TNPSC Thervupettagam

வேளாண் மண்டலம் தேவை முழுமையான பாதுகாப்பு

October 20 , 2023 433 days 778 0
  • அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22இல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது. இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா’ 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இம்மசோதாவில் இரண்டு முக்கியத் திருத்தங்களை டெல்டா எதிர்பார்த்தது: 1. செயல்படுத்தக் கூடாத திட்டங்கள் பட்டியலில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைச் சேர்ப்பது; 2. டெல்டாவின் விடுபட்ட இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்ப்பது. இதற்கிடையே, டெல்டாவின் ஒரு பகுதியாக உள்ள அரியலூர் மாவட்டத்தில், காட்டகரம் (2), குறுங்குடி (1), குண்டவெளி (3), முத்துசேர்வமடம் (4) என 10 இடங்களில் எண்ணெய்-எரிவாயு உற்பத்திக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, ஓஎன்ஜிசிநிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் 2023 ஜூன்15 அன்று விண்ணப்பித்தது.
  • இதற்கு மக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து, 2023 ஜூன் 30அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு எழுப்பிய குரல்

  • அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பிப்ரவரி 2020இல் வெளியிட்ட அறிக்கையில், ‘அரியலூர் பகுதிகளில் 70% மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக விவசாயம், அதனுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • காவிரி நதிநீர் மூலம் தா.பழூர், திருமானூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 10,389 ஹெக்டேர் (25,671 ஏக்கர்) அளவுக்கு விவசாயம் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் நெல் பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காததால் பல பாதிப்புகள் வரும்’ என்று தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் கடிதம்

  • 2020இல் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டாபகுதிகளான அரியலூர், திருச்சி, கரூர் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்குத் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன், மசோதாவில் தேவைப்படும் பல்வேறு மாற்றங்கள் குறித்தும் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.
  • இந்நிலையில், ஏப்ரல் 2023இல் தமிழ்நாட்டின் மூன்று நிலக்கரிப் படுகைகளை ஏலம் விடுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில் தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியிலும் அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பகுதியிலும் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க விலக்கு கோரினார்.
  • மேலும், வேளாண் மண்டலச் சட்டத்தின் பிரிவு 4(1) இன்கீழ், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் யாரும் மேற்கொள்ளக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த இரண்டாவது அட்டவணையில் உள்ள திட்டங்களில் நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு, பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்பட இயற்கை எரிவாயு ஆய்வு, துளையிடுதல், எண்ணெய் பிரித்தெடுத்தல் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதில் மிக முக்கியமான ஒன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்குத் தடை இல்லாதது.

ஏமாற்றம் தந்த மசோதா

  • இத்தகைய சூழலில், சட்டமன்றத்தில் அக்டோபர் 11 அன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நாகை மாவட்டத்தின் ஒரு பகுதியாக - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இருந்த - மயிலாடுதுறை பகுதி, 2022இல் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டது.
  • புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை மசோதாவில் இணைப்பது, வேளாண்மை என்ற சொல்லின் வரம்புக்குள் உள்நாட்டு மீன்வளம்-கால்நடைப் பராமரிப்பு என்பதைச் சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட - நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தடை விதிப்பது, அரியலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டாபகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இணைப்பது ஆகியவை சட்டத்திருத்தத்தில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
  • கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாவின் முக்கிய அம்சம் - தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு ஆணையம். முதலமைச்சர் தலைமையிலான இந்த ஆணையத்தின் கூட்டம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை கூட்டப்பட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டமே நடைபெறாத சூழலில், திமுக ஆட்சியில் கடந்த மே 2022இல் முதலமைச்சர் தலைமையில் கூடியது; அதன் பிறகு இதுவரை கூட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
  • 2020 அக்டோபர் 7 அன்று மாநில வேளாண் துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வேளாண் துறை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்துக்காக வேளாண் பொறியியல், வேளாண் விற்பனைத் துறைகளுடன் கலந்தாலோசித்து, ஆண்டுதோறும் விரிவான திட்டத்தைத் தயாரித்து மார்ச் 31-க்கு முன்னர் மாநில ஆணையத்திடம் வழங்க வேண்டும்.
  • மேலும், வேளாண் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் மேம்பாடு தொடர்பாக ஜூன் 30 - டிசம்பர் 31இல் நிறைவடையும் ஒவ்வொரு அரையாண்டுப் பணி முன்னேற்ற நிலை அறிக்கையும் வேளாண் துறை சார்பாக வழங்கப்பட வேண்டும். மிகவும் முக்கியமான இத்தகைய செயல்பாடுகளை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு செய்ய வேண்டியவை

  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவின் இரண்டாவது அட்டவணையில் உள்ள தடைவிதிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலில், திட்டங்களைச் சேர்க்கவோ விடுவிக்கவோ, மாநில ஆணையம் அரசுக்குப் பரிந்துரைக்கலாம். அத்தகைய செயல்பாட்டில் ஆணையத்துக்கு உதவிசெய்ய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
  • மாநில வேளாண் செயலாளர் தலைவராகச் செயல்படும் அக்குழுவில், தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த 7 உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். அத்தகைய குழு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றியும், அப்படி இருந்தால் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்குத் தடை எதுவும் மசோதாவில் இல்லாத சூழலில், இது குறித்து தொழில்நுட்பக் குழு எடுத்த முடிவு குறித்தும் அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனவரி 2022 இல் மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளையில், மூன்று விவசாயப் பிரதிநிதிகள் மாநில ஆணையத்தில் இடம்பெற வேண்டும். அவர்களுக்குப் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. அது குறித்து மாநில அரசு கருத்து தெரிவிக்க வேண்டும்.
  • மாநில ஆணையத்துக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரால் நியமிக்கப்படும் இரண்டு விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. ஆனால், இதுவரை இது நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை.
  • காலநிலை-அரசியல் காரணங்களால் இந்த ஆண்டு, காவிரியின் நீர் உரிமை மட்டுமல்லாது விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருள்களைக் கொண்டு, நில வளத்தையும் நீர் வளத்தையும் பாதிக்காத வண்ணம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்தொழிலகங்கள் உருவாக்கப்படுவது டெல்டாவின் தேவை.
  • காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில், கட்சிப் பாகுபாடு இல்லாமல், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, தேவையான மாற்றங்களையும் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படும். டெல்டா பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் அதனைச் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்