TNPSC Thervupettagam

வேலியே பயிரை மேயலாமா?

January 10 , 2020 1785 days 929 0
  • அரசு வேலைக்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான  படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலங்களில் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு,  எதிர்பார்க்கும் வேலை கிடைக்காத நிலையில், கிடைத்த ஏதோ ஒரு வேலையில் தமது வாழ்வை ந(க)டத்திவருவது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
  • இந்த நிலையில்,  லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஒருவரே லஞ்சம் வாங்கியதாக குஜராத் மாநிலத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பொது நல உணர்வு கொண்டோர் அனைவரின் மனத்திலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்கிறதே' என்ற புலம்பலும் மேலோங்குகிறது.
  • அரசு நிர்வாகமும் அரசுப் பணியாளர்களும் 24 மணி நேரமும் பொதுமக்களின் நலனுக்காக தம் நேரத்தையும் உழைப்பையும் தரவேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பு ஆகும்.
  • அவர்கள் தமது பணிகளைச் சரியாக செய்வதை உறுதிப்படுத்த பல்வேறு பணிநிலைகளும் பதவிகளும் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நிலை

  • லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநேகமாக அனைத்து அரசுத் துறை செயல்பாடுகளிலும் காணப்பட்டாலும் வெளிச்சத்துக்கு வருபவை வெகுக் குறைவே.
  • தமது வேலையில் சரியான  வழிமுறைகள் கடைப்பிடிக்காமை, காலதாமதத்தைத் தவிர்க்க விரும்புதல், சார்ந்த அதிகாரியின் பக்கத்தில் எதிர்பார்க்கப்படும் உடனடி பணியிட மாற்றம்,  உடனடி பணப்பலன் போன்றவை லஞ்சம் கொடுப்பதற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
  • லஞ்சம் பெறுபவர்கள் கண்ணோட்டத்தில் பணத்தின் மேல் உள்ள பேராசை, குடும்ப வறுமை, பெரிய குடும்பத்தை வழிநடத்த ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்கவேண்டிய பொறுப்பு, குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகுதல்  போன்றவை காரணங்களாகக் கூறப்படலாம்.

லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும்

  • எது எப்படி இருப்பினும், லஞ்சம் கொடுப்பவர்களைத்தான் நாம் முதல் குற்றவாளிகளாகக் கருத வேண்டியிருக்கிறது.
  • கொடுப்பதற்கு மனதளவில் தயாராகிவிட்டு தமது வேலை முடிய காலதாமதமாகும்போது தூண்டிலில் மீன்களைச் சிக்க வைப்பதுபோல, கையூட்டு வாங்குபவர்களை மட்டும் சட்டத்தின் மீது நிறுத்துவது பாரபட்சமான அணுகுமுறையாகவே தெரிகிறது.
  • லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் தவறு என்ற நிலையில் இருசாராரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுதான் குறையைக் களைவதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.
  • லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது சட்ட ரீதியான,  துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
  • அவர்களுக்குப் பொதுவாழ்விலும் அலுவலகத்திலும் ஏற்படும் அவமானமே பெரிய தண்டனையாகும்.
  • ஊடகங்களும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் இது வெறும் வாய்க்கு அவல் சேர்ப்பது போலாகும்.
  • எனவே, இரு சாராரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது மேலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதைத் தவிர்க்காவிட்டாலும் ஓரளவேனும் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கண்காணிக்கப்படும் முறை

  • மேலும், அனைத்து அரசு அலுவலங்களிலும் எல்லா இருக்கைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை இணையத்தின் மூலம் உயரதிகாரிகளால் கண்காணிக்கப்படும் முறை பிரச்னையை ஓரளவு குறைக்கும்.
  • உயர் அதிகாரிகள் அடிக்கடி கீழ்நிலை அலுவலகங்களை திடீரெனப் பார்வையிட்டு, ஆவணங்களைப் பரிசோதனை செய்வது தீவிரமாக்கப்படவேண்டும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுபோல், ஆண்டுக்கு இரு முறையாவது தேவைக்கு ஏற்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு கோப்பினையும் பரிசீலித்து முடிக்க குறிப்பிட்ட குறைந்தபட்ச கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதை மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.
    ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன்  பெயர்ப்பலகையில் இடம்பெற வேண்டும்.சில அலுவலங்களில் இவை கடைப்பிடிக்கப்பட்டாலும் விவரங்கள் அவ்வப்போது சுணக்கம் காரணமாக புதுப்பிக்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது.
  • லஞ்சத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ள அலுவலகங்கள்  எவை என்பதை அரசு நன்றாக அறியும். அவ்வாறான அலுவலகங்களில்  அரசு உளவுத் துறை அதிகாரிகளை திடீர் மேற்பார்வை செய்ய வைக்கலாம்.
  • அரசுப் பணியில் சேரும்போது எந்த நிலையிலும் லஞ்சம் பெற மாட்டேன் என்ற உறுதிமொழியை தகுந்த நிபந்தனைகளுடன் எடுத்துக்கொள்ளச் சொன்னால், ஊழியர்கள் மனச் சான்றுடன் பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக பணியமர்த்தப்படுபவர்கள்  லஞ்சம் கொடுத்து பணியமர்த்தப்படக் கூடாது. பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் போட்ட முதலீட்டை  எப்படி மீள எடுப்பதில் கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாது.
  • எனவே, அரசின் அனைத்துப்  பணியிடங்களும்  தகுதி, திறமையின் அடிப்படையில் அரசின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன்  நிரப்பப்பட வேண்டும்.
  • எந்த நிலையிலும் பரிந்துரைகளும் பண ஆதிக்கமும் பணி நியமனங்களின்போது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது தொடக்கத்திலேயே பல பிரச்னைகளைத் தவிர்க்கும்.
  • ஊழல் என்பது சமூகத்தின் அங்கீரிக்கப்பட்ட செயலாக மாறிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் பாவத்தைத் தொலைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து மனசாட்சிப்படி செயல்பட்டால்தான் சாத்தியமாகும். முயற்சி முதலில் நம்மிடமிருந்து தொடங்கட்டுமே...

நன்றி : தினமணி (10-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்