TNPSC Thervupettagam
September 25 , 2024 62 days 93 0

வேலை நேரம்

  • ஏர்ன்ஸ்ட் அண்டு யங் (Ernst & Young) பன்னாட்டு நிறுவனத்தின் புணே அலுவல​கத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவால் ஜூன் மாதம் உயிரிழந்​தார். அளவுக்கு அதிகமான பணிச் சுமை காரணமாகத் தன் மகள் உயிரிழந்ததாக அப்பெண்ணின் தாயார் ஏர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானிக்கு நீண்ட கடிதம் ஒன்றைச் சமீபத்தில் எழுதினார். இக்கடிதம் சமூக வலைதளங்​களில் பகிரப்​பட்டு, நாடு முழுவதும் அதிர்​வலையை ஏற்படுத்​தியது. மேலும், இந்தியப் பணியிடங்​களில் வேலை நேரம் சார்ந்த விவாதத்​தையும் இந்நிகழ்வு எழுப்​பி​யிருக்​கிறது.

நீண்ட போராட்டம்:

  • தொழிற்​புரட்சி (1760 முதல் 1830) காலக்​கட்​டத்தில் தொழிலா​ளர்கள் நீண்ட நேரம் பணிச் சுமைக்கு உள்ளாகினர். ஒரு நாளைக்கு 14 மணி நேரத்​துக்கும் மேலாகத் தொழிலா​ளர்கள் வேலை பார்க்க நிர்ப்​பந்​திக்​கப்​பட்​டனர். 19, 20ஆம் நூற்றாண்​டு​களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள், தொழிற்​சங்​கங்கள், பிற தொழிலாளர் அமைப்புகள் ஆகியவை 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்னிறுத்தி மாபெரும் போராட்​டங்களை முன்னெடுத்தன.
  • 1919 இல் தொடங்​கப்​பட்ட, சர்வதேசத் தொழிலாளர் அமைப்​பானது, ‘ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை’ என்கிற நீண்ட நாள் கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது. அதன் பின்னர், உலக நாடுகள் இத்தீர்​மானத்தை வழிமொழியத் தொடங்கின. தற்போது 8 மணி நேர வேலை என்பது பல நாடுகளில் சட்டமாக்​கப்​பட்டு​விட்டது. ஆனால், நடைமுறையில் பெரும்​பாலான தொழிலா​ளர்கள் 10-12 மணி நேரம் வேலை பார்க்க நிர்ப்​பந்​திக்​கப்​படு​கின்​றனர்.

இந்திய நிலை:

  • இந்தியாவில் தொழிற்​சாலைகள் சட்டம், 1948 (The Factories Act, 1948) உள்படச் சில சட்டங்கள் 8 மணி நேர வேலையை உறுதிப்​படுத்து​கின்றன. ஆனால், உலகமய​மாக்​கலுக்குப் பிறகு உலகளாவிய சந்தை​களுடன் ஒத்திசைந்து செல்லும் நோக்கில் தகவல் தொழில்​நுட்பம் (ஐடி) போன்ற துறைகளில் வேலை நேரத்தில் நெகிழ்வுத்​தன்​மைகள் புகுத்​தப்​பட்டன. ஷிஃப்ட் முறைகள் அறிமுகப்​படுத்​தப்​பட்டன. விளைவாக, வேலையின் தன்மை, மாநில அரசின் சட்ட விதிகள் ஆகியவற்றைப் பொறுத்து வேலை நேரம் மாறுபடு​கிறது.
  • ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலையும், வாரத்​துக்கு மூன்று நாள்கள் விடுப்பும் எடுத்​துக்​கொள்ள அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்​களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து​வரு​கிறது. இது தொழிலா​ளர்களை மேலும் சுரண்டவே வழிவகுக்கும் என்று பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து​வரு​கின்றன. கடந்த ஆண்டு தொழிற்​சாலைகளில் 12 மணி நேர வேலைக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றும் தமிழ்​நாட்டு அரசின் முயற்சி பல்வேறு தரப்பினரிட​மிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்​பட்டது. ஆனாலும் தற்போது கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்​களில் 12 மணி நேர வேலைக்கும் அனுமதி அளிப்​ப​தற்கான சட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

பெண்களின் நிலை:

  • இந்திய இளம் பெண்கள் 2023இல், வாரத்​துக்கு 55 மணி நேரம் வேலை செய்திருக்​கிறார்கள் எனத் தரவுகள் சுட்டிக்​காட்டு​கின்றன. ஐடி/ ஊடகத் துறைகளில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குப் பணி நேரம் கூடுதலாக இருக்​கிறது. இத்துறை​களில் பெண்கள் வாரத்​துக்குச் சராசரியாக 57 மணி நேரம் வரை பணியில் ஈடுபடு​கிறார்கள். பிற துறைகளில் பெண்களின் பணி நேரம் 55 மணி நேரமாக உள்ளது. மேலும், இந்தியாவில் அறிவியல், தொழில்​நுட்பம், கணக்குத் தணிக்கை போன்ற துறைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரம் வாரத்​துக்கு 53.2 மணி நேரமாக உள்ளது.
  • உலகளவிலான தரவுகளுடன் ஒப்பிடும்​போது, இந்தியா​வில்தான் பெண்களுக்குப் பணி நேரம் கூடுதலாக உள்ளது. உதாரணத்​துக்கு, ஐடி/ ஊடகத் துறைகளில் பணியாற்றும் பெண்களின் வேலை நேரம் ஜெர்மனியில் ஒரு வாரத்​துக்கு 32 மணி நேரமாக​வும், ரஷ்யாவில் 40 மணி நேரமாகவும் உள்ளது. வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் வீட்டு வேலைகளிலும் அதிக நேரத்தைச் செலவிடு​கிறார்கள்.
  • வேலைக்குச் செல்லும் பெண்களின் வீட்டு வேலைகளைப் பகிர்ந்​து​கொள்ளக் குடும்பத்​தினரிடம் இன்னமும் சுணக்கம் நிலவு​கிறது. பெண்கள் பணியிடத்தில் சுமார் 9 மணி முதல் 11 மணி நேரம்வரை வேலை செய்வதுடன், 5 - 6 மணி நேரம் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள். இப்பெண்​களுக்கு மற்ற விஷயங்​களுக்கு 7 - 10 மணி நேரம் மட்டுமே கிடைக்​கிறது. வீட்டு - வேலை நேரத்தைப் பொறுத்தவரை நகர்ப்புற - கிராமப்புறப் பெண்களிடம் பெரிய அளவிலான வித்தி​யாசம் எதுவும் இல்லை.
  • உலகமய​மாக்​கலுக்குப் பிறகு, வேலைவாய்ப்பு சார்ந்த இறுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சற்று தளர்த்​தப்​பட்​டிருக்​கிறது. ஆனால், வேலை - தனிப்பட்ட வாழ்க்கையைச் சரியான விகிதத்தில் நிர்வகிப்பது, பணியாளர்​களின் உடல்நலன் சார்ந்த சவால்கள் தொடர்ந்து நீடிக்​கின்றன. அந்த வகையில், பணியிடங்​களில் தொழிலா​ளர்கள் எதிர்​கொள்ளும் சிக்கல்​களைத் தீர்த்து, நிறைவான பணிச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு நிறுவனங்​களுக்கு உள்ளது. அதை உறுதிப்​படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதன் மூலமே உற்பத்தித் திறன் மேம்படும், நாட்டின் பொருளா​தா​ரமும் தன்னிறைவைப் பெறும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்