TNPSC Thervupettagam

ஷேன் வார்னேவின் மறைவு குறித்த தலையங்கம்

March 8 , 2022 881 days 411 0
  • கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சோகமான நாளாகும். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ராட்னி மார்ஷ் (74) காலமானார்.
  • அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னேயை அடுத்த 12 மணி நேரத்துக்குள் காலன் கபளீகரம் செய்து விட்டான் என்பதுதான் மிகப் பெரிய சோகம். தாய்லாந்தில் உள்ள சுற்றுலாத் தீவான கோ சாமுயில் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார்.
  • சாதனை மேல் சாதனை படைத்த வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கை சோதனையுடன்தான் தொடங்கியது.
  • 7 முதல் தர ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்ற நிலையில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
  • இந்தியாவுக்கு எதிராக 1992-இல் சிட்னியில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது டெஸ்டில் அறிமுகமான அவர் 150 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.
  • அடிலெய்டில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் விக்கெட் எடுக்காததால் நீக்கப்பட்டார்.
  • ஆனால், மீண்டும் அணியில் இடம்பிடித்த அவருக்கு அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் திருப்புமுனையாக அமைந்தது. 52 ரன்களுக்கு 7 விக்கெட் சாய்த்து ஆட்ட நாயகன் ஆனார். அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.
  • ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 1993-இல் களம்கண்டார். ஓல்ட் டிராஃபர்டில் நடைபெற்ற டெஸ்டில் தான் வீசிய முதல் பந்திலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
  • இங்கிலாந்தின் மைக் கேட்டிங் அவரது பந்துவீச்சை எதிர்கொண்டார். லெக் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து, மைக் கேட்டிங் கண்ணிமைப்பதற்குள் அற்புதமாக சுழன்று ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது. கேட்டிங் ஆச்சரியத்தில் உறைந்தார். அந்தப் பந்து "பால் ஆஃப் தி செஞ்சுரி' என்று புகழ்பெற்றது.
  • அதன் பின்னர், உலகின் தலைசிறந்த பேட்டர்கள் பலரையும் இதுபோன்று அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
  • 1999-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு வார்னேவும் ஒரு காரணம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 213 ரன்கள் மட்டுமே எடுத்தபோதும், வார்னே 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் சாய்க்க ஆட்டம் "டை' ஆனது. ரன் ரேட் விகிதத்தால் ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
  • இறுதி ஆட்டத்தில் வார்னே 4 விக்கெட் சாய்க்க, பாகிஸ்தான் 132 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா எளிதாக வென்றது. இரு ஆட்டங்களிலும் வார்னேதான் ஆட்ட நாயகன்.

மறைந்​து‌ம் மறை​யாத...

  • 1877 முதல் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளில் இருவர் மட்டும்தான் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் வார்னே (1001 விக்கெட்); மற்றவர் இலங்கையின் முரளீதரன் (1347 விக்கெட்).
  • இதிலிருந்தே அவரது சிறப்பை அறிய முடியும். டெஸ்ட் ஆட்டங்களில் முரளீதரன் 800 விக்கெட்டுகளையும், வார்னே 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் 2007 முதல், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைக்கு வார்னே - முரளீதரன் டிராபி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • கிரிக்கெட்டின் பைபிள் என்று கருதப்படும் "விஸ்டன்' இதழ் வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களுள் ஷேன் வார்னே ஒருவர்தான் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் சர் கேர்பீல்ட் சோபர்ஸ் (ஆல்ரவுண்டர்), சர் விவியன் ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்தின் சர் ஜாக் ஹாப்ஸ் ஆகியோர் விஸ்டன் பட்டியலில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் ஆவர்.
  • 1997 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் விஸ்டனின் அந்த ஆண்டின் சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வார்னேவை "ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்த்து கெளரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
  • 2008-இல் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
  • அவரது பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக எதிர்கொண்டு விளாசியுள்ளார். அதே போன்று, அவரது பந்துவீச்சை யார் சிறப்பாக எதிர்கொண்டாலும் அவர்களைப் பாராட்டும் குணம் கொண்டவர்.
  • 2013-இல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகிய வார்னே, வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
  • ஓர் ஆட்டத்துக்கு முன்பாக ஆடுகளம் குறித்து சூதாட்ட முகவருக்குத் தகவல் அளித்து பணம் பெற்றதாக வார்னேவுக்கும், மார்க் வாஹ்வுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது.
  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியானதால் 2003 உலகக் கோப்பை போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது போன்ற சர்ச்சைகளுக்கு ஆளானார்.
  • "வார்னே இறந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது' என்று விவியன் ரிச்சர்ட்ஸ் பதிவிட்டார்.
  • "வார்னே காலமானது அதிர்ச்சியில் உறையும் வகையிலான துயரமான செய்தி. அவர் என்றும் நினைவில் இருப்பார்' என்று சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை வசீகரித்த வார்னே அகால மரணமடைந்தாலும், டெண்டுல்கர் கூறியதுபோல கிரிக்கெட் விளையாடப் படும் வரை ரசிகர்களின் நினைவில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (08 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்