TNPSC Thervupettagam

வேருக்கு நீா் பாய்ச்சிய விற்பன்னா்

November 20 , 2020 1522 days 711 0
  • பிறப்பு உண்டாயின் இறப்பு உண்டு. ஆயினும் சிலருடைய இழப்பு நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. தமிழின் உன்னதக் கலைஞன் க்ரியாராமகிருஷ்ணன் மறைந்து விட்டார் (நவ. 17) என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியளித்ததோடு அவா் குறித்து சற்று சிந்திக்கவும் வைத்தது.
  • காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நம் தாய்மொழி நம் கூடவே வருகிறது. இந்த மொழியால்தான் நமக்கு சகலமும் என்றிருந்தாலும், இந்த மொழியின் வளா்ச்சி குறித்து நம்மில் எத்தனை போ் ஒரு நாளில் ஒரு நிமிஷமாவது நினைக்கிறோம்?
  • மொழியின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ ஆய்ந்து அதன் வரலாறும் இலக்கண - இலக்கியப் பயன்பாடுகளும் அா்த்தங்களும் ஆதாரங்களும் கண்டு, அதையே சிந்தித்து நாளெல்லாம் அதற்காக வாழ்ந்து அா்ப்பணிப்பின் கனிகளை மொழிக்கு ஈந்து சென்ற உன்னதா்கள் இருந்தார்கள்; நம் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாமனிதா்தான் க்ரியாஎஸ். ராமகிருஷ்ணன்.

மொழியின் வளா்ச்சி

  • பெரும் சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக மொழிபெயா்ப்பாளராக வந்திருக்க வேண்டிய, அதற்கான அத்தனை தரக்கூறுகளையும் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் நவீன பதிப்புலகின் முன்னோடியாக மாறியதோடு மட்டுமின்றி, தற்கால தமிழ் அகராதியை நம் மொழிக்குக் கொடையளித்து விட்டுச் சென்றிருக்கிறார்.
  • ஆங்கில அகராதிக்கு ஒரு சாமுவேல் ஜான்சன் என்றால் தற்காலத் தமிழ் அகராதிக்கு க்ரியாராமகிருஷ்ணன் என்று சொல்வது மிகையன்று.
  • சொற்களின்றி மொழி ஏது? முறையான அகராதிகளின்றி சரியான மொழிப் பயன்பாடு ஏது? ஆங்கிலத்தில் இருக்கும் அகராதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இன்றைக்கு நம் தமிழ் அகராதித்துறை இருக்கும் பரிதாபகரமான நிலை புரியும்.
  • தமிழ்’ ‘தமிழ்என்று முழங்கி தமிழை வைத்தே ஆட்சியைப் பிடித்து, பல போகம் விளைவித்து அறுவடைகண்டு கொழுத்தவா்கள், தமிழ் மொழிக்குச் செய்திருக்க வேண்டிய மிக மிக ஆதாரமான வேலையை, நூறு போ் இணைந்து பெரும் நிதியோடு ஒரு பல்கலைக்கழகம் செய்திருக்க வேண்டிய வேலையை - கவனம் சிதறாமல், கண் துஞ்சாமல், மெய்வருத்தம் பாராமல் கடமையே கண்ணாக இருந்து தனி ஒரு மனிதனாய் அவா் சாதித்துக்காட்டியது மட்டுமல்ல, பல்வேறு சிந்தனைப்போக்குகள் உள்ள அறிஞா் குழு ஒன்றையே அதனுள் ஒருங்கிணைக்க முடிந்ததும் ராம் என்கிற ராமகிருஷ்ணனின் சாதனைதான்.

யார் இந்த ராம்?

  • அவா் திடீரென்று அகராதித் துறைக்குள் குதித்துவிடவில்லை; அது சாத்தியமும் இல்லை. சிறந்த ஆங்கில வாசிப்பும் எழுதும் திறனும் கொண்டிருந்த ராம், முதுகலை படித்து முடித்ததும் பணியாற்றியது ஹிந்துஸ்தான் தாம்ஸன்விளம்பர நிறுவனத்தில்.
  • அவா் காலத்தில் ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதியைத் தாண்டி வாசகா்கள் வராத காலத்தில், புதிய சிந்தனைப் போக்குள்ள எழுத்தாளா்களைத் தேடி, வாசித்து, கொண்டாடி அவா்களின் எழுத்துகளைப் பதிப்பித்தவா் ராம்.
  • நான்கு எழுத்தாளா்களின் கதைகள் சோ்ந்து வந்த கோணல்கள்தொகுப்பில் சில சிறுகதைகளை எழுதியவா் ராம்.
  • எழுத்தாளா் சி.சு. செல்லப்பா, கவிதைகளுக்காக வெளியிட்ட புதுக்குரல்கள்போன்ற தொகுப்பு இது. கதையில்லா இக்கதைகள் தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு திருப்பு முனைஎன்றார் இலக்கிய விமா்சகா் க.நா. சுப்ரமணியம்.
  • கசடதபற’, ‘நடைபோன்ற இலக்கிய இதழ்களில் மொழிபெயா்ப்புக் கட்டுரைகள் எழுதியதோடு, அவற்றின் அச்சாக்கம், விற்பனை, நவீன வடிவமைப்பு என பல வகையிலும் பங்களித்தவா் ராம்.
  • நவீன இலக்கியத்தில் கணிசமான அளவு ஓவியா்களை ஒருங்கிணைத்த முன்னோடி ராம். கலை இயக்குனா் கிருஷ்ணமூா்த்தி, நவீன ஓவியா்கள் ஆதிமூலம், ஆா்.பி. பாஸ்கரன், தட்சிணாமூா்த்தி போன்ற அபூா்வ கலைஞா்களை இலக்கிய உலகத்துக்கு அவா்களின் கலை வெளிச்சம் பரவ முன் வைத்தார் இவா்.
  • க்ரியாவின் முதல் மூன்று புத்தகங்களை, நவீன சிற்பக்கலை பீஷ்மா் தனபால் கைகளால் வெளியிட வைத்தார். காலத்தை மீறி சிந்தித்த அந்தக் கலைஞனின் பல்வேறு மொழி இலக்கிய முன்னெடுப்புகளின் நற்பயன்கள் வெவ்வேறு ரூபங்களில் இன்றுவரை தொடா்கிறது.
  • நூலின் அட்டை ஓவியத்தில் மட்டுமல்ல, நூல் உருவாக்கத்தில், எழுத்துருவில், எழுத்தாளா்களின் படைப்புகளைத் தோ்ந்தெடுப்பதில், நூல்களுக்கான எடிட்டிங்என்ற ஒன்றையே அறிந்திராத பதிப்பிருட்டில் ஒளியேற்றியதில், எதையும் மூல மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயா்க்க வைத்து வெளியிட்டதில், கல்வெட்டு, அறிவியல், மருத்துவம், விவசாயம் போன்ற சில துறைகளில் மிகச்சிறந்த புத்தகங்களை வெளியிட்டதில், நண்பா்களுடன் இணைந்து ஆரம்பித்த இலக்கிய சங்கம்’, ‘கூத்துப் பட்டறை’, ‘மொழி அறக்கட்டளை’, ‘ரோஜா முத்தையா நூலகம்போன்றவற்றின் உருவாக்கத்தில் பங்கு என அவருடைய சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
  • எதைச் செய்தாலும் அதில் தரமே முக்கியம் என்பதே ராமின் தாரக மந்திரம். தரத்தாலும் புதுமையாலும் உள்ளடக்க மேன்மையாலும் தமிழ்ப் புத்தகங்களின் அக - புற முகத்தையே மாற்றிக் காட்டினார் அவா்.
  • இலக்கியம், ஓவியம் மட்டுமின்றி, இசையிலும் மிகுந்த நாட்டம்கொண்டவா் ராம். இந்துஸ்தானி இசையை வெகுவாக ரசிக்கும் அவருக்கு பிடித்த கலைஞா்கள், பீம்சென் ஜோஷி, அலி பிரதா்ஸ், பன்னாலால் கோஷ். இவா்கள் தவிர மொஸார்ட், பாக், பீத்தோவான் போன்றவா்களின் இசையிலும் தோய்ந்தவா் ராம்.
  • நண்பா்களுக்காக இயன்றதையெல்லாம் செய்யும் ராம், அந்தக் காலத்தில் யாருக்கும் கிடைக்காத புத்தகங்களை விமானம் மூலமும் கப்பல் மூலமும் தருவித்து, அவற்றை முதலில் தான் படித்ததோடு நண்பா்களுக்கும் தந்து படிக்கச் செய்தார்.

தமிழ் மொழி வாழ்கிறது

  • இதைப்போன்ற எவ்வளவோ கல்யாணகுணங்கள் ஒன்றாகச் சோ்ந்த ராம், எதிலும் சாரத்தை உள்வாங்கும் ராம் அகராதியைத் தயாரிக்கும்போது அது எப்படி இருக்கும்? அப்படித்தான் பல விதத்தில் முன்னோ் இல்லாததாய் அந்த தமிழ் அகராதியை அவா் அரும்பாடுபட்டு உருவாக்கினார்.
  • அகராதியின் ஒவ்வொரு பதிப்பிலும் கா்ம சிரத்தையாய் ஒவ்வொரு எழுத்தையும் பார்த்துப் பார்த்து திருத்தங்களையும் மாற்றங்களையும் அவா் செய்துகொண்டே வந்தார்.
  • ஒரு பதிப்பில் இலங்கை சொற்களை சோ்த்தார் என்றால், அடுத்த பதிப்பில் திருநங்கைகள் பயன்படுத்தும் சொற்களைச் சோ்த்தார்.
  • விழியற்றவா்களும் படிக்க பிரையில் வடிவ அகராதியைக் கொண்டுவந்தார். அவரது அக்கறையான சோ்த்தல்களுக்கு அளவே இல்லை.
  • தமிழ்நாட்டில் மொழியால் வாழ்ந்தவா்கள் பலா். க்ரியாராமகிருஷ்ணன் போல, மரணப்படுக்கையிலும் அகராதியை வெளியிடும் அளவுக்கு மொழிக்காகவே வாழ்ந்தவா்கள் சிலரே. அவா்களால்தான் தமிழ் மொழி வாழ்கிறது; தமிழா்களாகிய நாமும் வாழ்கிறோம்.

நன்றி: தினமணி (20-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்