TNPSC Thervupettagam

வேலைக்காக காத்திருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்

October 3 , 2024 54 days 57 0

வேலைக்காக காத்திருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்

  • தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்படுவதால், பி.எட். கணினி அறிவியல் பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் 60,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
  • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தகுதித் தோ்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனா். இதில் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதித் தோ்வில் தமிழ், ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் ,வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டம் பெற்று பிஎட் முடித்தவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
  • கணினி அறிவியல் பட்டம் பெற்று, பிஎட் முடித்தவா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கணினி அறிவியலில் பிஎட் முடித்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்த சம்பளத்தில் தனியாா் பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய நிலைக்கு அவா்கள்தள்ளப்பட்டுள்ளனா்.
  • ஏற்கெனவே கணினி அறிவியல் பி.எட். முடித்தவா்களுக்கே ஆசிரியா் பணிவாய்ப்பு குறைந்துவரும் நிலையில், தற்போதும் கணினி அறிவியல் பி.எட். சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் வேலையின்றித் தவிக்கும் கணினி அறிவியல் பிஎட் பட்டதாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • இது தொடா்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில பொதுச் செயலா் குமரேசன் கூறியது: கடந்த 2009-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி, சமச்சீா் கல்வியை அறிமுகப்படுத்தினாா். அப்போது கணினி அறிவியல் தனிப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கணினி அறிவியல் பாடம் நீக்கப்பட்டது. ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் தகுதித் தோ்வுகளில் கணினி அறிவியல் பி.எட். படித்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
  • அரசுப் பள்ளி ஆசிரியா் பணி வாய்ப்பு இல்லாததால், தமிழகம் முழுவதும் கணினி அறிவியல் பி.எட். முடித்த 60,000 போ் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். அத்துடன், தமிழகம் முழுவதும் சுமாா் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைடெக் லேப் அட்மினிஸ்ட்ரேட்டா் மற்றும் இன்ஸ்ட்ரக்டா் என்ற பணியிடங்களில்கூட, கணினி அறிவியல் பி.எட். முடித்தவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை மீண்டும் தனிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்றாா் குமரேசன்.

நன்றி: தினமணி (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்