சமைக்கலாம் வாங்க!
- கரோனாவால் சில நல்ல விளைவுகளும் நடந்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளிலெல்லாம் வீட்டில் சமைப்பது வழக்கமாக மிகவும் குறைவு. கரோனாவால் மேற்கத்தியர்கள் பலரும் சமையலறைக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.
- குறிப்பாக, அமெரிக்காவில். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தைவிட அதிகமாக இப்போது சமைப்பதாக 54% தெரிவித்துள்ளனர், இந்த நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகும் சமையலைத் தொடரப் போவதாக 51% பேர் தெரிவித்திருக்கின்றனர்.
- ஜோவன்னா கெயின்ஸின் சமையல் புத்தகம் அமேஸானின் இணைய விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இணைய சமையல் வகுப்புகளில் பங்குகொள்வது ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது.
- வீட்டிலேயே சமைப்பதால் அமெரிக்கர்களின் பொழுதும் போகிறது, அவர்களின் ஆரோக்கியமும் வலுப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
வேலையைப் பறித்துச் செல்லக் காத்திருக்கும் கரோனா
- தொடர் ஊரடங்கின் விளைவாக இந்தியாவில் 40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமையில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கிறது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ).
- இந்தியத் தொழிலாளர்களில் 90% அமைப்புசாராத துறைகளில்தான் வேலை செய்கின்றனர். இவர்கள் சுமார் 40 கோடிக்கும் மேல். இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 19.5 கோடிப் பேர் முழு நேர வேலையை இழக்கக்கூடும்.
- ஆட்குறைப்பு, வேலைநேர அதிகரிப்பு, ஊதிய வெட்டு ஆகியவற்றின் மூலம் இழப்புகளைச் சரிக்கட்ட நிர்வாகங்கள் முயலும். இந்த நிலைமையிலிருந்து தொழிலாளர்களைக் காக்க நான்கு அம்ச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்கிறது ஐஎல்ஓ.
- முதலாவது, தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, வருவாய் ஆகியவை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- இரண்டாவதாக, பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மூன்றாவதாக, பணியிடங்களில் தொழிலாளர்களின் நலன், உயிர், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கத் தனி கவனம் செலுத்த வேண்டும். நான்காவதாக, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு, தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு ஆலோசனைகளும் பேச்சுகளும் நடைபெற வேண்டும்.
நன்றி: தி இந்து (22-04-2020)