வெள்ளம் வரும் முன் காப்பதே அரசின் கடமை
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது பலரை நிம்மதியடையச் செய்திருக்கிறது. முந்தைய பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கும் அரசும் இந்த முறை மழை, வெள்ளத்தை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதேவேளையில், இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வெல்ல நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்.
- வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டாலே சென்னை மக்களை வெள்ளம் குறித்த அச்சம் சூழந்துகொள்கிறது. 2015 சென்னைப் பெருவெள்ளத்தைவிட 2023ஆம் ஆண்டில் 45% அதிகமாக மழை பொழிந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பே இந்த அச்சத்துக்குக் காரணம். இந்த ஆண்டு, மக்களைத் தங்கவைப்பதற்கான தற்காலிக முகாம்கள், சமதளப் பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள், வெள்ள நீரிலிருந்து மக்களை மீட்பதற்கான படகுகள், உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்திருந்தது.
- முக்கியமாக, மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிக்கப்பட்டிருந்ததாலும், சில இடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாலும் பல பிரதான சாலைகளில் வெள்ள நீர் சில மணி நேரத்தில் வடிந்துவிட்டது. வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரத்தை நோக்கி நகர்ந்துவிட்டதால், கன மழையில் இருந்து சென்னை தப்பித்துவிட்டது.
- ஆனால், காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துவரும் நிலையில் எந்தச் சூழலையும் எதிர்கொள்கிற வகையில் அரசு திட்டமிடுவது அவசியம். 2012இல் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாததே, 2023இல் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் பல பகுதிகளில் பணிகள் முழுமையடையவில்லை என்பதை அண்மையில் பெய்த மழையால் அந்தப் பகுதிகளில் தேங்கிய மழைநீர் உணர்த்தியது.
- வடிகால்கள் கால்வாயுடன் இணைக்கப்படாதது, பராமரிப்பின்மை போன்றவையும் வெள்ளத்துக்கு முக்கியக் காரணங்கள். பல பகுதிகளில் கால்வாய்களில் கொட்டப்படும் திடக்கழிவாலும் ஞெகிழிக் கழிவாலும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிடுகிறது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஒரு நாள் மழைக்கே சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துவிடுகிற நிலையில், இனி வரப்போகும் நாள்களையும் கருத்தில்கொண்டு அதி கனமழையை எதிர்கொள்கிற வகையில் திட்டமிடுவது அவசியம். கடந்த ஆண்டு பெய்த மழையால் தென் தமிழகப் பகுதிகள் பாதிப்புக்குள்ளானதைக் கருத்தில்கொண்டு, சென்னையைப் போலவே மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழைநீர் வடிகால் குறித்துத் திட்டமிட வேண்டும்.
- குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வடிகால்கள் மூலம் அகற்றுவதில் முனைப்புடன் செயல்படுவதோடு, மழைநீர் சேகரிப்பிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்துவதில் மழைநீருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதால் ஆற்றிலும் கடலிலும் கலக்கிற மழைநீரைச் சேகரிக்கும் வகையிலான பெரிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
- பசுமைப் பூங்காக்களை அமைப்பதுபோல், வாய்ப்புள்ள இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டுமானங்களை அமைக்க வேண்டியது இன்றைய முக்கியத் தேவை. பெயரளவுக்கான திட்டமாக இல்லாமல், மாநகரின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் தொலைநோக்குத் திட்டமாக இதை முன்னெடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 10 – 2024)