TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு பெருக என்ன செய்யலாம்?

August 4 , 2024 161 days 175 0
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ஒன்றிய அரசின் முன்னுரிமை என்பது 2024 - 2025 நிதியாண்டு பட்ஜெட்டில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 முறை ‘வேலைவாய்ப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆதரவு குறைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இதில் அக்கறை செலுத்தியிருக்கிறார்.

இப்போதைய வேலைவாய்ப்பு

  • பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2022 – 2023இல் இந்தியாவில் வேலை செய்வோர் எண்ணிக்கை 56.5 கோடி. இவர்களில் 45% வேளாண்மையிலும், 11.4% உற்பத்தித் தொழில்களிலும், 28.9% சேவைத் துறைகளிலும், 13% கட்டிட கட்டுமானத் துறையிலும் வேலை செய்கின்றனர். அதிகாரப்பூர்வமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை, அந்த குறிப்பிட்ட காலத்தில் 3.2%. இந்தப் புள்ளி விவரம் உண்மை நிலைக்குப் பொருந்துவதாக இல்லை என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • வேலையில்லாததால் விவசாயத்திலும் வேறு துறைகளிலும் தங்களுடைய கல்வி – தொழில் பயிற்சி ஆகியவற்றுக்குப் பொருத்தமில்லாமல் குறைந்த வருவாய்க்கு ஏராளமானோர் வேலை செய்கின்றனர். அன்றாட ஊதியத்துக்கு வெவ்வேறு வேலைகளில் பலர் ஈடுபடுகின்றனர். எனவே, புள்ளி விவரம் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. ஆய்வுக்கு முந்தைய ஆண்டில், ஒருவர் முப்பது நாள்கள் வேலைக்குப் போயிருந்தால் அவரை வேலை செய்கிறவராகக் கருதுகிறார்கள்.
  • தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் (18.3%), தாங்கள் செய்யும் வேலைக்கு ஊதியம்கூடப் பெறுவதில்லை, இதில் அதிகம் பேர் பெண்கள். 2024 மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டம் 6.7% என்றும், 2022 – 2023இல் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை 10% என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • 2017 – 2018இல் மாதந்தோறும் ஊதியம் பெற்றவர்களின் எண்ணிக்கை மொத்தத் தொழிலாளர்களில் 22.8% ஆக இருந்தது, ஐந்து ஆண்டுகள் கழித்து 20.9% ஆக சரிந்திருக்கிறது. சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிலும் கணிசமானவர்களுக்கு அவரவர் வேலை தொடர்பாக ஊதிய ஒப்பந்த நடைமுறைகளோ, சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் நன்மைகளோ கிடையாது.
  • அப்படிக் கிடைத்தால்தான் அவர்களை வேலை செய்யும் தொழிலாளர்களாகக் கருத முடியும். ‘ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி’ அமைப்பின் (இபிஎஃப்ஓ) பெயர் பதிவை மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்களுக்கான சான்றாக அரசு ஏற்கிறது. இபிஎஃப்ஓ அமைப்புக்கு இப்போது 7.3 கோடிப் பேர் சந்தா செலுத்துகிறார்கள். ஆனால், மொத்த கணக்குகளோ 30 கோடி. அவற்றில் பல, ‘நடப்பில் இல்லாதவை’. மிகச் சில ஊழியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளையும் வைத்திருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு பெருக அரசின் திட்டங்கள் என்ன?

  • ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள மூன்று திட்டங்கள் ரொக்க ஊக்குவிப்புகளாகும். முதலாவது திட்டம், முதல் முறையாக ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டால் அவருடைய ஊதியத்தில் அதிகபட்சம் ரூ.15,000 வரையில் ரொக்க மானியமாக நிறுவனத்துக்கு 3 தவணைகளில் அரசு அளிக்கும். இவ்வாறு ஒரு கோடிப் பேருக்கு வழங்க, அரசு உத்தேசித்திருக்கிறது.
  • இரண்டாவது திட்டம், உற்பத்தித் துறையில் முதல் முறையாக வேலை பெறும் தொழிலாளருக்கும் வேலை தரும் நிர்வாகத்துக்கும் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு, தொழிலாளரின் ஊதியத்தில் 24% ரொக்க மானியமாக தரும் திட்டம். இதில் அதிகபட்ச ஊதியம் 25,000 வரை அனுமதிக்கப்படுகிறது.
  • மூன்றாவது திட்டம், தொழிலாளருக்கு புதிதாக ஒரு நிறுவனம் வேலை கொடுத்தால் – அந்தத் தொழிலாளருக்கு அது முதல் வேலையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை – அவர் இபிஎஃப்ஓ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சந்தாவில் ரூ.3,000ஐ அரசாங்கமே செலுத்திவிடும். இந்த மூன்று திட்டங்களுமே இபிஎஃப்ஓ அலுவலகப் பதிவை அடிப்படையாகக் கொண்டவை.
  • நான்காவது திட்டம், தொழில் பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ) பயிற்சியளிக்கும் திறனை மேம்படுத்தி அவற்றின் தரங்களை உயர்த்துவது. 20 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் அடைவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்தத் திட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதால் இது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
  • இந்தியாவின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டு ஓராண்டு தொழில் பயிற்சிகளை அளிப்பது திட்டம். இப்படிச் சேரும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ரொக்க ஊக்குவிப்பை அரசு வழங்கும். பயிற்சிச் செலவையும், ஊக்குவிப்பில் 10% (ரூ.500) தொகையையும் நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.

தடையாக இருக்கப்போவது எவை?

  • வேலைவாய்ப்புக்கும் வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கும் அரசு விதிக்கும் நிபந்தனைகளும் நடைமுறைகளும் இவற்றை அமல்செய்வதில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று பொருளாதார அறிஞர்களும் சிறுதொழில் முனைவோர்களும் கூறுகின்றனர்.
  • முதல் முறையாக வேலை பெறும் தொழிலாளருக்கான ரூ.15,000 ரொக்க மானியம் மூன்று தவணைகளாக வழங்கப்படும். இரண்டாவது தவணை பெறுவதற்கு அந்தத் தொழிலாளர் ‘ஆன்-லைன்’ நடைமுறைகளில் கட்டாயம் பயிற்சி பெற்றாக வேண்டும். “இது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஆன்-லைன் நுட்பங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்கூட ஏன் இந்தப் பயிற்சிகளைப் பெற வேண்டும், இதை ஏன் ரொக்க மானியத்துக்கு நிபந்தனையாக்க வேண்டும்” என்று டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியர் ஹிமான்ஷு கேட்கிறார்.
  • இன்னொரு நிபந்தனை மேலும் கவலை அளிக்கிறது. முதல் முறையாக வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்ட தொழிலாளர் 12 மாதங்களுக்குள் வேலையைவிட்டுப் போய்விட்டால் அவருக்கு வழங்கிய ரொக்க மானியத்தை, அந்த நிர்வாகம் அரசுக்குத் திருப்பித் தர வேண்டும் என்கிறது. 12 மாதங்களுக்குள் வேலையைவிட்டுப் போகும் தொழிலாளர் தனக்குரிய ரொக்க மானியத்தை வாங்கிவிடுவார், வேலையைவிட்டு அவர் போனால் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே இழப்பு, அதற்கும் மேல் அரசு செலுத்திய தொகையை நிர்வாகம் ஏன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சிறு தொழில் பிரிவுகளில் மிகச் சிலர்தான் இந்த ரொக்க ஊக்குவிப்பு திட்டத்தை வரவேற்பார்கள் என்று அனுபவம் வாய்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • இந்த ரொக்க மானியத்துக்கு இன்னொரு நிபந்தனை, முதல் முறையாக வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 50 ஆக இருக்க வேண்டும் அல்லது அந்த நிறுவனத்தின் மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 25% ஆக இருக்க வேண்டும் என்கிறது. அரசு அளிக்கும் சிறிதளவு ரொக்க மானியத்துக்காக பெரும்பாலான நிறுவனங்களால் இந்த அளவுக்குப் புதியவர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டு சம்பளம் தர முடியாது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அரசின் ரொக்க மானிய திட்டங்கள் உதவுமா?

  • தொழில் நிறுவனங்கள் புதியவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இந்த ரொக்க ஊக்குவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல், நிறுவனங்கள் வேலை தராமல் இல்லை. இந்தியாவில் எல்லா நிறுவனங்களும் ஏற்கெனவே ஊதியத்தைக் குறைவாகத்தான் அளிக்கின்றன. நிறுவனங்கள் தரும் ஊதியத்துக்கு வேலை செய்ய ஆட்களும் தயாராக இருக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாக ஊதியமும் உயரவில்லை” என்கிறார் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் நலப் பொருளியல் துறைப் பேராசிரியர் அனாமித்ர ராய் சௌதுரி.
  • “வேலை செய்யும் இடத்திலேயே மேற்கொண்டு திறன் வளர்ப்புப் பயிற்சிகளை அளிப்பதில் நிறுவனங்களுக்குப் பெரிய இடையூறுகள் இல்லை. தொழில் துறையின் சுணக்கத்துக்கு முக்கிய காரணம் பொருளாதாரக் கட்டமைப்பில் நிலவும் மிகப் பெரிய குறைபாடுதான்; அது மக்களிடம் நுகர்வு வேகம், நுகர்வுத் திறன் குறைந்துவிட்டதுதான். ஊதியம் உயராமையும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமையும்தான் இதற்கு முக்கிய காரணங்கள். தொழில் துறை தயாரிப்பதை வாங்குவதற்கு மக்கள் தயாராகிவிட்டால் தேவைப்படும் அளவுக்குத் தொழிலாளர்களை நிறுவனங்களே அமர்த்திக்கொண்டுவிடும்” என்கிறார் அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் அமித் பசோல். இந்த ரொக்க மானியங்களை, சிறு தொழில் பிரிவுகளை நடத்தும் தொழில் முனைவோர்களுக்கு அளித்தால் பயன் அளிக்கும். சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளின் உரிமையாளர்களுக்குத்தான் இவை அவசியம், அத்துடன் அவற்றால்தான் கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பை உடனடியாக ஏற்படுத்த முடியும் என்கிறார் அமித் பசோல்.
  • பெரிய நிறுவனங்கள் உற்பத்தி வேலைகளை இயந்திரமயமாக்கிவருகின்றன. அவர்கள் சாதாரணத் தொழிலாளர்களை - பயிற்சி பெற்றிருந்தாலும்கூட – அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுப்பதில்லை. நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதனும் இதை ‘தி இந்து’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் வேறுவிதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். “அரசின் ரொக்க மானியங்கள் விளிம்புநிலையில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்குப் பெரிதும் பயன்படும்” என்று கூறியிருக்கிறார்.
  • முறைசார துறையில் இருக்கும் தொழிலாளர்களை அமைப்புரீதியில் திரட்டப்பட்ட துறையில் சேர்ப்பதற்கான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என்கிறார் பசோல். விவசாயம், சிறு வணிகம், சேவைத் துறையில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நிரந்தர ஊதியத்துடன் நல்ல வேலை கிடைக்காதா என்றுதான் காத்திருக்கின்றனர். அதை அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.

வேலைவாய்ப்பை அதிகப்படுத்த என்னதான் செய்வது?

  • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைக்கும்போது நாட்டின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களிடம் செல்லக் கூடாது. அங்கே கோடிக்கணக்கில் முதலீடு செய்து இயந்திரங்கள் மூலம் நவீன முறையில் உற்பத்தி செய்கின்றனர். சிறு – குறு - நடுத்தர தொழில் பிரிவுகளுக்குத்தான் இந்த ஊக்குவிப்புகள் தரப்பட வேண்டும். அத்துடன் தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களும் சிற்றூர்களிலும் உள்ள நிறுவனங்களும்தான் வேலைவாய்ப்புகளைப் பெருக்க உகந்தவை.
  • இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியங்களைக் கணிசமாக உயர்த்துவது அவசியம். அத்துடன் சிறு – குறு - நடுத்தரத் தொழில்களை உள்ளடக்கிய எம்எஸ்எம்இ துறைக்கு அதிக ஆர்டர்கள், உற்பத்தி வாய்ப்புகள் கிடைக்குமாறு அரசு பார்த்துக்கொண்டால், ‘பெருக்கல் விளைவுக’ளாக வேலைவாய்ப்பும் வருமான உயர்வும் நுகர்வும் அதிகரிக்கும் என்கிறார் பேராசிரியர் ஹிமான்ஷு.
  • மக்களிடையே நுகர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், வேலை தரும் நாள்களை அதிகப்படுத்த வேண்டும், அதிகம் பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும் இதனால் வேலைவாய்ப்பு, வருமானம், நுகர்வு ஆகியவை அதிகரிக்கும். அது வெவ்வேறு துறைகளுக்கும் அலையலையாகப் பரவும்.
  • வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தைக் கிராமங்களுக்கு மட்டுமின்றி நகர்ப்புறங்களுக்கும் பெருமளவு விரிவுபடுத்த வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கே ஒதுக்கீட்டை வெட்டியதுடன் வேலை நாள்களையும் குறைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் ராய் சௌதுரி.

நன்றி: அருஞ்சொல் (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்