TNPSC Thervupettagam

வையத் தலைமை கொள்வோம்

December 22 , 2022 681 days 397 0
  • உலகின் முக்கிய வளர்ச்சியடைந்த - வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி20 ஆகும். இந்த அமைப்பின் மாநாட்டை அடுத்த (2023) ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா நடத்த உள்ளது. இது இந்தியர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க செய்தியாகும்.
  • ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஜி20 அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பின் தலைமைப் பதவி ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
  • இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 1 முதல் 2024 நவம்பர் 30 வரை இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் மாநாடு முதல் முறையாக இந்தியாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
  • தனது தலைமையில் கூட்டமைப்பு இயங்கக்கூடிய அடுத்த ஓராண்டுக்கு 200 மாநாடுகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் சிறப்புக்குரியது, அடுத்த ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாடாகும். இதற்கான ஜி20 தலைமைத்துவ இலச்சினை, கருத்துரு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதோடு, இணையதளத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார்.
  • பொதுவாக எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறுகிறதோ அந்த நாட்டுக்கு ஜி20 அமைப்பின் தலைமைப் பதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. தொலைநோக்குப் பார்வையோடு இந்த ஜி20 உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, உலக அளவிலான அமைப்புக்குத் தலைமை வகிக்கும் வகையில் உருவாகியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
  • சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் உலக அளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகள் சார்ந்த சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். இது இந்தியாவின் சாதனைக்கான முக்கியத் தருணமாக பார்க்கப்படுகிறது.
  • இந்தத் தருணத்தில் உலகம் மிகப்பெரும் சிக்கல்களையும், சறுக்கல்களையும் எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல், உக்ரைன் - ரஷியா இடையிலான போர், பொருளாதார நெருக்கடி ஆகியவை உலக நாடுகளை அச்சமூட்டுகின்றன. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் "ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய பிரச்னைகள் குறித்து, குறிப்பாக உணவு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பரிமாற்றம் இவை குறித்து ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் விரிவாக ஆலோசித்தார்கள்.
  • அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை வழிநடத்தும் தலைமைப்பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம், கூட்டமைப்பு நாடுகள், தங்களுடைய வர்த்தகம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து ஏனைய நாடுகளுடன் விவாதித்துக் கூட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும். இக்கூட்டமைப்பில் வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் இணைந்து மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பருவநிலை மாற்றம், எரிசக்தித்துறை, எதிர்பாராது உருவாகும் அசாதாரண சூழ்நிலை இவற்றைக் குறித்து விவாதிப்பதற்கும் மிகச்சிறந்த களமாக உருவாகியுள்ளது.
  • இந்தோஷியாவில் நடைபெற்ற இரண்டு நாள் உச்சி மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதனை உலக நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், அம்மாநாட்டில், இன்று மிக முக்கிய பிரச்னைகளாக உள்ள பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி இவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வரை பல்வேறு கருத்துருக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. நாளுக்கு நாள் உக்ரைனில் ஏற்படும் மாற்றம், அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்னை இவை அனைத்தும் உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சர்வதேச விநியோக சங்கிலி அழிந்து வருகிறது.
  • அதனால், அத்தியாவசியப் பொருள்களுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்ந்து மோசமாகி வருகின்றன. ஏற்கெனவே, அன்றாட வாழ்வு அவர்களுக்கு போராட்டம் நிறைந்தது. மேலும் மேலும் சோதனைகளை எதிர்கொள்ளும் திறன் அவர்களிடம் இல்லை.
  • ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும், இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ள நாம் தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர நாம் அனைவரும் தவறிவிட்டோம். எனவே, ஜி20 மாநாட்டின் நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது.
  • இதனைத்தான் இந்திய பிரதமர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் குறிப்பிட்டார். அக்கருத்தை முக்கியமான ஒன்றாக நாம் பார்க்கலாம்.
  • கொள்ளை நோய்த்தொற்றின்போது தனது 1.3 பில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது இந்தியா என்பது மிக முக்கியமான செய்தியாகும். அதே நேரத்தில், பல்வேறு நாடுகளுக்கும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளை உணவுதட்டுப்பாட்டுக்கு வித்திட்டு விடும். இது நடக்கும்போது இதற்கான தீர்வு உலகநாடுகளிடம் இருக்காது.
  • ஆக, உணவு மற்றும் உணவுத்தானியங்களின் விநியோக சங்கிலியை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகளை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பிற்காக இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, சிறுதானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க, பாரம்பரிய உணவு தானியங்களையும் மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.
  • உலகளாவிய அளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு, பசி ஆகிய பிரச்னைகளுக்கு சிறுதானியங்கள் தீர்வாக அமையும் என்று இந்திய பிரதமர் அந்த மாநாட்டில் பதிவு செய்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றது.
  • ஜி20 கூட்டமைப்பின் முதல் மாநாடு கிழக்காசிய நாடுகளில் பெரும் நிதி நெருக்கடி இருந்த சமயத்தில் நடத்தப்பட்டது. நிதி நெருக்கடி உலகம் முழுவதும் சிறிய பொருளாதார பின்னடைவை உண்டாக்கியது. அதனால் முதல் ஜி20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜி20 மாநாட்டை ஜி8 நாடுகளின் விரிவாக்கம் என்றே சொல்லலாம். உலகின் வளர்ந்த நாடுகள், உலகில் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கியதுதான் இந்த ஜி20.
  • தொடக்கத்தில் இந்த ஜி20 மாநாடுகளில், உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் ஆகியோர்தான் சந்தித்து வந்தார்கள். ஆனால், 2008-இல் ஏற்பட்ட பொருளாதார சரிவிற்குப் பின் ஜி20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைத்து பெரிய தலைவர்களும் சந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஜி20 மாநாடுகளின் முக்கியத்துவத்தைத் தலைவர்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
  • நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களைப் பேசுவதோடு நின்று விடாமல், உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கேட்டுப் பெறுவதே இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக அமைந்தது.
  • எரியும் வர்த்தகப் போர், பருவநிலை மாற்றம், ஈரான் நாட்டுடனான உறவு, உலகப் பொருளாதாரம் இவை குறித்து மிக முக்கியமாக இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஜூன் மாதம் முதல் 3 விழுக்காட்டில் இருந்து 1.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • பணவீக்கம், வட்டிவிகித உயர்வு, கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. டாலர் மதிப்பீட்டு பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா ஜப்பான் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. இவை, பிரிட்டன் ஆட்சி மாறி, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 7.7சதவீதமாக சரியும் என பொருளாதார கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதற்கு வட்டிவிகிதங்களின் அதிகரிப்பும், சமச்சீரற்ற பருவநிலையும், சர்வதேச வளர்ச்சியின் மந்த நிலையும் மிக முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. இவை குறித்து வருகின்ற ஜி20 மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினமணி (22 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்