TNPSC Thervupettagam

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கரோனா

August 25 , 2020 1607 days 702 0
  • யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், 2020-ம் ஆண்டு மனித குல வரலாற்றில் நெருக்கடி மிகுந்த ஆண்டாக இருக்குமென்று. இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற சில நெருக்கடிகள்தான் உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தின.
  • அந்த வரிசையில் கரோனாவும் வந்துசேர்ந்திருக்கிறது. உடல்நலம், பொருளாதாரம், கலாச்சாரம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் கரோனா பெருந்தொற்று குலைத்துப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்பு இந்திய அளவிலும் உலக அளவிலும் முன்னுதாரணமற்றது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி தரும் அறிக்கையை இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ (சி.எம்.ஐ.இ.) வெளியிட்டிருக்கிறது.
  • இந்த அறிக்கையின்படி 2020 ஜூலையில் மட்டும் 50 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • 2020 ஏப்ரலிலிருந்து 1.8 கோடி மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 21% பேர் முறைசார்ந்த பணிகளில் இருக்கிறார்கள். அமைப்புசாராப் பணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசார்ந்த பணிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் இது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு மோசமான செய்தி.

கொத்துக்கொத்தான வேலையிழப்பு

  • கிராமங்களில் உள்ள அமைப்புசாராத் தொழில்களில் ஏப்ரலிலிருந்து சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜூனில் 39 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்றாலும், அது சிறு ஆசுவாசம், அவ்வளவுதான். நகர்ப்புறங்களில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் மாதாந்திரச் செலவுகளைக் குறைத்துவிட்டன. இதனால், பணப்புழக்கம் குறைந்து அமைப்புசாராப் பொருளாதாரமும் கிராமப்புறப் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகும். மொத்த உற்பத்தி மதிப்பு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, தொழிலகச் செயல்பாடுகள் தரவு போன்றவை சற்றும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இல்லை.
  • பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து முறைசார்ந்த பணிகள், அமைப்புசாராப் பணிகள் போன்றவற்றில் கொத்துக்கொத்தாக வேலையிழப்பு ஏற்பட்டது. ஏப்ரலில் மட்டும் 12.15 கோடிப் பேர் வேலையிழந்தனர். இதில் 9.12 கோடிப் பேர் அமைப்புசாராப் பணிகளைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறங்களில் விவசாயத் தொழில்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் நடைபெறத் தொடங்கியதால் சற்றே முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், நகர்ப்புறங்களில் வேலையிழப்புகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
  • பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டுமானப் பணிகளில் ஆரம்பித்து தொழிற்பேட்டைகள் வரை அவர்களின் பங்களிப்பு அதிகம். பொது முடக்கத்தின் காரணமாக ஏப்ரலில் இவர்களில் 9.12 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். அரசுகளும் பிழைப்புக்காக வந்த ஊர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். மே மாதத்தில் 1.44 கோடிப் பேரும், ஜூனில் 4.45 கோடிப் பேரும், ஜூலையில் 2.55 கோடிப் பேரும் வேலைக்குத் திரும்பினார்கள். இன்னும் 68 லட்சம் பேர் வேலைக்குத் திரும்பவில்லை என்கிறது சி.எம்.ஐ.இ. அறிக்கை.

எதிர்காலம் என்னவாகும்?

  • முறைசார்ந்த துறைகளில் பணிபுரியும் மாதச் சம்பளக்காரர்களின் கதையோ வேறு. அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தால் அவற்றைத் திரும்பவும் பெறுவது கடினம்.
  • 2019-2020 நிதியாண்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், 1.9 கோடிப் பேர் முறைசார்ந்த துறைகளில் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதாவது, வேலை பார்ப்போரின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டைவிட 22% குறைவு. இதற்கிடையே சிறிதளவு நம்பிக்கையூட்டும் செய்திகளும் இல்லாமலில்லை.
  • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தரவின்படி, கடந்த ஜூலையில் மட்டும் 16,487 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஏழு ஆண்டுகளைவிட அதிகம். இந்தத் தொழில்களில் வெறும் ரூ.2,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தாலும் பொருளாதாரம் முடங்கிப்போயிருக்கும் நிலையில் இது சற்றே ஆறுதல் தருகிறது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 24 வயதுக்கும் மேற்பட்டவர்களைவிட 24 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும், இரண்டில் மூன்று பங்கு பழகுநர்களும் (அப்ரென்ட்டிஸ்), முக்கால்வாசி இன்டெர்ன்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.
  • கடந்த ஆறு மாதங்களாகப் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்கள் போன்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அவர்களில் பெரும்பாலானோரும் வருமானத்துக்கு வேறு வழியின்றித் தவிக்கிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரிகள் பலரும் கூலி வேலைக்குச் செல்வதையும் காய்கறிகள் விற்பதையும் பற்றிய செய்திகளை அன்றாடம் காண்கிறோம். இது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான அச்சத்தைப் பலரிடமும் ஏற்படுத்துகிறது.

சம்பளக் குறைப்பு வேறு

  • வேலையிழப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சம்பளக் குறைப்பு. சி.எம்.ஐ.இ. அறிக்கையின்படி உற்பத்தித் தொழில் துறையில் 7% குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது.
  • ஜவுளித் துறையில் 29%, தோல் தொழில் துறையில் 22.5%, ஆட்டோமொபைல் துணை நிறுவனங்களில் 21%, ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 18.6% அளவுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டிருக்கிறது.
  • சேவைத் துறைகளில் சுற்றுலாத் துறையில் 30%, உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றில் 20.5%, சாலைப் போக்குவரத்தில் 27.6%, கல்வித் துறையில் 28%, ரியல் எஸ்டேட் துறையில் 21% குறைவாகச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இது 2020 ஜூன் மாதத்தோடு முடியும் காலாண்டு அடிப்படையிலான கணக்கீடு.
  • தமிழகத்தின் நிலையைப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் சென்னை வளர்ச்சி ஆய்வு மையமும் அரசின் பொருளாதார, புள்ளிவிவரத் துறையும் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 53% குடும்பங்களில் ஒருவராவது வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
  • 67% குடும்பங்கள் வருமான இழப்புக்கு ஆளாகியிருக்கின்றன. தமிழ்நாட்டு கிராமப்புறங்களின் சராசரி தனிநபர் வருமானம் பிப்ரவரியில் ரூ.11,472 ஆகவும், நகர்ப்புற சராசரி வருமானம் 17,717 ஆகவும் இருந்தது. இது மே மாதத்தில் கிராமப்புறங்களில் ரூ.6,522ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.11,337-ஆகவும் குறைந்திருக்கிறது.
  • கரோனா ஒரு நோயாக உண்டாக்கும் பாதிப்பைக் காட்டிலும், பொது முடக்கம் வழி உருவாக்கும் பாதிப்புகள் மோசமான விளைவுகளாக இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிறது.
  • கரோனாவுடன் போராடிக்கொண்டே பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது பெரும் சவால் என்றாலும், இந்தியா அந்த சவாலில் கடுமையாகப் போராடவில்லை என்றால், பல கோடிப் பேரை சீரழிவில் தள்ளுவதாக அது அமைந்துவிடும். நிச்சயமாக பொது முடக்கத்திலிருந்து வேகமாக இந்தியா வெளியே வர வேண்டும்.
  • கடந்த காலப் பொருளாதார மந்த நிலைகளைவிட மோசமான ஒன்றைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறோம். மக்கள்மையக் கொள்கைகளே இந்த நிலையைச் சமாளிப்பதற்கு ஒரே வழி.

நன்றி: தி இந்து (25-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்