TNPSC Thervupettagam

வேளாண் பட்ஜெட்: சரியான நிதி ஒதுக்கீடு, தவறான இலக்கு

March 27 , 2022 863 days 449 0
  • வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை 2022-23ஆம் ஆண்டுக்கு ரூ.33,000 கோடி. இது கடந்த ஆண்டைவிடக் கொஞ்சம் அதிகம். பட்ஜெட்டில் முக்கிய செலவுகள் எனப் பார்த்தால், வேளாண்மைக்காக அரசு தரும் இலவச மின்சாரம்தான். இதற்கான செலவு ரூ.5,157 கோடி. 30 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்த திட்டம். இன்று இத்திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்களும் தொடர்கின்றன. 
  • கரும்பு, டன்னுக்கு ரூ.195 கூடுதல் விலை கொடுக்கும் திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. அதேபோல, நெல் கொள்முதலுக்கு எவ்வளவு செலவு என்பதைப் பற்றிய தகவலும் இல்லை. ஆனால், இவை முக்கிய செலவுகள். இந்த அரசின் மானிய உதவிகள் உழவர்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைக்க உதவுபவை. இவை வரவேற்கத் தக்கவை!
  • வேளாண்மையில் முதலீடாக, நீர்ப்பிடிப்புத் திட்டங்கள், பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள், சிறு சாலைகள் எனக் கிட்டத்தட்ட ரூ.1,500 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இவை நீண்ட கால நோக்கில் நீர் பயன்பாட்டு செயல்திறனை அதிகரிக்கச்செய்யும் முக்கியமான முதலீடு. 
  • திண்டிவனம், தேனி, மணப்பாறை பகுதிகளில் பெரும் உணவுத் தொழில் பூங்காக்களை ரூ.380 கோடியில் நிறுவும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், பெரும் காய்கறிச் சந்தைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது சந்தைக்கும் உற்பத்திக்குமான தொடர்பை மேம்படுத்த உதவும்.  சூரிய ஒளி பம்புசெட்கள் 3,000 உழவர்களுக்குக் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டம். 
  • இவைத் தவிர, முதல் வருடமே 1 லட்சம் உழவர்களுக்கு வேளாண்மைக்காக இலவச மின்சார இணைப்பு என்னும் வாக்குறுதியைத் திமுக கொடுத்திருந்தது. அதில் 85,000 இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டன என்னும் தகவலை நிதிநிலை அறிக்கை உரையில் பிடிஆர் சொல்லியிருந்தார். சொன்னதைச் செய்திருக்கிறார்கள். குறித்த தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், டெல்டா பகுதிகளில் கால்வாயைத் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகளும் சென்ற ஆண்டு சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 
  • இவை அனைத்துமே வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகையில், தனது பத்தாண்டு இலக்குகளில் ஒன்றாக வேளாண் உற்பத்தி மேம்பாட்டைச் சொல்லியிருந்தார். நிதிநிலை அறிக்கையும் அதன் வழியில் செல்கிறது. ஆனால், இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. உழவருக்குத் தேவை வேளாண் உற்பத்திப் பெருக்கம் அல்ல; லாபம்!
  • இன்று தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் சென்று, 'வேளாண்மை லாபகரமாக உள்ளதா?' என்று கேட்டாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆய்வுகளும் அதையே சொல்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு ஏக்கர் விளைநிலத்தின் இன்றைய விலை சராசரியாக ரூ.25 லட்சம் என வைத்துக்கொள்வோம்.
  • அந்த நிலத்தை விற்று வங்கியில் வைப்பு நிதியாக வைத்தால், 5.5% வட்டியாக வருடம் ரூ.1.37 லட்சம் வருமானம் கிடைக்கும். ஒரு லாபகரமான தொழில் என்பது முதலீட்டுக்குக் குறைந்தபட்சம் 10% லாபத்தைத் தர வேண்டும். எனில், இந்த முதலீட்டுக்குக் குறைந்தது ரூ.2.5 லட்சம் லாபம் கிடைக்க வேண்டும். இந்த அலகை வைத்துப் பார்த்தால், 99% உழவர்களுக்கு இது கிடைப்பதில்லை. இதுதான் வேளாண்மையின் அடிப்படைப் பிரச்சினை.
  • அரசின் திட்டங்கள் எல்லாம், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதில் உள்ளதே தவிர, வேளாண்மையின் லாபத்தை அதிகரிப்பதாக இல்லை. வழக்கமான வேளாண் அறிஞர்களைக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். 'வீரிய விதைகள், வேதி உரங்கள், இயந்திரமயமாக்கம், வேளாண்மையில் தனியார் துறை முதலீடுசெய்து பெரும் பண்ணைகளை உருவாக்குதல்' என்பது ஒரு நூற்றாண்டாக அவர்கள் முன்வைக்கும் பரிந்துரை. இதைக் கேள்வி கேட்காமல், அரசுகளும் கடந்த 75 ஆண்டுகளாக இதற்கான முதலீடுகளைச்செய்துவருகிறார்கள்.
  • இந்தியாவில் சராசரி நில அலகு 2 ஏக்கர். அமெரிக்காவில் சராசரி நில அலகு 441 ஏக்கர். அமெரிக்காவில் இயந்திரமயம், அதீத வேதி உரங்கள், தனியார் முதலீடு எல்லாம் உண்டு. ஆனால், அங்கும் வேளாண்மை லாபகரமாக இல்லை என்பதுதான் உண்மை. இந்த உண்மையை வேளாண் அறிஞர்கள் சொல்வதே இல்லை. பலருக்குத் தெரியவும் தெரியாது என்பது ஒரு காவியச் சோகம்.

ஏன் வேளாண்மை லாபகரமாக இல்லை?

  • உலகெங்கும் வேளாண்மை பெரும்பாலும் உணவு உற்பத்தியைச் செய்கிறது. உணவு இறையாண்மை என்பதை எந்த நாடும் விட்டுக்கொடுப்பது இல்லை. முன்னேறிய நாடுகளில், வேளாண்மையில் ஈடுபட்டிருப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. (அமெரிக்காவில் 2% (60 லட்சம் பேர்). இந்தியாவில் 50% (65 கோடிப் பேர்) அமெரிக்காவைவிட நூறு மடங்கு அதிகம்). குறைவான எண்ணிக்கை என்பதால், முன்னேறிய நாடுகளில் வேளாண்மைக்கு அதிக மானியம் கொடுக்க முடிகிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு மானியம் கொடுப்பது சாத்தியம் இல்லை.
  • மேற்கத்திய நாடுகள் தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்திசெய்கிறார்கள். அவை பன்னாட்டுச் சந்தையில் வேளாண் பொருட்களுக்கான விலையைக் குறைவாக வைத்திருக்கின்றன. இன்று உலகின் பிரச்சினை உணவுப் பற்றாக்குறை அல்ல.
  • உணவுப் பொருள் விநியோகம். உலகின் அனைத்து நாடுகளும், சமூகப் பாதுகாப்புக்காக உணவு தானியத்தைக் குறைவான விலையிலோ, இலவசமாகவோ கொடுக்கின்றன. உற்பத்தி, நுகர்வு என இரு தளங்களிலும் கொடுக்கப்படும் மானியங்களால், வேளாண் தொழில், மற்ற தொழில்களைப் போல, ஒரு சுதந்திரமான பொருளாதாரச் செயல்பாடாக இல்லை. இருபுறமும் நசுக்கப்பட்டு, நிரந்தரமான நஷ்டம் என்னும் நிலையில் வேளாண் துறை மாட்டிக்கொண்டுள்ளது.

இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

  • சில மாதங்களுக்கு முன்பு, பசுமைப் புரட்சியையும், வெண்மைப் புரட்சியையும் ஒப்பிட்டு, மேலாண் சிந்தனையாளர் அருண் மைரா, 'தி இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

பசுமைப் புரட்சி

  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், பெரும் உணவுப் பற்றாக்குறை இருந்தது. அதை போக்க உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டியிருந்தது. நீர்ப்பாசனக் கட்டமைப்பு, வீரிய விதைகள், அடிப்படை விலை, அரசுக் கொள்முதல் என்னும் அணுகுமுறையைக் கையாண்டனர். 1969ஆம் ஆண்டு இந்திய உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தோம்.
  • இன்று உணவுப் பொருள் கொள்முதல்செய்ய இந்திய அரசு ரூ.1.80 லட்சம் கோடி செலவிடுகிறது. அதுவும் பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பெரும்பாலும் நிகழ்கிறது. இம்மாநிலங்களில், அரசு அரிசியை ரூபாய் 19.50 என்னும் விலையில் கொள்முதல்செய்கிறது. மானியக் கொள்முதல் கொள்கை இல்லாத பிஹாரில் அரிசி 10 ரூபாய்க்கு விற்கிறது.
  • 1950-களில் 5 கோடி டன்னாக இருந்த இந்திய உணவு தானிய உற்பத்தி, இன்று 30 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது 30,000 கோடி கிலோ. சராசரியாக தலைக்கு வருடம் 220 கிலோ உணவு தானியம் உற்பத்தி ஆகிறது. தேவைக்கு மிக அதிகம். 

வெண்மைப் புரட்சி

  • விடுதலைப் போராட்டக் காலத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் எனப் போராட்டம் எழுந்தது. அதன் விளைவாக ஒரு உழவர் உற்பத்தி நிறுவனம் உருவானது. அதன் பெயர் ‘அமுல்’. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களில், அரசு உருவாக்கிய பால் பண்ணைகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகையில், அமுல் மட்டும் லாபகரமாக, வெற்றிகரமாக நடந்து வந்தது.
  • இதை நேரில் கண்ட அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அமுல் மாதிரி உழவர் உற்பத்திசெய்து நேரடியாக, இடைத்தரகர் இல்லாமல், நுகர்வோரை அடையும் வணிகத்தை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உருவாக்கச் சொன்னார். அடுத்து வந்த பிரதமர் இந்திரா காந்தி அதற்கு உயிர் கொடுத்து, 'வெண்மைப் புரட்சி' என்னும் திட்டமாக உருவாக உதவினார். குரியன் அதைச் செயல்படுத்தினார். தமிழகத்தின் 'ஆவின்' உள்பட இந்தியாவெங்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் பிறந்தன. 
  • ஆனால், உணவுத் துறைபோலப் பெரும் மானியங்கள் பால் துறையில் இல்லை.

பசுமைப் புரட்சி X வெண்மைப் புரட்சி

  • பசுமைப் புரட்சி அரசு மானியம் மற்றும் கொள்முதலால் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதை நிறுத்தினால் இறந்துவிடும். ஏனெனில், அரசு மானியம் இல்லாமல், உணவு தானிய உற்பத்தி நஷ்டம் தரும் தொழில். வெண்மைப் புரட்சியில், பால் உற்பத்தியாளர்கள் தம் உற்பத்தியை நேரடியாக, தனியார் இடைத்தரகர் இல்லாமல் நுகர்வோரிடம் தங்கள் உற்பத்தியைக்கொண்டு சேர்க்கிறார்கள். இத்துறை உற்பத்தியாளர் லாபத்தை முக்கியமான குறிக்கோளாக முன்வைக்கிறது. எனவே, மிகக் குறைந்த மானியங்களுடன் இயங்குகிறது
  • வேளாண் பொருட்களில் பலவற்றுக்கும் (உணவு தானியம், சர்க்கரை, பால் முதலானவை) பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களுக்காக, நுகர்வோருக்கு பெரும் மானியத்தை அரசுகள் கொடுக்கின்றன. எனவே அவற்றின் விலை செயற்கையாகவே குறைவாக உள்ளது. இங்கே உற்பத்தியாளருக்கு ஓரளவு கட்டுபடியாகும் விலைக் கிடைக்க வேண்டுமெனில், உழவர்கள் தங்கள் உற்பத்தியை இடைத்தரகர்கள் எவருமின்றி நேரடியாக விற்பதன் மூலமே பெற முடியும். தமிழகத்தில் சில ஊர்களில் வெற்றிகரமாக இயங்கும் உழவர் சந்தைகள் மூலம், உழவர்கள் தங்கள் காய்கறிகளை நல்ல விலையில் விற்றுச் செல்வதைக் காண முடியும்.
  • வேளாண் துறையில், உற்பத்தியாளர், நுகர்வோர் – இந்த இருவருக்கிடையில் மூன்றாவதாக தனியார் முதலீட்டாளருக்கு இடமே இல்லை. அப்படித் தனியார் துறை இல்லாமல் தமிழகத்தில், ஆவின்போல, நெல் உற்பத்தியை நேரடியாகக் கொள்முதல்செய்து, அரிசியாக மாற்றி, நேரடியாக நுகர்வோர் வீடு சேர்க்கும் ஒரு நிறுவனம் இருந்தால், உற்பத்தியாளர், குறைந்தபட்சம் இன்றைய அரசுக் கொள்முதல் விலையைவிட, கிலோவுக்கு 3 ரூபாய் அதிகம் பெற முடியும். அரசுக்கும் கொள்முதல் மானியம் அளித்து, அதை வாங்கி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கும் பாரம் இருக்காது. எனவே, தனியார் துறை முதலீடு என்பது வேளாண்மைக்கு உதவியல்ல. அது உற்பத்தியாளர் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.
  • எடுத்துக்காட்டாக, கரோனா முடக்கத்தின்போது, தனியார் துறையினர் பால் கொள்முதலை வெகுவாகக் குறைத்தனர். தனியார் துறை கொள்முதல் செய்யாத பாலை ஆவின் கொள்முதல்செய்ய நேர்ந்தது. ஏனெனில், ஆவின், ஒரு முதலாளி லாபம் சம்பாதிக்க வேண்டும் என இயங்கும் தனியார் நிறுவனம் அல்ல. பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தி கொள்முதல்படுத்தப்பட வேண்டும் என்னும் நோக்கோடு இயங்கும் உழவர் நிறுவனம்.

ஆவின் X அமுல்

  • கரோனா காலத்தில், தனியார் துறை பால் கொள்முதலை நிறுத்திவிட, உற்பத்தியாளர் நலன்கருதி, ஆவின் கூடுதல் கொள்முதல்செய்ய நேரிட்டது. அதிகக் கொள்முதலை விற்பனைசெய்ய முடியாமல் ஆவின் திணறியது. அதேசமயம், அமுல் தனது விற்பனையை மிக எளிதாக, ரூ.53,000 கோடியில் இருந்தது ரூ.60,000 கோடியாக அதிகரிக்கப்போவதாகச் சொல்கிறது. இன்னும் 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியாகத் தன் வணிகம் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறது ஆனால், ஆவினோ ரூ.6-7 ஆயிரம் கோடி விற்பனைக்குத் திணறுகிறது.
  • அமுல் நிறுவனத்தில் 36 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளார்கள். ஆவினில் 22 லட்சம் உற்பத்தியாளர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆவினில் அரசியல் தலையீடு உண்டு. ஆளுங்கட்சியினர் இதில் தலைவர்களாக உள்ளார்கள். அமுலிலும் அப்படியே. அங்கே பாஜக.
  • ஆனால், ஒரு வேறுபாடு உள்ளது. முக்கியமான வேறுபாடு. அமுல் தொழில்முறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. அமுலின் மேலாண் இயக்குநர் ரூபிந்தர் சிங் சோதி, பால் துறை தொழில்நுட்பமும், மேலாண்மையும் பயின்றவர். கடந்த 41 வருடங்களாக அமுலில் பணிபுரிகிறார். அதற்கடுத்த நிலையில் இருக்கும் முக்கிய செயல் அலுவலர் ஜெயன் மேத்தா, கடந்த 31 வருடங்களாக அதில் பணிபுரிபவர். 
  • ஆனால், ஆவின் நிறுவனத்தில், அப்படி தொழில்முறைத் தலைவர்கள் இல்லை. இது ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் மாறிச் செல்லும் மனநிலைகொண்டவர்கள். நீண்ட கால நோக்கில், அவர்களால், ஒரு வேளாண் உற்பத்தியாளர் நலனை முன்வைத்து நிறுவனம் நடத்தும் மனநிலையில் இருப்பதில்லை. நல்ல ஐஏஎஸ் அதிகாரி இருந்தால், சில காலம் நன்றாக நடக்கும், இல்லையெனில் மீண்டும் தொய்வுறும். 
  • எனவே, ஆவினுக்குத் தேவை நீண்ட கால நோக்கில், பால் உற்பத்தியாளர் நலனை முன்னிறுத்தி, தொழில்முறை நிபுணர்களால் நடத்தப்படும் நிர்வாகம். ஆவின் நிறுவனம், பால் தவிர, வெண்ணை, பாலாடைக்கட்டி. ஐஸ்க்ரீம், இனிப்புகள், பால் பவுடர் என மதிப்புக்கூட்டும் பொருட்களில் பெருமளவு வணிகத்தைப் பெருக்கி தனது லாபகரத்தை அதிகரிக்க முடியும். அதன் விற்பனை 5 ஆண்டுகளில், 100% அதிகரிப்பது கடினமான இலக்கு அல்ல.
  • ஆவின் கிராமக் கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவு யூனியன், தலைமை அலுவலகம் முதலான இடங்களில், சேர்மனாக, தொழில்முறை அரசியல்வாதிகள் வருவதை விலக்க முடிந்தால் நல்லது. இல்லையெனில், 50% பதவிகளைப் பெண்களுக்கும், 25% பதவிகளை ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு யூனியனிலும், ஒருமுறை பெண், ஒருமுறை ஒடுக்கப்பட்டவர், ஒருமுறை மற்றவர்கள் என ஒரு விதியைக் கொண்டுவரலாம். பெண்கள்தாம் உண்மையில், குடும்பத்தில் எருமை மாடுகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். எனவே அவர்கள், கூட்டுறவு உற்பத்தி நிறுவனத்தில் தலைவர்களாக இருப்பது சரியானது.
  • திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், நுகர்வோர் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இது ஒரு மக்கள் நலன் நாடும் நடவடிக்கை. ஆனால், நீண்ட கால நோக்கில், ஆவினின் பொருளாதாரச் செயல்திறனைக் குறைத்துவிடும். இது போன்ற அரசு தலையீடுகளை (நல்ல நோக்கம் இருந்தாலும்) குறைத்துக்கொண்டு, ஆவினுக்கு ஒரு நல்ல நிர்வாகத்தை உருவாக்கி, அரசு, அதை தன் கட்டுப்பாட்டில் இருந்தது விடுதலை செய்துவிட வேண்டும். தமிழக வேளாண் துறைக்கு அரசுசெய்யும் மிக முக்கியமான நன்மையாக அது இருக்கும்.

வெள்ளை யானை

  • 1970-களில், புதிய வேளாண் முறைகளை உழவர்களுக்கு எடுத்துச்செல்ல, வேளாண் துறைப் பயிற்சிவழித் தொடர்புத் திட்டம் என ஒன்றை முன் வைத்தது. பல்வேறு பயிர்களிலும் அதிக உற்பத்தியைத் தரும் புதிய ரகங்களை தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியது. அன்று தமிழகத்தில் 70%க்கும் அதிகமானோர் வேளாண்மையை நம்பி இருந்தனர்.
  • ஆனால், இன்று தமிழகம் நாட்டிலேயே மிக அதிகமான நகர்மயமான மாநிலம். இன்று வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் 10%க்கும் குறைவானவர்களே. இன்று தமிழ்நாடு வேளாண்மையை நம்பியிருக்கும் மாநிலம் அல்ல. எனவேதான், தனியார் துறையை உள்ளே நுழைக்கும் மத்திய வேளாண் சட்டங்களுக்கு இங்கே எதிர்ப்பு பலமாக இல்லை.
  • இந்த நிதிநிலை அறிக்கையில் பேசப்படாமல் இருக்கும் ஒரு விஷயம், வேளாண் துறைக்கும், வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் செலவிடும் நிதி. இந்த நிதியின் பொருளாதாரப் பலன்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராயப்பட வேண்டியவை. இதைப் பற்றிய ஒரு புலனாய்வுத் தணிக்கை (forensic audit) செய்யப்பட்டு, அதன் பலன்களுக்கேற்ப வேளாண் துறை மறுசீரமைப்புசெய்ய வேண்டும். வேளாண் துறை மற்றும் மேலாண்மைத் துறையில் உலகின் மிகச் சிறந்த வல்லுநர் குழு ஒன்று இதற்காக அமைக்கப்படுவது நீண்டகால நோக்கில், வேளாண் துறைக்கு நன்மை பயக்கும்.

வேளாண் துறையில், தனியார் எங்கே வர வேண்டும்?

  • வேளாண் துறையில் மிக லாபம் கிடைக்கும் தொழில் என்னவென்றால், விதை உற்பத்தி. பெரும் தனியார் நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர் போன்றவர்கள் கனவிலும் நினைக்க முடியாத லாபம் இதில் உள்ளது.   தனியார் துறை விதை உற்பத்தி நிறுவனங்கள், விதைகளை, உழவர்களிடம் ஒப்பந்த முறையில் உற்பத்திசெய்து வாங்கிக் கொள்கிறார்கள். இங்கே உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. சாதாரணச் சந்தைக்கு உற்பத்தி செய்வதைக் காட்டிலும் 30-40% வரை அதிகம் கிடைக்கிறது
  • இந்திய அளவில், விதை உற்பத்தி என்பது ரூ.40,000 கோடி மதிப்புள்ள தொழில். தென் மாநிலங்களில், ஆந்திரா மற்றும் கர்நாடாகாவில், இந்த தொழிலில் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கொள்முதல்செய்து வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். தமிழ்நாட்டில், இது வளராததற்குக் காரணம் தேவையில்லாத நெருக்கடிகளும், ஊழலும் நிறைந்த வேளாண் துறையே.
  • தமிழக அரசு, அகில இந்திய அளவில் விதை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெரும் நிறுவனங்களுடன் நேரடியாகப் பேசி, அவர்களுடன் இணைந்து, தேவைப்பட்டால், முதலீடும் மற்றும் வசதிகள் என ஒரு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். இந்த முயற்சியை, தொழில் துறை முன்னெடுத்து, வேளாண் துறையின் உதவியோடு செயல்படுத்த வேண்டும். ஏனெனில், தொழில் துறைக்கு என்ன தேவை என்பதுபற்றித் தெளிவுகொண்ட அதிகாரிகள் வேளாண் துறையில் இல்லை.

இறுதியாக

  • வழக்கமாக வேளாண் துறையைப் பற்றிப் பேசும் போதெல்லாம், 'உழவர் இல்லையேல் உணவில்லை' என்பது போன்ற  சென்டிமென்ட்டுகளே முக்கியமாக இருக்கின்றன. இது போன்ற உணர்ச்சிப் பெருக்கைக் குறைத்துக்கொண்டு, சராசரி உழவர் என்பவர் 2 ஏக்கர் நிலம் என்னும் முதலீட்டை வைத்திருப்பவர். அந்த முதலீட்டுக்கு அவர் எப்படி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக எடுத்துக்கொண்டு, அதற்கான வழிமுறைகளை, உழவர் நலம் நாடும் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
  • வேளாண் துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் என்பவை எல்லாம் அதற்கு உதவிடும் நிறுவனங்கள்தான். அவையே பிரதானமல்ல. உழவர்கள் லாபம் பெரும் தேவைக்கேற்ப இந்த நிறுவனங்களை மாற்றியமைக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், வேளாண் துறையை அரசு அணுகும் முறையையே முற்றிலும் புதிதாக மாற்றி, புதிதாக யோசிக்க வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (27 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்