- யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இஷிதா கிஷோர். இந்தத் தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பெற்றிருக்கிறார்கள். பிஹாரை சேர்ந்த கரிமா, தெலங்கானாவைச் சேர்ந்த உமா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிருதி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 14 பேர் பெண்கள்!
- யுபிஎஸ்சி 2022 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 933 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பொறுப்புக் குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.
- இஷிதா கிஷோர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் பிறந்தவர். இஷிதா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயார் ஓய்வுபெற்ற ஆசிரியர். இஷிதா தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்துவருகிறார்.
- தெலங்கானாவில் பள்ளிப் படிப்பை முடித்த இஷிதா, பள்ளி நாள்களிலேயே பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டார். பள்ளிப் பாடங்கள் தவிர பிற துறைசார்ந்த விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் பங்கேற்றார். கால்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்.
கல்விப் பயணம்
- இஷிதா டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளா தாரப் பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். குர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றினார். 2017இல் இந்திய-சீனா இளைஞர் பிரதிநிதிகளுக்கான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியா சார்பில் பங்கேற்றார்.
- யுபிஎஸ்சி தேர்வில் இது இவரது முதல் முயற்சி அல்ல. இரண்டு முறை முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்தார். இருந்தாலும் விடாமுயற்சியுடன் படித்து மூன்றாம் முயற்சியில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று வாகை சூடியுள்ளார். தனது கனவு நனவானதுபோல் இருப்பதாக இஷிதா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- “நாம் படிப்பில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பதுதான் முக்கியம். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற கடின உழைப்பும் இடைவிடாத முயற்சியும் தேவை” என்று சொல்லும் இஷிதா, தினமும் எட்டு முதல் ஒன்பது மணிநேரம் வரை படிப்புக்காகச் செலவிட்டார்.
- “சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என் கனவு. நான் ஆட்சியர் பொறுப்பேற்றதும் பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பு தேவை
- யுபிஎஸ்சி தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் சுற்று ஆகிய மூன்று நிலைகளில் தேர்ச்சி பெற வேண்டும். பாடம் தொடர்பான அறிவுடன் வரலாறு, புவியியல், அரசியல், நடப்பு விவகாரங்கள் வரை பரந்த அளவிலான பாடங்களில் ஆழமான தேர்ச்சி இருந்தால் மட்டுமே முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
- வாரத்தில் 40- 45 மணி நேரம் பயிற்சிபெற்றதன் மூலம் தன்னால் சாதிக்க முடிந்ததாக இஷிதா தெரிவித்துள்ளார். இஷிதா வளர்த்துக்கொண்ட ஆளுமைத்திறன், கல்வித் திறன், தொழில்முறை அனுபவம் போன்றவை இறுதிகட்ட நேர்காணலில் அவரைச் சிறப்பாகச் செயல்பட வைத்தன.
- யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற விரும்பு வோருக்குத் தனது அனுபவப் பாடத்தையே ஆலோசனையாக இஷிதா முன்வைக்கிறார். ”சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்துகொள்வது என்கிற முக்கிய முடிவை ஒருவர் எடுக்கப்போவதாக இருந்தால், அதற்கென்று நேரத்தை ஒதுக்கிப் பயிற்சியெடுக்க வேண்டும். தேர்வுக்கான தயாரிப்பு தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும்.
- இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதற்கான பயணம் மிக நீண்டது. தேர்வுக்கான பயிற்சியில் நிலைத்தன்மையும் ஒழுங்கும் அவசியம். ஒருவர் தனது படிப்புத் திட்டத்தைச் சீரான இடைவெளியில் மறு மதிப்பீடு செய்ய வேண்டும்” என்கிறார். தோல்வியைக் கண்டு துவளாமல் விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி உறுதி என்பதை இஷிதா கிஷோர் நிரூபித்திருக்கிறார்.
நன்றி: தி இந்து (04 – 06 – 2023)