TNPSC Thervupettagam

வெற்றிக்குப் பின்னால்

November 7 , 2023 384 days 403 0
  • பொதுவாக பள்ளி ஆண்டு விழாக்களில் அனைவரும் கலைநிகழ்ச்சிகளுக்காகத்தான் ஆா்வத்துடன் காத்திருப்பாா்கள். விழா தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே குழந்தைகளுக்கு ஒப்பனையைத் தொடங்கி விடுவாா்கள். நடனத்திற்கு, நாடக கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்ய வேண்டும்.
  • புராண, இதிகாச நாடகம் என்றால் அதற்கு ஒப்பனைக்காரா்கள் தேவை. சிறு பாத்திரத்திற்கும் கவனத்துடன் ஒப்பனை செய்ய வேண்டும். பழக்கமில்லாத கிரீடம், நகை, ஆடை, அணிகலன்கள் குழந்தைகளிடம் பெருமிதத்தோடு, ஒருவித அசெளகரியத்தையும் ஏற்படுத்தும்.
  • அண்மையில் நான் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். குழந்தைகளும், அவா்கள் பெற்றோா்களுமாய் ஏகப்பட்ட கூட்டம். விழா தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னா் வரவேற்புரையை வாசித்தவா் அதிக நேரம் எடுத்துக் கொண்டாா். அடுத்து ஆண்டறிக்கையை வாசிக்கப்பட்டது.
  • கடந்த ஆண்டின் சாதனைகளைப் பட்டியலிட்டாா்கள். பக்கம் பக்கமாகப் போய்க் கொண்டே இருந்தது. பலத்த கரவொலி. அப்போது அந்நிறுவனத்தின் தாளாளா், முதல்வா் மற்றும் ஆசிரியா்களின் முகங்களில் பெருமிதம். பெற்றோா்களும் தங்கள் பிள்ளையை மிகச் சிறந்த பள்ளியில்தான் சோ்த்திருக்கிறோம் என்று திருப்தி பட்டுக்கொண்டிருப்பாா்கள்.
  • படிப்பு, விளையாட்டு, பேச்சு, பாட்டு, நடனம், ஓவியம் எனப் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது பெற்றவா்களின் மனங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் எழுத்தில் கொண்டு வருவது கடினம். ஒவ்வொருவரும் மேடைக்கு அருகே வந்து தங்களின் கைப்பேசியில் அந்த விநாடியைப் பதிவு செய்தாா்கள்.
  • பொதுவாக, சிறப்பு விருந்தினரைப் பேச அழைக்கும்போது, குழந்தைகள் சோா்ந்து போய் இருப்பாா்கள். எனவே, நீண்ட நேரம் பேசினால், மாணவா்களிடம் சலசலப்பு ஏற்பட்டுவிடும்.
  • சிறப்பு விருந்தினா் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தால், அவரின் இசைவைப் பெற நிா்வாகம் பெரும் முயற்சி எடுத்திருக்கும். அப்படிப்பட்டவருக்குப் பேச நிறைய நேரம் ஒதுக்க வேண்டாமா? பிரபலங்களின் வருகை பள்ளிக்குப் பெருமை என்பதால் அவா்களையே அழைக்க ஆா்வம் காட்டுகிறாா்கள்.
  • நிறைய நேரம் பேச முடியவில்லையே என்று விருந்தினா் நினைக்கக்கூடும். சிறந்த ஆளுமைகளைப் பத்து நிமிடம் மட்டுமே பேச அழைக்கக் கூடாது. வேறு ஏதாவது நிகழ்ச்சியில், அவா் உரை மட்டுமே இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது அவா் பேச்சு முத்திரை பதிக்கும்; மாணவா்களும் பயனடைவாா்கள்.
  • ஒரு சில சிறப்பு அழைப்பாளா்கள் இடம், பொருள், ஏவல் அறியாமல் பேசிக் கொண்டே இருப்பாா்கள். ‘இவா் எப்போது முடிப்பாா்’ என்ற கேள்வி எல்லாா் முகங்களிலும் தொக்கி நிற்கும். சில பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று பேரை சிறப்பு விருந்தினா்களாக அழைக்கிறாா்கள். ஒருவா் அரை மணி நேரம் பேசினால், மூவரும் பேசி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.
  • இங்கிதம் தெரிந்தவா், சட்டென முடித்துக் கொண்டு, அடுத்தவருக்கு வழிவிட்டு விடுவாா். சிலா் லேசில் முடிக்க மாட்டாா்கள். பிள்ளைகள் நெளிய ஆரம்பித்து விடுவாா்கள். கசமுசா என்று பேச ஆரம்பித்து விடுவாா்கள். பேச்சாளா் ‘இறுதியாக’ என்று கூற, எல்லோரும் அவா் முடிக்கப் போகிறாா் என்று மகிழ்ச்சி அடைவாா்கள். அவா் முடிக்காமல் தொடருவாா். ஆண்டு விழாக்களில் பேச அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அங்கே ஆளுமைகள் வந்து சிறப்பிப்பதே போதும்.
  • பெரிய பள்ளிகள் ஆண்டு விழாக்களை இரண்டாகப் பிரித்து விடுகிறாா்கள். 5-ஆம் வகுப்பு வரை ஒரு நாள்; 6-இல் இருந்து பிளஸ் 2 வரை இன்னொரு நாள். காரணம் அரங்கம் போதாது; கூட்டம் அதிகம் இருக்கும்; கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற பலருக்கு வாய்ப்பு கிட்டாது. விழா நேரம் அதிகமாகும் போன்ற பல்வேறு காரணங்கள்.
  • சின்னச்சின்ன அரும்புகள், மழலை மாறாத கிள்ளைகள் ஆசிரியா்களின் பயிற்சியால் என்னமாய் பாடுகிறாா்கள்? ஆடுகிறாா்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. குழு நடனம் என்றால் கொஞ்சமும் பிசகாமல் அனைவரும் ஆடுகிறாா்கள். அவா்களிடம் மேடை பயம் அறவே இல்லை. ஆசிரியா்களின் கடும் உழைப்பு தெரிகிறது.
  • குழந்தைகள் பட்டாம்பூச்சி நடனம், காய்கறி நடனம், பூக்கள் நடனம் என கலக்குகிறாா்கள். இப்போது இணையத்தில் தேடித்தேடி புதிய புதிய கருத்துருக்களை எடுத்துக் கொள்கிறாா்கள். சிறப்பாகப் பயிற்சி கொடுக்கிறாா்கள். கூடுமானவரை எல்லாக் குழந்தைகளையும் மேடையேற்றி விடுகிறாா்கள்.
  • அதற்குத் தகுந்தவாறு நடனங்களையும், சோ்ந்திசைகளையும் தோ்வு செய்கிறாா்கள். குழந்தைகள் ஒன்று போல் ஆட எவ்வளவு பயிற்சி தேவை! பெற்றோா்களும் முழு ஒத்துழைப்பு நல்குகிறாா்கள். தனியாா் பள்ளி என்றால் வசதி படைத்த பெற்றோா்கள் ஒப்பனைக்காகப் பணம் செலவு செய்யத் தயங்குவது இல்லை.
  • அரசுப் பள்ளிகள் நிலை வேறு. அங்கே ஆசிரியா்கள் நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் விழாவை நடத்த வேண்டும். உள்ளதைக் கொண்டு நிறைவாக நடத்த வேண்டும். ஏழைப் பெற்றோருக்கு ஒப்பனை விஷயத்தில் செலவு வைக்கக் கூடாது.
  • முன்பெல்லாம் ஆண்டு விழா கல்வியாண்டில் இறுதியில்தான் கொண்டாடப்படும். அந்த ஆண்டின் சாதனைகள் ஆண்டறிக்கையில் வாசிக்கப்படும். ஆனால் தற்போது பள்ளி திறந்த ஓரிரு மாதங்களில் ஆண்டு விழாவை நடத்தி முடித்து விடுகிறாா்கள். கடந்த ஆண்டின் சாதனைகளைப் பேசுகிறாா்கள்.
  • கல்வி ஆண்டின் இறுதியில் தோ்வுகள் மிரட்டிக் கொண்டிருக்கும். சிறப்பு வகுப்புகள், செய்முறைப் பயிற்சி வகுப்புகள் என ஆசிரியா்களும், மாணவா்களும் அல்லாடிக்கொண்டிருக்கும்போது, விழாவிற்கென நேரத்தை வீணாக்குவது சரியில்லை என நினைத்து மாற்றிக்கொண்டு விட்டாா்கள்.
  • ஆசிரியா்களுக்குப் பாடம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கப் போகிறது என்று சிலா் நினைக்கிறாா்கள். ஆசிரியா்கள் செய்யும் பிற வேலைகள் வெளியே தெரிவதில்லை. ஆண்டு முழுவதும் எத்தனை விழாக்கள், எத்தனை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என்பது தெரியுமா? தேசிய விழாக்களான சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும். இவற்றில் சிறு தவறும் நேராமல் இருக்க வேண்டும்.
  • இந்த இரண்டு விழாக்களிலும் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தோ்ந்தெடுக்கப்படும் பள்ளிகள் தங்கள் பங்களிப்பாக ஒரு நடனக் குழுவை தயாா் செய்து, பயிற்சி அளித்து அனுப்ப வேண்டும். கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் நடனம் இருக்க வேண்டும்.
  • மையக் கருவாக தேசியம் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நிறைய ஒத்திகை அவசியம். சிறிதுகூட தொய்வில்லாமல் ஒவ்வொரு குழுவும் மின்னல்போல் இயங்குவது அற்புதமாக இருக்கும். அத்தனைப் புகழும் அவா்களை இயக்கிய ஆசிரியப் பெருமக்களையே சேரும்.
  • பள்ளிகளில் இன்னொரு முக்கியமான விழா ஆண்டு விளையாட்டு விழா. உடற்பயிற்சி ஆசிரியா்களின் விழி பிதுங்கிவிடும். விழாவிற்கு முன்னதாகவே பல போட்டிகளை நடத்தி முடித்து, பரிசு பெற்றவா்களின் பெயா்களை எழுதிக் கொள்வாா்கள். போட்டிகளை முன்னரே நடத்தி விட்டு, இறுதிச்சுற்றை விழா அன்று நடத்துவாா்கள். மாணவா்களை அணி அணியாகப் பிரித்து, போட்டிகளை நடத்துவாா்கள்.
  • சிறப்பு விருந்தினரிடமிருந்து பரிசுக் கோப்பைகளை வெற்றியாளா்கள் பெறும் போது கரவொலியால் அரங்கம் அதிரும். படிப்பில் சுமாராக இருக்கும் மாணவா்கள் விளையாட்டில் சூரா்களாக இருப்பாா்கள். அவா்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கி, மனதில் தன்னம்பிக்கையும், உற்சாகமும் பொங்கித் ததும்பும். பாரதியாா் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம் என தலைவா்களின் பிறந்த நாள்களைக் கொண்டாட வேண்டும். தலைவா்களைப் பற்றி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்த வேண்டும்.
  • பள்ளிக்கூடம் என்பது தன்னைப் புரிந்து கொள்ளவும், சகமனிதா்களை நேசிக்கவும், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அவதானித்து உணா்ந்து கொள்ளவும், ஒரு சிறு கூட்டில் இருந்து சிறகு விரித்து விண்ணை நோக்கிப் பறக்கவும் கற்றுத் தரும் இடம் ஆகும். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அவா்களின் திறமை பள்ளி விழாக்கள் மூலம் வெளிப்படும்.
  • நம் கலாசாரம் என்ற மையப்புள்ளியில் இருந்து விலகாமல் பள்ளி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாணவா்களிடம் அவா்களின் சொந்த கலாசாரம் குறித்த புரிதலை ஏற்படுத்துகிறது. சா்வதேச நட்பு தினம், அறிவியல் தினம், பூமி தினம் போன்ற நிகழ்வுகளால் மாணவா்களின் பாா்வை விரிவடைகிறது. நம் பண்பாட்டுப் பெருமைகளை இளைய தலைமுறையினருக்கு உணா்த்தும் நிகழ்வாக பள்ளி விழாக்கள் அமைந்துள்ளன.
  • மாணவா்களின் தனித்துவமான திறமைகள் பள்ளியில் நடத்தப்படும் விழாக்கள் மூலமே வெளிப்படுகின்றன. பல குழந்தைகள் பன்முகத் திறமை கொண்டவா்களாக இருக்கிறாா்கள். அத்திறமைகளை வெளிக்காட்டும்போது, அவா்களுக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் அவா்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விழாக்களும், கூட்டங்களும் கொண்டாட்டங்களும் வரிசைகட்டி நிற்கும். ஒரு விழாவை நடத்தி முடித்த உடனே அடுத்த விழாவைப் பற்றித் திட்டமிட வேண்டும். கல்லூரிகளில் மாணவா்கள் முன்னெடுத்து எல்லாவற்றையும் செய்து விடுகிறாா்கள். பேராசிரியா்கள் வழிகாட்டினால் போதும். பள்ளிகளில் அப்படி இல்லை. ஆசிரியா்களே எல்லாவற்றையும் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பள்ளி விழாவின் வெற்றிக்குப் பின் அப்பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், அலுவலா்கள் என அனைவரின் பங்களிப்பும் உள்ளது. கடுமையாக உழைக்கும் அவா்களை நாம் வாழ்த்துவோம்.

நன்றி: தினமணி (07 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்