- காவிரிப் படுகை கடந்த அரை நூற்றாண்டாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் கலாச்சார மாற்றங்களுக்கும் ஆளாகிவருகிறது. வேளாண் கட்டமைப்பின் பலவீனம், சிறிதும் பெரிதுமான விளைநிலங்கள் என்று ஏகப்பட்ட காரணங்கள். ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் இப்படி இந்திய அளவிலான வேளாண் கொள்கையின் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா? இந்தத் திட்டங்களுக்கு ஏன் எதிர்ப்புக் கிளம்புகிறது? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- காவிரிப் படுகையில் 1985-லிருந்தே கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்துவருகிறது. தொடக்கக் காலங்களில் அதற்கு எதிராக மக்களிடம் பெரிய அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.
- அங்கொன்றும் இங்கொன்றுமாக எண்ணெய்க் கசிவு தொடர்பான பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன. இந்த எண்ணெய் எடுக்கும் பணிகளால் அதே பகுதியில் வசிக்கிற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித மாற்று வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை.
- குறிப்பாக, எண்ணெய் எடுப்புப் பணிகளில் பணியாற்றிவருகிற தொழிலாளர்களில் பலரும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தாலும்கூட குறைந்தபட்சப் பணிகளுக்காகத் தினக்கூலி அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
மீத்தேன் திட்டத்துக்குத் தடை
- 2010-ல் நிலக்கரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கு ஜிஇஇசிஎல் நிறுவனத்துடன் அன்றைய திமுக அரசால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோதுதான், காவிரிப் படுகையில் எண்ணெய் எடுப்புப் பணிகளை எதிர்த்து மக்களிடம் எதிர்ப்பலைகள் தோன்றின. அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் இந்தத் திட்டம் நல்ல திட்டம் என்றே கருதியது. திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதிக்காக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 2012-ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- அப்போது இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அறிவியல் அடிப்படையிலான விளக்கங்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் மக்களின் எதிர்ப்புக் குரல்கள் அதிகமாயின.
- மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும்கூட செப்டம்பர் 2012-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்துக்கான அனுமதியை வழங்கியது. அதன் பிறகு, இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் தன்னைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டார். அவர் எழுப்பிய குரலோடு அனைத்து அரசியல் கட்சிகளின் குரல்களும் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.
- அதன் விளைவாக, ஜூலை 2013-ல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மன்னார்குடி மீத்தேன் திட்டத்துக்கு இடைக்காலத் தடையை அறிவித்ததோடு, அதைக் குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவையும் நியமித்தார்.
- ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் முன்னணி அறிவியல் ஆய்வாளர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், செப்டம்பர் 2015-ல் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆட்சியர்கள் மூலமாக இந்தத் திட்டத்துக்கு நிரந்தரத் தடையும் விதித்தார்.
- அதன் பின்னர், இன்று வரை மேற்கண்ட திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தஞ்சையில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஜிஇஇசிஎல் நிறுவனம் தனது அலுவலகத்தை மூடியதும் குறிப்பிடத்தக்கது.
‘ஃப்ராக்கிங்’ ஒரு சர்வதேசப் பிரச்சினை
- 2016-ல் மத்திய அரசு எண்ணெய் எடுப்புக் கொள்கையில் கொண்டுவந்த மாற்றங்களின்படி, ஏற்கெனவே காவிரிப் படுகையில் நடைமுறையில் இருந்த மரபுசார்ந்த கச்சா எண்ணெய் எடுக்கும் முறையோடு, மரபுசாராத் திட்டங்களாகிய நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷெல், டைட் கேஸ் ஹைட்ரேட் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் வகையில் ஒற்றை அனுமதி முறையை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ‘ஃப்ராக்கிங்’ (Fracking) முறையில் இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், இப்பகுதி மக்களிடம் அச்சம் அதிகமானது.
- ‘ஃப்ராக்கிங்’ என்பது படிமப் பாறைகளின் அடர்த்தி காரணமாக வெளியேற இயலாத எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை ஒருங்கிணைக்க நீர், வேதிப்பொருட்கள், மணல் சேர்த்த கலவைகளை அதிக அழுத்தத்தில் பூமிக்கு உள்ளே செலுத்தி, அவற்றை ஒருங்கிணைக்கச் செய்வதாகும். இந்தச் செய்முறைக்கு சுமார் 15 முதல் 20 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். இந்தத் திட்டத்தில் ‘ஃப்ராக்கிங்’ முடிந்த பிறகு உள்ளே செலுத்தப்பட்ட நீரில் 60% வெளியே வரும். உள்ளே செலுத்தப்பட்ட வேதிப்பொருட்களும் வெளியேறுவதால் காற்று, நீர், நிலம் உள்ளிட்டவை மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃப்ராக்கிங் தொழில்நுட்பத்துக்கு எதிரான குரல் ஏதோ காவிரிப் படுகை மக்களின் குரல் மட்டுமல்ல; அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகெங்கும் உள்ள பெரும்பாலான நாடுகளில் ‘ஃப்ராக்கிங்’ எனப்படும் நீரியல் விரிசல் முறைக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
- கனடா நாட்டின் பிரிட்டிஷ்-கொலம்பியா பகுதியில் ஸ்கீனா, நாஸ், ஸ்டிகைன் நதிகள் உருவாகும் பகுதி அதிக அளவில் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகக் கருதப்படுகிறது.
- அந்தப் பகுதியில் 5 ட்ரில்லியன் கன அடிகள் (மன்னார்குடி பகுதியைப் போல் 5 மடங்கு) மீத்தேன் கண்டறியப்பட்டு, ஷெல் கனடா நிறுவனத்துக்கு 2008-ல் ஏலம் விடப்பட்டது. ‘ஃப்ராக்கிங்’ முறையால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், நன்னீர் மற்றும் கடல்நீரில் உயிர் வாழக்கூடிய சால்மன் மீன்களின் இனப்பெருக்கம் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனடியாக அத்திட்டம் அரசால் 5 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 2012-ல் ஷெல் கனடா நிறுவனமே தானாக முன்வந்து அத்திட்டத்திலிருந்து வெளியேறியது.
- நீரியல் விரிசல் முறைக்கு எதிராக அமெரிக்காவில் ‘ஃப்ராக் ஆக்ஷன்’, ஐரோப்பாவில் ‘ஃப்ராக் ஆஃப்’, ஆஸ்திரேலியாவில் ‘லாக் தி கேட்’ போன்ற நூற்றுக்கணக்கான அமைப்புகள் போராடிவருகின்றன.
- இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலிலும்கூட ‘ஃப்ராக்கிங்’ முறை ஒரு விவாதப் பொருளாக இருக்கிறது. ஆனால், சர்வதேச அளவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு தொழில்நுட்பத்தின் பாதிப்புகளைப் பற்றி நம்முடைய மத்திய அரசு கணக்கில்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 1, 2018-ல் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் 2016-க்கு முன்னதாக அனுமதி அளிக்கப்பட்ட எண்ணெய் வயல்களுக்கும் ஒற்றை உரிமம் பொருந்தும் என்ற முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
- இந்த நிலையில்தான், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக முதல்வர் தனது உரையில் அறிவித்துள்ளார். மிகுந்த வரவேற்புக்குரிய இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேசமயம், எதிர்காலத்திலும் தொடரத்தக்க பாதுகாப்பாக இது அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
- இனிவரும் காலங்களில் இங்கே, இத்தகு எரிபொருள் திட்டங்கள் தொடங்கப்படக் கூடாது என்பதோடு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளின் செயல்பாடு களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால், ஒற்றை உரிம முறைக்கு மாற்றப்பட்டிருப்பதன் மூலம் கச்சா எண்ணெய் எடுப்புப் பணியோடு மரபு சாராத் திட்டங்களையும் ‘ஃப்ராக்கிங்’ முறையில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.
சர்வதேச முன்னுதாரணமாவோம்
- ஓர் உதாரணமாக, ஓஎன்ஜிசி கடந்த ஆண்டில் திருவாரூர் மாவட்டம் பெரியக்குடி மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாரங்களில் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அங்கு டைட் கேஸ் எடுப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கும் விண்ணப்பித்துள்ளது.
- அதில், ‘ஃப்ராக்கிங்’ முறையில் எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- எண்ணெய் நிறுவனங்களின் இந்நடவடிக்கைகள், காவிரிப் படுகை மக்களுக்கு ஒரு தொடர் அச்சத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.
- ஆகவே, தமிழக முதல்வரின் அறிவிப்பு, இப்படி ஃப்ராக்கிங் முறையிலான எரிபொருள் எடுப்பு உள்ளிட்ட பகாசுரத் திட்டங்கள் எதுவுமே எதிர்காலத்தில் இங்கே நுழைய முடியாததற்கான சட்ட முன்னெடுப்பாக அமைய வேண்டும்.
- அது சர்வதேச அளவில் ஒரு முன்னுதாரணமாக அமையும். இன்றைக்கு மட்டுமல்லாது, காவிரிப் படுகை என்றைக்கும் தமிழகத்தின் உணவுக் களஞ்சியமாகத் திகழ அதுவே வழிவகுக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18-02-2020)