- முழுமையான ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்று பல்வேறு முறைகள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டாலும் இவற்றில் எது சரியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
- தடுப்பூசியோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத வரையில், ஊரடங்கு என்பது கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்க முடியும்.
- ஊரடங்கின் முழு வெற்றி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமில்லை; ஊரடங்கின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதையும் உள்ளடக்கியிருக்கிறது.
- ஊரடங்கை வெற்றிகரமாகக் கையாண்டு நோய்ப் பரவலையும் பொருளாதார இழப்பையும் கட்டுப்படுத்திய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கான பாடங்களும் இருக்கின்றன.
நெதர்லாந்து அனுபவம்
- பிப்ரவரி 27 அன்று நெதர்லாந்தில் முதல் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இத்தாலிக்கு சுற்றுலா சென்றவர்கள் வழியாக நெதர்லாந்துக்குள் கரோனா நுழைந்தது.
- இத்தாலிக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கும்படி மக்களை அறிவுறுத்தியது நெதர்லாந்து அரசு.
- நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும் கை குலுக்கும் பழக்கத்தைத் தவிர்க்கும்படியும், நோய்ப் பரவல் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், விழாக்களையும் பெருங்கூடுகைகளையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
- நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும் அணுகுமுறை மாறியது. வயதானவர்களையும் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களையும் தவிர்த்து, இளைஞர்களும் பாதிப்புக்கு அதிக வாய்ப்பில்லாதவர்களும் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
- தொற்றுக்கான சிறுசிறு அறிகுறிகளோடு இருப்பவர்கள் அதற்கெதிரான நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெறுவார்கள் என்ற அடிப்படையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், இதை நெதர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
- மேலும், இது அந்நாட்டின் துணைத் திட்டமாகத்தான் இருந்ததேயொழிய முதன்மைத் திட்டமாக இல்லை.
அறிவுபூர்வமான ஊரடங்கு
- இந்தியாவைப் போல முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தாமல், எந்தெந்தத் தொழில் நடவடிக்கைகளில் நோய்ப் பரவலுக்கு வாய்ப்பிருக்கிறதோ அவை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன.
- நேரடி மனிதத் தொடர்புகள் அவசியமாக இருக்கும் அழகுநிலையங்கள், சிகைத் திருத்தகங்கள், பல் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்றவை மூடப்பட்டன. ஆனால் பேரங்காடிகள், மதுக்கடைகள், அடுமனைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டன.
- மக்கள் மிதிவண்டியில் செல்லவோ நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நிற்கக் கூடாது, ஒன்றரை மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு நண்பர்களைச் சந்திக்கவும்கூட அனுமதிக்கப்பட்டார்கள்.
- விளைவாக சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
முதியோர்க்கு முன்னுரிமை
- பேரங்காடிகள் வழக்கம்போல திறந்திருந்தாலும் நேரக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. காலையில் கடைகளைத் திறக்கும்போது முதலாவதாக முதியோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
- கடைகள் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதால் நோய்த்தொற்றுக்கு வாய்ப்பு இல்லை என்பதோடு, அப்போது கூட்டம் குறைவாக இருக்கும் என்பதும் காரணம்.
- தனிமனித இடைவெளியைக் கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்கள் பேரங்காடிகளில் நுழைவதற்கு முன்பே அவர்களிடம் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ட்ராலி கொடுக்கப்பட்டது. அவர்கள் அதைப் பயன்படுத்தியதும் கிருமிநாசினி கொண்டு அவை சுத்தப்படுத்தப்பட்டன.
- கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் முறை தவிர்க்கப்பட்டது. இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பாக வங்கிகளும் அதிகபட்சப் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தின.
- ஊரடங்கே வேண்டாம் என்று முடிவெடுத்த ஸ்வீடனைப் போலவே நோய்ப் பரவல் உள்ள இடங்களில் மட்டுமே ஊரடங்கை நடைமுறைப்படுத்திய நெதர்லாந்து அனுபவமும் உலகளவில் நோய்த்தொற்றியல் வல்லுநர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகிறது.
இயல்புக்குத் திரும்புதல்
- நோய்ப் பரவல் குறைய ஆரம்பித்தவுடன் மே11-க்குப் பிறகு பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. ‘ஒன்றரை மீட்டர் பொருளாதாரம்’ என்ற பெயரில் தனிமனித இடைவெளியுடன் வாய்ப்புள்ள அனைத்துத் தொழில் துறைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
- முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதோடு செப்டம்பர் வரையில் பெருங்கூடுகைகள், உடற்பயிற்சி நிலையங்கள், பாலியல் தொழில் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- செயல்படக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருக்கிற துறைகளில் பணியாற்றுவோருக்குத் தொடர்ந்து ஊதியம் கிடைக்கச்செய்யும் வகையில் வேலையளிப்போருக்கு அரசே நிதியுதவிகளை அளித்துவருகிறது. சுயமாகத் தொழில்புரிவோருக்கு அவர்களின் வருமான இழப்பை ஈடுகட்டும் வகையில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. விவசாயிகளுக்கும் சிறு குறு தொழில் துறையினருக்கும் கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
- தொழில் முனைவோர்கள் கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைந்த வட்டியுடன் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இதனால், நிதிப் பற்றாக்குறை 3%-ஐக் காட்டிலும் அதிகரிக்கக்கூடும் என்றாலும் அந்த வரம்பைத் தளர்த்திக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும் அனுமதியளித்துவிட்டது.
- இத்தனைக்கும் மேலாக, முழு ஊரடங்கைத் தவிர்ப்பது என்ற முடிவு நெதர்லாந்து நாடாளுமன்றத்தால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்துப் பெரும்பான்மையுடன் எடுக்கப்பட்ட முடிவு.
- ஊரடங்கைத் தவிர்த்தாலும் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டன.
- கொள்ளைநோய்க் கால ஊரடங்கு என்பது அனைவரையுமே வீட்டில் இருக்கச் செய்வதல்ல; வாய்ப்புள்ளவர்களைப் பாதுகாப்பான முறையில் பணிபுரிய அனுமதித்தலும்தான். பணிபுரிய வாய்ப்பில்லாதவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் வருமான இழப்பை ஈடுகட்டுவதும்தான்.
நன்றி: தி இந்து (18-06-2020)