TNPSC Thervupettagam

வெளிப்படைத்தன்மை வேண்டும்

October 9 , 2020 1563 days 666 0
  • கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக உருமாறத் தொடங்கியபின், நகர்ப்புறங்கள் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாறி விட்டன.
  • கடன் வாங்கியும், நகைகளை விற்றும் வீட்டு மனைகளை வாங்கத் துடிக்கும் நடுத்தர மக்கள், அதன் பின்னர் வீடு கட்டி முடிப்பதற்குள் படாத பாடு படுகின்றனர்.
  • "பிற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எங்களிடம் குறைந்த வட்டி விகிதம்' என்பதில் தொடங்கி, அடுக்கடுக்கான சலுகைகளை வாய்மொழியாக வாரி இறைத்து கடன் பெற்றுக் கொடுக்கும் முகவர்களை நம்பி வீடு கட்டியே ஆக வேண்டும் என்ற மோகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பலரும் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
  • வங்கிகள் நீட்டுகிற தாள்களிலெல்லாம் தயக்கமின்றிக் கையொப்பமிடும் வாடிக்கையாளர்கள், அவற்றில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளை வாசித்துப் பார்க்க வேண்டும் என எண்ணுவதில்லை.
  • தன்னை நம்பி கடன் வழங்க முன்வரும் வங்கியின் மீதான நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.
  • ஆனால், வாடிக்கையாளர்களின் அந்த நம்பிக்கையை, வங்கிகளின் செயல்பாடுகள் பல்வேறு நிலைகளிலும் கேள்விக்குறியாக மாற்றுகின்றன.
  • விழிப்புணர்வு இல்லாத வாடிக்கையாளர்களின் சூழலை தங்களுக்கு சாதகமாக வங்கிகள் மாற்றிக் கொள்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.
  • கடன் வாங்கும் நேரத்தில் எட்டு சதவீதத்திற்கும் குறைவான வட்டி, பிற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டி என ஆச்சரியமூட்டும் தகவல்களை மட்டுமே இனிப்பாகக் கருதும் வாடிக்கையாளர்கள், அதன் பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் வட்டிக் குறைப்புச் சலுகை குறித்து ஏதும் அறிவதில்லை.

வங்கி அதிகாரிகளின் கடமை

  • 0.25 சதவீதம் வட்டி குறைந்தாலும், பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கணக்கிடும்போது கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்படுகிறது.
  • ஒரு ரூபாயை ஒரு கோடி பேரிடம் எடுத்தால் என்ற கதையாக, வாடிக்கையாளர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு காலாண்டிற்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாறுபடுகிறது.
  • மாதத் தவணைத் தொகை கட்ட வேண்டிய மூன்று நாளுக்கு முன்னதாக அதனை குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வங்கிகள், வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறித்து எவ்வித தகவலையும் எப்போதும் தெரிவிக்க முன்வருவதில்லை.
  • விவரம் அறிந்த வாடிக்கையாளர்கள் சிலர், வட்டி விகிதக் குறைப்பு குறித்து வங்கிகளிடம் விசாரித்தால், அந்த சலுகை வேண்டும் என்று எழுத்துபூர்வமாகக் கோரிக்கை வைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது.
  • மேலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிலுவையிலுள்ள கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு 0.5 சதவீத கட்டணத்தையோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட சேவைக் கட்டணத்தையோ வங்கிகள் வசூலிக்கின்றன.
  • இந்தக் கட்டணத் தொகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் வேதனையாக உள்ளது.
  • கடன் வாங்கும்போது, வங்கி - வாடிக்கையாளர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மொத்த கடன் தொகையில் ஒரு சதவீதம் பத்திரப்பதிவுத் துறைக்கு கட்டணமாக வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வசூலிக்கப்படுகிறது.
  • மேலும், கடன் தொகையை வாங்கிக் கொடுக்கும் முகவர்கள், சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஆகியோருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்தே கட்டணம் வசூலித்துக் கொடுக்கப்படுகிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • வீட்டு வசதிக் கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது அந்த உயர்த்தப்பட்ட தொகையை, தானாகவே பிடித்தம் செய்து கொள்ளும் வங்கிகள், வட்டி விகிதம் குறைக்கப்படும்போது சேவைக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது முரண்பாடாக இருந்தாலும் இது குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை.
  • இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
  • அதே நேரத்தில் அந்தப் பணத்தை வங்கிகள் லாபமாக ஈட்டுகின்றன. பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள் பலருக்கு இந்த பிரச்னை தெரியாத நிலைதான் உள்ளது.
  • கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
  • அதற்கு பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், "ரிசர்வ் வங்கி, வீட்டு வசதிக் கடன் வட்டி விகிதம் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டு விட்டது. அதனால், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களில் அரசோ, ரிசர்வ் வங்கியோ தலையிட இயலாது.
  • கடன் நிதிக்கான செலவினம், கடன் இடர்கள், கடனாளிகளின் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது.
  • வட்டி விகித மறு சீரமைப்புக்கான சேவைக் கட்டணங்கள் குறித்த விவரங்கள் வங்கி அல்லது நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்குமான ஒப்பந்தத்தில் இடம் பெறுகின்றன' என பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுகூட பொதுமக்களின் கவனத்தை எட்ட வில்லை.
  • கடன் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள், அதனைத் திருப்பிச் செலுத்துவதிலும் அந்த ஆர்வத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என சாமானிய மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
  • அதேபோல், வட்டி விகிதம் குறைக்கப்படும்போது அந்தச் சலுகையை சாமானிய வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் வெளிப்படைத் தன்மையோடு செயலாற்ற வேண்டியது வங்கி அதிகாரிகளின் கடமை.

நன்றி: தினமணி (09-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்