TNPSC Thervupettagam

வையத் தலைமை கொள்ளும் இந்தியா!

November 2 , 2024 64 days 91 0

வையத் தலைமை கொள்ளும் இந்தியா!

  • ஒரு தேசத்தின் வளர்ச்சியும் அதன் வெளியுறவுக் கொள்கையும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையும் தீர்மானிப்பவையும் ஆகும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கொண்ட பயணங்கள் இதை உறுதி செய்கின்றன.
  • ரஷியாவின் கசானில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த உச்சி மாநாடு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
  • மேற்கு ஆசியா, ரஷியா, தைவான் கடல் பகுதியில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதில் ஈடுபட்டுள்ள நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் உச்சிமாநாடு உலகின் கவனத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் மோதல் போக்கைக் கொண்டுள்ள நாடுகள் மேற்குலக நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பும் உலகமறிந்தவை.
  • சர்வதேச நிதி நிறுவனங்களின் மீது மேற்குலக நாடுகள் கொண்டிருக்கும் மேலாதிக்கத்துக்கு எதிரானதாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகிறது. இது பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அமைப்பு என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் மேற்கத்திய ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
  • இந்தியாவின் பார்வையில், ரஷியா, சீனா மற்றும் ஈரானுடனான பேச்சுகள் உலகில் அமைதியைப் பேணுவதற்கும், பேச்சுவார்த்தைமூலம் மோதல்களைத் தீர்ப்பதற்குமான முயற்சியாக அமைந்தது. சீனாவும் ரஷியாவும் பிரிக்ஸ் உறுப்பினர்கள். இந்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு மோதலாக மாறியிருக்கிறது. ரஷியாவுடன் இந்தியா நல்ல உறவைப் பேணும் நிலையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது. எல்லைப் பிரச்னை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கையாள வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சி இந்திய ராஜதந்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தீர்க்க இயலாத பிரச்னைகள் பல காலமாக நிலுவையில் உள்ளன என்றாலும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு வெளியே நடைபெற்ற கூட்டங்கள் மேற்கத்திய நாடுகளைச் சிந்திக்க வைக்கும் அளவில் அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை.
  • ஈரானின் புதிய அதிபர் மஹ்மூத் பெசெஷ்கியானையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேற்கு ஆசியாவில் நிலவும் கொந்தளிப்பான நிலை மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் கடுமையான தாக்குதல் என் மோசமான சூழ்நிலையில் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தக் கிடைத்த தருணமாகவும் இது அமைந்திருந்தது.
  • ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடும் அமைதிக்கான முயற்சியும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் தொடர்ந்ததை மேற்குலகம் புரிந்து கொண்டிருக்கும்.
  • பிரிக்ஸ் மாநாட்டின் முதன்மை நோக்கம் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நிதிக் கட்டமைப்பைத் தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதாக இருக்கிறது. இதனால் மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. இந்தப் பின்புலங்களைப் புரிந்து கொண்டால் இந்தியாவின் நிலைப்பாடு, அதன் வெளியுறவுக் கொள்கையின் மேன்மை, அதனால் நாம் அடையும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளலாம்.
  • பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இத்தாலி பயணம் மேற்கொண்டதுடன் ஜூலை மாதத்தில் ரஷியா சென்று அதிபர் விளாதிமீர் புதினுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆகஸ்ட் மாதத்தில் உக்ரைன் சென்று அமைதிக்கான முயற்சியை மேற்கொண்டார். செப்டம்பரில் அமெரிக்க பயணத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கு கொண்ட க்வாட் மாநாட்டில் கலந்து கொண்டார். அக்டோபர் மாதத்தில் மீண்டும் ரஷியா பயணம், பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் அதனுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு இரு தரப்புப் பேச்சுவார்த்தை என்று தொடர் அரசுமுறைப் பயணங்கள் மேற்கொண்டார்.
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி உரையாடலை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனம் மற்றும் ஈரானின் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவின் நட்புறவை இவர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தாண்டி நமது நாட்டின் உதவியை நாடுகிறார்கள்.
  • இப்படி இந்தியாவை வரவேற்கும் நாடுகளின் பட்டியலைப் பார்த்தாலே உலக நாடுகளுடன் இந்தியா பேணிவரும் நட்புறவைப் புரிந்து கொள்ளலாம். இந்தியா வேறுபட்ட சக்திகளை, குறிப்பாக மேற்கு நாடுகள் மற்றும் பிற நாடுகளை சமநிலைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள முயற்சிப்பது தெளிவாகும். இதனால், உலக அமைதியில், வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
  • ரஷியா நம்முடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடு. அதே சமயத்தில் உக்ரைனும் நமது நட்பு நாடே. இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த சிரமமும் நமக்கு இல்லை. அதுபோலவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளின் வளர்ச்சிப் பணிகளில் நம்முடைய பங்கு இருக்கிறது. அதனால் இருவரும் நம்முடன் முரண்பட விரும்பமாட்டார்கள். இந்தியா கணிசமான பங்குகளை வைத்திருக்கும் ஈரானில் உள்ள சாபஹார் மற்றும் இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகங்கள் முரண்பாடுகளை நிர்வகிக்கும் நமது ஆற்றலை வெளிப்படுத்தும் அடையாளங்கள் எனலாம்.
  • சமீபத்திய எடுத்துக்காட்டாக கனடா-இந்தியா பிரச்னை இருக்கிறது. நேருக்கு நேர் இந்தியாவைக் குற்றம் சுமத்திய கனடா தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் கருதி இந்தியாவை நோக்கி ஒரு குரலும் எழவில்லை.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கு முக்கியக் காரணமாகும். 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிய ஜிடிபி மற்றும் 7 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதத்தால் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ள இந்தியாவுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக உறவு கொள்ள விரும்புகின்றன. மனித வளம், பாதுகாப்பான சூழல் போன்ற காரணங்கள் இந்தியாவை நோக்கி பிற நாடுகளை ஈர்க்கின்றன.
  • உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு சுமுகமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதால் சீனாவைப் போன்ற வலிமை மிக்க நாட்டுடனும் எந்த சமரசமும் இன்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான துணிவு ஏற்படுகிறது.
  • இந்தியா-சீனா உறவை எச்சரிக்கையுடன் மறுபரிசீலனை செய்யும் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை மேற்கொண்டார். எல்லைப் பிரச்னை பற்றிய இரு தரப்புப் பேச்சுவார்த்தை, நான்கு ஆண்டுகால கடுமையான மோதலைத் தவிர்த்து நம்பிக்கைக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு அமைந்திருந்தது. படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்படுவது என்ற அமைதி இலக்கை அடைய இன்னும் நீண்ட காலம் ஆகலாம். ஏனெனில் டோக்லாம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் பெய்ஜிங்கின் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
  • தற்போதைய நிலையில் பிரிக்ஸ் நாடுகளைப் பொருத்தவரை, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறிய சமாதானமும்கூட மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசிய நாடுகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியது.
  • அமைதியை விரும்பும் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொருளாதார ரீதியாக, பிரிக்ஸ் அமைப்புக்குள் வலிமையான அந்தஸ்து கொண்ட நாடாக இருக்கிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து, அதை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் விற்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, வளர்ச்சியில் கவனம் செலுத்துவது உலகளாவிய லட்சியத்துக்கு முக்கியமானது.
  • உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியா, அதைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறது? தன்னை வளர்த்துக் கொள்வது மட்டுமே அதன் நோக்கமா? நடந்துவரும் போர்களின் இடையே ஆதாயம் தேடுவதா? அல்லது அமைதியை ஏற்படுத்துவதா?
  • நமக்கு மற்ற நாடுகளுடன் முரண்பாடுகள் இருக்கலாம்; ஆனால், பகை இல்லை. நட்புறவு இருக்கிறது என்பதற்காக யாருடனும் அணி சேரவில்லை. ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவின் தலைமைத்துவம் உயரும் என்பதை மனதில் கொண்டு ஆசிய நாடுகளின் முன்னேற்றம் அதன் வழியே இந்தியாவின் உயர்வு என்பதே நமது நிலைப்பாடு.
  • அனைவருடனும் நட்பு, அமைதியான உலகம் இதுவே இந்தியாவின் விருப்பம். இந்தியா உலகுக்கு நண்பனாக இருக்கிறது என பிரதமர் இந்தியாவை "விஸ்வமித்ர' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்குலக நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில், அதாவது இரு வேறு துருவங்களாக நிற்கும் மேலை நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 நாடுகளுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையில் பாலமாக இருந்து அமைதியான நல்லுறவை எந்தப் பாகுபாடும் இன்றி ஏற்படுத்துவதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என்று நம் நாட்டின் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தினார்.
  • நடுநிலைமை என்பதைத் தாண்டி, அமைதிக்கான, வளர்ச்சிக்கான செயல்திறன் கொண்ட நாடாக பிணக்குடன் போர் புரிந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஸ்திரமான சேவையை இந்தியாவால் தர முடியும் என்ற வலிமையான இடத்தை இந்தியா தனது உள்நாட்டு வளர்ச்சியாலும் வெளியுறவுக் கொள்கையாலும் அடைந்துள்ளது.

நன்றி: தினமணி (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்