருத்துகளும் தனிமனித அவதூறுகளும் வெறுப்புணர்வும் அதிகரித்துவருவதைப் பார்க்கிறோம். பல ஆண்டுகளாகவே சிலரை ஒரு நோய் பீடித்திருக்கிறது. அது ‘இனத்தூய்மை’ நோய். அந்நோய் பீடித்தவர்கள் பரப்பும் வெறுப்பு அறிவுக்கு மட்டுமல்ல, மனிதத் தன்மைக்கே பொருந்தாததாக இருக்கிறது. ஒருவர், இணையவெளியில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்றால், உடனடியாக அவரது சாதி, மதம் என்னவென்று கண்டுபிடிக்க முயல்வது இந்த நோயின் முதல் அறிகுறி.
  • பெயர், உடல் தோற்றம், உடை அணியும் பாணி, மொழியை உச்சரிக்கும் பாங்கு, வட்டார வழக்கு, வசிக்கும் இடம், செல்லும் வழிபாட்டுத் தலம் என்று பல்வேறு காரணிகளின்(!) துணையுடன் சம்பந்தப்பட்டவரைச் சோதனைக் குழாயிலிட்டு ஆய்வுசெய்து, அவர் என்ன சாதி என்றோ என்ன மதம் என்றோ தீர்ப்புக் கொடுப்பார்கள். அவர்களுடைய செயல் காரணமற்றதாகத் தோன்றினாலும் இதன் விளைவுகள் மோசமானவை.

சுவீகரித்துக்கொள்ளும் முனைப்பு:

  • எந்த மனிதரின் சாதனையையும் குற்றத்​தையும் ஒரு சமூகப் பின்னணி​யுடன் பொருத்திப் பார்த்துப் பொதுமைப்​படுத்துவதே இவர்களின் பணியாக இருக்​கும். ‘இந்தச் சாதிக்​காரர்கள் இப்படிப்​பட்​ட​வர்​கள்’, ‘இந்த மதத்தவர் இப்படித்தான் நடந்து​கொள்​வர்’, ‘இந்த ஊர்க்​காரர்​களின் புத்தி இப்படித்தான் இருக்​கும்’ என்று முத்திரை குத்து​வதில் போய் முடியும், இவர்களுடைய செயல்​பாடு​களின் விளைவு. இதனால் பொதுச்​சமூகத்தில் ஒரு சமூகம் உயர்ந்​த​தாகவோ அல்லது இழிவான​தாகவோ சித்தரிக்​கப்​படும்.
  • இப்படிப்பட்ட நபர்களுக்கு உலகமெங்கும் பங்காளிகள் உண்டு. பிரபல​மானவர்​களின் சமூகத்தைக் கண்டறிய அவர்களும் படாதபாடு படுகிறார்கள். 2009ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்​ராமன் ராமகிருஷ்ணன் பெற்ற​போது, அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூகுளில் தேடியவர் எண்ணிக்கை பல லட்சம்.
  • இது ஓர் எடுத்​துக்​காட்டு​தான். ஒவ்வொரு தலைப்புச் செய்திக்கும் சாதிய அகராதி​களின் ஏதாவது ஒரு பக்கத்தை இணையம் மூலம் தொட்டுவிட முடியுமா என்று ஆராய்வோர் இவர்கள். பிரபலங்​களின் சாதனையைத் தங்கள் சமூகத்தின் சாதனை​யாகச் சுவீகரித்​துக்​கொள்ள முடியுமா என்கிற ஆற்றாமை அதன் பின்னணியில் இருக்​கிறது.
  • அதேபோல, குறிப்​பிட்ட சமூகத்தை / சமூகங்​களைப் பூதக்​கண்ணாடி வைத்துக் கண்காணிக்கும் உளவியலையும் இணையத்தில் பார்க்க முடிகிறது. சென்னையைச் சேர்ந்த குகேஷ், செஸ் உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டராக வாகை சூடியிருக்​கிறார். செஸ் ஜாம்ப​வான்கள் அனைவரும் அவரைப் போற்றி வாழ்த்து​கின்​றனர். சும்மா இருக்குமா சமூக ஊடகக் குழாம்? உடனே கூகுளில் ‘குகேஷின் தாய்மொழி என்ன?’ என்று தேடத் தொடங்​கியது.
  • அவர் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்​ததும் போர் முரசு ஒலிக்கத் தொடங்கி​விட்டது. ‘ஒரு தெலுங்குப் பையனின் வெற்றிக்கு ஏன் தமிழர்கள் குதூகலிக்​கிறார்​கள்?’ என்று இணையத்தில் வெறுப்புப் பிரச்​சாரம் தொடங்​கப்​பட்டது. உடனே, ‘குகேஷ், சென்னையின் அடையாளம். தமிழ்​நாட்டின் அடையாளம். இந்தியாவின் பெருமை... அவரை இப்படிச் சின்ன வட்டத்​துக்குள் வைத்துப் பார்க்​காதீர்கள்’ என்று இணையவாசிகளில் பலரும் எதிர்வினை ஆற்றினர். ஆந்திர முதல்​வரும் துணை முதல்​வரும் குகேஷை, ‘தெலுங்கு பேசும் மக்களின் பெருமை’ என்று புகழ்ந்து பாராட்ட, இவ்விஷ​யத்​துக்கு வேறு ஒரு சாயம் பூசப்​பட்டது.
  • உடனே, ‘சமூக ஊடகக் குழாம்’ வேறோர் ஆயுதத்தைக் கையில் எடுத்தது. ‘தமிழரான தடகள வீரர் (பாராலிம்​பிக்) மாரியப்​பனுக்கு எவ்வித உதவியையும் தமிழ்நாடு அரசு செய்ய​வில்லை. தெலுங்கு மொழி வீரருக்குக் கோடிக்​கணக்கில் பரிசா?’ என்று ஒரு பிரச்​சாரம் தொடங்​கப்​பட்டது.
  • 2016இல் ரியோவில் வென்ற மாரியப்​பனுக்குத் தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி பரிசளித்தது; 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்​பிக்கில் வென்றதை அடுத்து மேலும் ரூ.2 கோடி பரிசளிக்​கப்​பட்டது என்பன உள்ளிட்ட தகவல்களை மீண்டும் நினைவூட்ட வேண்டி வந்தது.
  • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அவருக்குத் துணைமேலாளர் பதவி (குரூப் 1 அலுவலர்) வழங்கப்​பட்​டிருக்​கிறது. எனவே, இது இனரீதியிலான வெறுப்புப் பிரச்​சாரம் என்பதே உண்மை. இந்தத் தகவல் ஊடக யுகத்தில் தகவல்​களைச் சரிபார்ப்​பதில் பலரும் சிரத்தை எடுத்​துக்​கொள்​வ​தில்லை.

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக...

  • வெறுப்பின் கரங்கள் எங்கும் நீக்கமற நிறைந்​திருக்​கின்றன. அண்மையில் ஐ.நா. அவை, ‘வெறுப்​புக்கு ‘நோ’ சொல்வோம்!’ என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பை நடத்தியது. ஐ.நா. அவையின் நியூயார்க் அலுவல​கத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி, இளைஞர்​களுக்கான ஒன்றுகூடல் நடத்தப்​பட்டது.
  • ‘இளையோர் சக்தியை வெறுப்புப் பிரச்​சா​ரத்​துக்கு எதிராகப் பயன்படுத்​துதல்’ என்ற முழக்​கத்தோடு அந்நிகழ்ச்சி நடத்தப்​பட்டது. ‘வெறுப்புப் பிரச்​சாரம் மூலம் பிரிவினையைத் தூண்டு​வதற்கும் அமைதியைக் குலைப்​ப​தற்கும் இணையம் பயன்படுத்​தப்​படு​கிறது’ என்கிறது ஐ.நா-வின் இணையதளம்.
  • 2019இல் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான வியூகத்​தை​யும், செயல் திட்டத்​தையும் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவித்தது. அதன்படி சாத்தி​ய​முள்ள அனைத்து வழிகளிலும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான நடவடிக்கை​களில் உறுப்பு நாடுகளுடன் ஐ.நா. கைகோக்​கும். இதனைத் தொடர்ச்​சியாக உறுதிப்​படுத்த ஜூன் 18ஆம் தேதியை வெறுப்புப் பேச்சுக்கு எதிரான நாளாக ஐ.நா. கடைப்​பிடிக்​கிறது.
  • ஒரு சமூகத்தின் மீதான வெறுப்பு​ணர்வு, ஒரு கட்டத்தில் இன அழிப்​புக்கு இட்டுச் செல்லும் என்று ஓர் அனுபவ மொழி இருக்​கிறது. ஜெர்மனி​யிலும் இத்தாலி​யிலும் அதனை வரலாறு கண்கூ​டாகக் கண்டிருக்​கிறது. நாம் அதற்கு எதிரான இணக்கமான மரபில் வந்தவர்கள் என்பதை மறந்து​விடக் கூடாது. வெறுப்பு​ணர்வு ​சார்ந்த அவலம் நே​ராமல் இருக்க அனை​வரும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்